தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 2 ] – T.சௌந்தர்

Shakunthala_1940_filmபெரும்பான்மை மக்களால் விரும்பபட்ட தெருக்கூத்துக்களிலும் , நாடகங்களிலும் பல் வகை இசைகள் பயன்பட்டு வந்திருக்கின்றன.எத்தனையோ தலைமுறை வாழ்க்கை அனுபவங்களால் மக்களின் அகமனத்தில் ஊறிய இசை வடிவங்களை நாடகங்களிலும் , பின் வந்த , நவீன கலைவடிவமான சினிமாவிலும் கேட்டு களிப்புற்றார்கள்.அதன் உயிர்ப்பகுதியாக நாட்டுப்புற இசை எல்லையற்ற ஆனந்தம் வழங்கியது.அவை உற்சாகம் ஊட்டுபவையாகவும் ,அவற்றின் தனித்தன்மை , மக்கள் சிந்தையில் பொதிந்த நகைசுவை உணர்வு பாடல்களிலும் பயன்பட்டு அவர்களை ஈர்த்தது.இது ஒருபுறமிருக்க பரந்துபட்ட மக்களிடமிருந்து அன்னியப்பட்ட , இல்லாத ஊருக்கு வழிகாட்டிக் கொண்டிருந்த பக்தி இசையான செவ்வியல் இசையை விட சினிமா இசை அவர்களுக்கு நெருக்கமானதாகவும் இருந்ததும் முக்கிய காரணமாகும்.பொதுவாக நாட்டுப்புற இசை நகைச்சுவை காட்சிகளில் பயன்படுத்தப்பட்டமை ரசிகர்களுக்கு களிப்பூட்டுவதாக இருந்தது..1940 களில் நகைச்சுவை பாடல்களாகவும் , தர்க்கப்பாடல்களாகவும் பல பாடல்கள் வெளி வந்தன.

கதாநாயகர்களுக்கு மட்டும் பாடல்கள் என்றில்லாமல் நகைச்சுவை நடிகர்களுக்கும் பாடல்கள் கொடுக்கப்பட்டன.கதாநாயகர்களின் தோழனாக நகைச்சுவைபாத்திரங்கள் அமைக்கப்பட்டு நகைச்சுவை நடிகர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.இதுவும் சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகங்களில் தான் இருந்து எடுக்கப்பட்டது என்பது ஆய்வாளர்களின் கருத்து.இந்த மரபு தொல்காப்பிய காலத்திற்கு பின் வந்த அகத்துறைப் பாடல்களில் , நகைச்சுவையை தோழியர் கூற்றாக அமைத்த மரபின் தொடர்ச்சி எனலாம்.தொல்காப்பியத்தின் 175 வது சூத்திரம் நாடகத்தில் நகைமொழி செவிலிகூற்றாக வரும் என்று விளக்குகிறார் பேராசிரியர் அ.சா.ஞானசம்பந்தன்.[ தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும் - பேராசிரியர் அ.சா.ஞானசம்பந்தன்]

ஆரம்பகால தமிழ் சினிமாவில் சாதாரண மக்களின் பேச்சு மொழியிலேயே நகைச்சுவைப் பாடல்கள் மிகுதியாக இருந்தன.கதாநாயகப் பாத்திரங்களின் பாடல்கள் தமிழ் செவ்வியல் சார்ந்த அல்லது அதனைச் சார்ந்த மெல்லிசை வடிவமாக இருக்க நகைச்சுவைப் பாடல்கள் நாட்டுப்புற இசை சார்ந்ததாகவே இருந்தன. இவை மக்கள் நேரடியாக புரியக் கூடிய , அதிகம் சிந்தனைக்கிடமில்லாத வகையில் கொண்டு செல்லும் ஒரு உத்தியாகும்.. இன்று வரை அந்த நிலையில் பெரிய மாற்றங்கள் ஏதுமில்லை எனலாம்.

ஆரம்பகால தமிழ் சினிமாவில் வெளி வந்த நாட்டுப்புறப்பாங்கில் அமைந்த நகைச்சுவைப் பாடல்கள் :

01 கட்டி கரும்பே முத்தம் கொடுத்திடு – ஸ்ரீவள்ளி 1945 – டி.ஆர்.ராமசந்திரன்- இசை : R.சுதர்சனம்
02 அம்மான் மகனை உன்னை மாட்டி வைக்கிறேன் – ஸ்ரீவள்ளி 1945 – இசை : R.சுதர்சனம்
03 தாகம் தீர்ந்ததல்லால் – ஸ்ரீவள்ளி 1945 – டி.ஆர்.மகாலிங்கம் + பி.ஏ.பெரியநாயகி இசை : R.சுதர்சனம்
04 தங்குத டிங்காலே – இன்பவல்லி 1949 – N .S .கிருஷ்ணன் + T.A. மதுரம் – இசை : ஜி. ராமநாதன்
05 சம்பளமே … எலுமிச்சம்பளமே – இன்பவல்லி 1949 – N .S .கிருஷ்ணன் + T.A. மதுரம் – இசை : ஜி. ராமநாதன் [ தர்க்கப்பாடல் ]
06 நம்ம வாத்தியார் – சபாபதி 1941 -T .R .ராமச்சந்திரன் – இசை : R.சுதர்சனம்
07 வருவார் என் மணவாளன் – சபாபதி 1941 -T .R .ராமச்சந்திரன் – இசை : R.சுதர்சனம்
08 மயிலைக்காளை மாடுகளா – சபாபதி 1941 – - இசை : R.சுதர்சனம்
09 கட்டாயம் கல்யாணம் பண்ணிக்க – சபாபதி 1941 – - இசை : R.சுதர்சனம் [ தர்க்கப்பாடல் ]
10 தெருவில் வாராண்டி – பக்த கௌரி 1945 – U.R ஜீவரத்தினம் – இசை :
11 பாட்டைக் கேட்கோணும் – பாதுருஹரி 1945 – T .A மதுரம் இசை :
12 நாடகத் தமிழ் பாட – ஔவையார் – K .P .சுந்தராம்பாள்

ஜி.ராமநாதன் இசையமைத்த நாட்டுப்புறப்பாங்கான பாடல்கள் சில :

01. குன்றுதோர் ஆடிவரும் குமாரவடி வேலன் – படம்: மதுரைவீரன் – பாடியவர் :P .லீலா -இசை:ஜி.ராமநாதன்
02. காட்க்குள்ளே கண்ட பூவு கண்ணைப் பறிக்குது படம்: நான் பெற்ற செல்வம் – பாடியவர் :TMS -இசை:ஜி.ராமநாதன்
03. ஏறாத மலைதனிலே – படம்: தூக்குத் தூக்கி – பாடியவர் :TMS – இசை:ஜி.ராமநாதன்
04. வாங்க மச்சான் வாங்க – படம்: மதுரைவீரன் – பாடியவர் :TMS -இசை:ஜி.ராமநாதன்
05. சும்மா இருந்த சொத்துக்கு நட்டம் – படம்: மதுரைவீரன் – பாடியவர் :P .லீலா +குழு – இசை:ஜி.ராமநாதன்
06. ஏச்சி பிழைக்கும் தொழிலே சரிதானா – படம்: படம்: மதுரைவீரன் – பாடியவர் :TMS + ஜிக்கி – இசை:ஜி.ராமநாதன்
07. அத்தானும் நான் தானே – படம்: சக்கரவர்த்தி திரும்கள் – பாடியவர் :S.c .கிருஷணன் + TV ரத்தினம் – இசை:ஜி.ராமநாதன்
08. சங்கத்துப் புலவர் பலர் – படம்: சக்கரவர்த்தி திரும்கள் – பாடியவர் :sc.கிருஷணன் + சீர்காழி – இசை:ஜி.ராமநாதன்
09. தந்தான தந் தானத் தந்தானே – படம்: காத்தவராயன் – பாடியவர் :J.P.சந்திரபாபு + ஜிக்கி – இசை:ஜி.ராமநாதன்
10. ஜிகு ஜிகு ஜிகுவென – படம்: காத்தவராயன் – பாடியவர் :J.P.சந்திரபாபு + ஜிக்கி – இசை:ஜி.ராமநாதன்
11. ஆலோலம் ஆலோலம் – படம்: அரசிளங் குமரி – பாடியவர் :P.சுசீலா – இசை:ஜி.ராமநாதன்
12. மாட்டு வண்டி பூட்டிகிட்டு – படம்: வீரபாண்டிய கட்ட பொம்மன் – பாடியவர் :TMS + TV ரத்தினம் – இசை:ஜி.ராமநாதன்
13. ஆத்துக்குள்ளே ஊத்து வெட்டி – படம்: வீரபாண்டிய கட்ட பொம்மன் – பாடியவர் :T.லோகநாதன் + A ரத்தினமாலா + ஜமுனாராணி -இசை:ஜி.ராமநாதன்
14. மாட்டு வண்டி பூட்டிகிட்டு – படம்: வீரபாண்டிய கட்ட பொம்மன் – பாடியவர் :TMS + TV ரத்தினம் – இசை:ஜி.ராமநாதன்
15. வாராண்டி வாராண்டி குட்டி சாத்தான் – படம்: காத்தவராயன் – பாடியவர் :J.P.சந்திரபாபு + A ரத்தினமாலா – இசை:ஜி.ராமநாதன்
16. எத்தனையோ கை பார்த்தேன் – படம்: காத்தவராயன் – பாடியவர் :TMS + ஜிக்கி – இசை:ஜி.ராமநாதன்
17. தந்தான தந் தானத் தந்தானே – படம்: காத்தவராயன் – பாடியவர் :J.P.சந்திரபாபு + ஜிக்கி – இசை:ஜி.ராமநாதன்
18. கண்ணே உன்னால் நான் அடையும் – படம்: அம்பிகாபதி – பாடியவர் :N .S .கிருஷணன் + மதுரம் – இசை:ஜி.ராமநாதன்
19. கன்னித் தமிழ் கண்டெடுத்த காவிய சோலையடி – படம்: அம்பிகாபதி – பாடியவர் :சீர்காழி + கோமளா – இசை:ஜி.ராமநாதன்
20. ஆடட்டுமா கொஞ்சம் பாடட்டுமா – படம்: அம்பிகாபதி – பாடியவர் :P.சுசீலா – இசை:ஜி.ராமநாதன்
21. பிறக்கும் போது பிறந்த குணம் – படம்: சக்கரவர்த்தி திருமகள் – பாடியவர் :- சீர்காழி – இசை:ஜி.ராமநாதன்.
22. டக்கு டக்கு டக்கு – படம்: வீரபாண்டிய கட்டபொம்மன் – பாடியவர் :எஸ்.வரலட்சுமி + P.சுசீலா + A.ரத்னமாலா – இசை:ஜி.ராமநாதன்
23. அஞ்சாத சிங்கம் என் காளை – வீரபாண்டிய கட்டபொம்மன் – பாடியவர் :P.சுசீலா – இசை:ஜி.ராமநாதன்
24. கறந்த பாலையும் காகம் குடியாது – வீரபாண்டிய கட்டபொம்மன் – பாடியவர் :TMS – இசை:ஜி.ராமநாதன்

இசை மேதை ஜி.ராமநாதன் மட்டுமல்ல பிற இசையமைப்பாளர்களும் நாட்டுப்புற இசையில் பல பாடல்களை தந்திருக்கிறார்கள். அவற்றுள் மிகச் சில உதாரணங்கள் :

25 அக்கா மகளே – சுமங்கலி – S.C .கிருஷ்ணன் + A. ரத்னமாலா – இசை : K.V.மகாதேவன்
26 வாங்க எல்லோரும் சேர்ந்து – கூண்டுக்கிளி – T.M.S +P.லீலா – இசை : K.V.மகாதேவன்
27 ஆத்தாடி தள்ளாத – பெரிய கோவில் -K.ஜமுனாராணி + L.R.ஈஸ்வரி – இசை : K.V.மகாதேவன்
28. உன் திரு முகத்தை – மகாதேவி – பாடியவர் :J.P.சந்திரபாபு + A.ரத்னமாலா – இசை:விஸ்வநாதன் – ராமமூர்த்தி
29. தந்தானா பாட்டு பாடி – மகாதேவி – பாடியவர் :J.P.சந்திரபாபு + A.ரத்னமாலா – இசை:விஸ்வநாதன் – ராமமூர்த்தி
30. ஏரு பூட்டுவோம் – மகாதேவி – பாடியவர் :TMS + P.லீலா+ ஜமுனாராணி – இசை:விஸ்வநாதன் – ராமமூர்த்தி
31. குறுக்கு வழியில் – மகாதேவி – பாடியவர் :TMS – இசை:விஸ்வநாதன் – ராமமூர்த்தி
32. மணப்பாறை மாடு கட்டி – மக்களைப் பெற்ற மகராசி – பாடியவர் :TMS – இசை:K.V.மகாதேவன்
33. தாராபுரம் தாம்பரம் – மக்களைப் பெற்ற மகராசி – பாடியவர் :S.C.கிருஷ்ணன் + A.ரத்னமாலா – இசை:K.V.மகாதேவன்
34. தர்மம் என்பார் நீதி என்பார் – பதி பக்தி – பாடியவர் :TMS + J.P.சந்திரபாபு – இசை:விஸ்வநாதன் – ராமமூர்த்தி
35. அம்பிகையே முத்து மாரியம்மா – பதி பக்தி – பாடியவர் :TMS + P.சுசீலா – இசை:விஸ்வநாதன் – ராமமூர்த்தி
36. பிள்ளையாரு கோவிலுக்கு – பாகப்பிரிவினை – பாடியவர் :TMS + P.லீலா – இசை:விஸ்வநாதன் – ராமமூர்த்தி
37. தேர் ஓடும் எங்கள் சீரான மதுரையிலே – பாகப்பிரிவினை – பாடியவர் :TMS + P.லீலா – இசை:விஸ்வநாதன் – ராமமூர்த்தி
38. தேர் ஓடும் எங்கள் சீரான மதுரையிலே – பாகப்பிரிவினை – பாடியவர் :TMS + P.லீலா – இசை:விஸ்வநாதன் – ராமமூர்த்தி
39. நல்ல காலம் வருகுது – புதையல் – பாடியவர் :TMS – இசை:விஸ்வநாதன் – ராமமூர்த்தி
40. சின்ன சின்ன இழை பின்னி பின்னி வர – புதையல் – பாடியவர் :P.சுசீலா – இசை:விஸ்வநாதன் – ராமமூர்த்தி
41 . ரீ ..ரீ …ரீ .. ரீ வாங்க ரீ ..ரீ …ரீ – கல்யாணப்பரிசு – பாடியவர் :சீர்காழி – இசை:A.M.ராஜா
42. சும சும சம் சம் சம் – புனர் ஜென்மம் – பாடியவர் :எஸ்.ஜானகி – இசை:T.சலபதிராவ்
43. ஓகோ .. நீ சும்மா சும்மா – இதயகீதம் – குழுவினர் – இசை : T.G.லிங்கப்பா

பின்னாளில் மெல்லிசைப்பாங்கான காதல் பாடல்களிலும் மிக அற்ப்புதமாக நாட்டுப்புறத் தாளத்தை பயன் படுத்தியாவர் K.V.மகாதேவன் அவர்கள்.

பார்வையாளர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளும் கலைவடிவமான நாடகக் கலையில் நவரச உணர்வுகளை வெளிக்கொணரும் பல் வகை பாடல்கள் நாடகத் தேவையை ஒட்டி பயன்பட்டும் வந்தன.

சோழர் ஆட்சியின் வீழ்ச்சியோடு நாடகத்தின் வளர்ச்சியும் குன்றியது. பின் 13 ஆம் நூற்றாண்டில் புத்துயிர் பெற்ற தமிழ் நாடக வளர்ச்சி பலவிதமான இசைகளை உள்வாங்கி வந்துள்ளது. பள்ளு நாடகம் ,குறவஞ்சி நாடகம் , குழுவ நாடகமும் ,நொண்டி நாடகம் , அருணாசலக் கவிராயர் [ 1712 - 1799 ] எழுதிய கீர்த்தனை நாடகம் என்பன இசையுடன் இணைந்தனவாக இருந்தன.

இவை மட்டுமல்ல , கரகாட்டம் போன்ற கலை வடிவங்களும் மக்களின் வரவேற்ப்பை பெற்றிருந்தன. லாவணி , வில்லுப்பாட்டு ,கதாகலாட்சேபம் போன்ற கதை சொல்லும் முறைகளும் பாடல் வடிவிலேயே இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

” ஒரு சிறந்த படைப்பாளி தன மரபில் நின்று படைப்பதும், சில சமயம் அவனது படைப்பால் அந்த மரபே செழுமைப்படுவதும் உண்டு. தனியே பழைய மரபை ஒட்டி படைப்பது மட்டும் அவனது திறமையை வெளிப்படுத்தாது. பழமையிலிருந்து உதிக்கும் புதிய மரபில் நின்று அவன் படைக்கும் கலையில் தனித்தன்மையை காட்டும் போது கலையில் அவனுக்கு ஒரு நிரந்தர புகழையும் வழங்கி விடும.”

இந்த கருத்தை வலியுறுத்தும் மாபெரும் கலைஞராக சங்கரதாஸ் சுவாமிகள் விளங்கினார் என்றால மிகையில்லை.தமிழ் நாடக வளர்ச்சி அவர் வரவால் புத்துயிர் பெற்றது என்பர். அவருடைய நாடகங்களில் இசையே மிகுந்துதிருந்தது.அவருடைய இசை நாடகங்களில் பயன்பட்ட முக்கிய இசைக் கூறுகளாக

1. தென்னக இசை [ கர்னாடக இசை ]
2.. தமிழ்திருமுறை இசை [ தேவார இசை ]
3. நாட்டுப்புற இசை
4.. ஹிந்துஸ்தானி இசை
5.. மேலைத்தேய இசை

எனப் பல்வகை இசை அமைந்ததென ஆராய்ச்சியாளர் அரிமளம் .எஸ்.பத்மநாபன் அவர்கள் குறிப்பிடுகின்றார்.இந்த இசை வகைகளுடன் அவர் காலத்தில் புகழ் பெற்றிருந்த கீர்த்தனை நாடக இசையையும் பயன்படுத்தினார்.
நாடுப்புற கலைவடிவங்களில் உள்ள இசை வடிவங்கள் பலவற்றையும் உள்வாங்கியதாக நாடகப்பாடல்கள் அமைக்கப்பட்டன.குறிப்பாக ஒப்பாரி இசை , தெம்மாங்கு , சிந்துப் பாடல்கள் அவரது நாடகங்களில் பயன்படட்டுள்ளன.

“சாகப் போகும் தருவாயிலும் பாட்டு , செத்துக்கிடந்தாலும் பாட்டு , அழும் போதும் பாட்டு , எந்தச் சந்தர்ப்பத்திலும் பாட்டு என்பது அன்றைய நாடகம் பற்றிய கருத்தாக இருந்தது.”
இது அன்றைய நாடகத்தில் இசை வகித்த முக்கியத்துவத்தை உணர்த்தி சொல்லிய கருத்தாகும்.இந்த பாடல் படுத்திய பாடு பெரும்பாடு என்றே எண்ணத் தோன்றுகிறது.

தமிழ் செவ்வியல் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்த சங்கரதாஸ் செவ்வியல் அரங்குகளில் புகழ் பெற்ற ராகங்களை தனது நாடகங்களில் பயன்படுத்தி பரந்து பட்ட மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தினார்.

தமிழ் செவ்வியல் இசையில் கீர்த்தனைகளின் வர்ண மெட்டுக்களை , ராகங்களை எடுத்துக் கொண்டு தனது நாடக பாத்திரங்கக்ளுக்குப் பொருத்தமாக அவற்றை அமைத்தார்.அதன் மூலம் அந்த வர்ண மெட்டுக்களை பிரபலப்படுத்தினார் . அவற்றை செவ்வியல் பரீச்சயம் இல்லாத பாமர மக்கள் , செவ்வியல் இசைக் கலைஞர்கள் பாடும் போது , ” சுவாமிகளின் நாடக பாடல்களை பாடுகிறார்கள் ” என்று சொல்லும் அளவுக்கு அவற்றை பிரபலப்படுத்தினார் என்பார் ஆய்வாளர் அரிமளம் .எஸ்.பத்மநாபன்.

hindustani_picஅவர் வாழ்ந்த காலத்தில் பார்சி நாடகக் குழுவினரால் பிரபல்யப்படுத்தப்பட்ட ஹிந்துஸ்தானி இசை , இசை ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.ஹிந்துஸ்தானி இசையில் ஆர்வம் காட்டிய சங்கரதாஸ் குலாம் முகமது அப்பாஸ் என்ற ஹிந்துஸ்தானி இசைக்கலைஞரிடமிருந்து இசை நுட்பங்களை அறிந்து கொண்டார். ஹிந்துஸ்தானி ராகங்களான ஜோன்புரி , ஜமுனாகல்யாணி ,சிந்துபைரவி ,பெகாக் அக்கால நாடகங்களில் அறிமுகமாயிருந்தன.

அதுமட்டுமல்ல ஆங்கிலேய ஆட்சியில் கிறிஸ்த்தவ மத பிரசாரத்திற்காக பயன்படுத்தப்பட்ட பாடல்களை, எட்வேர்ட் போல் [Edward Poul ] என்பவர் தொடர்பால் தமிழில் சுரப்படுத்துவதில் பங்களித்த சங்கரதாஸ் சுவாமிகள் ஆங்கில வர்ண மெட்டுக்களின் அமைப்புக்களையும் அறியும் வாய்ப்பையும் பெற்றுகொண்டார்.இந்த இசையின் கூறுகளை ஞான சௌந்தரி என்ற தனது நாடகத்தில் அங்கங்கே பயன்படுத்தியுள்ளார்.

பாடல் வடிவினைக்கொண்ட தெருக்கூத்து , காவடிச்சிந்து ,கீர்த்தனை ,கதாகாலட்சேபம் ,விருத்தங்கள், தருக்கள் என்ற பாடல் வடிவம் ,[ இதில் ஓரடிக்கீர்த்தனை , ஈரடிக்கீர்த்தனை வகைகள் உள்ளன ] , தெம்மாங்கு ,சிந்து இசை வகைகள் பயன்பட்டுள்ளதுடன் நல்ல இசை பயிற்சி ,தமிழ் மொழியில் பயிற்சி போன்றவற்றையும் முக்கியமானதாகக் கருதினார் சுவாமி.

நாடகத்தில் ஹார்மோனிய இசை , பின்பாட்டு , முன்பாட்டு போன்ற இசை யுக்திகள் அறிமுகம் செய்யப்பட்டன.

சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகத்தில் பயன் பட்ட செவ்வியல் ராகங்கள் சில:

1. நாடகம் : வள்ளிதிருமணம் நாடகம்

பாடல் : 1 . ஞான தேசிகா மெய் ஞான தேசிகா – ராகம் : தோடி
இந்தப்பாடல் தியாகராஜசுவாமிகளின் ” ஆரம்கிபவே பா – ஸார கிம்பவே ” என்ற தோடி ராக கீர்த்தனத்தின் பாதிப்பாகும்.

பாடல் : 2 . முருகன் திருமால் மருகன் – பெருமை அந்த
முக்கணணனுக்குமில்லை – ராகம் : அடானா

பாடல் : 3 .”சுந்தரம் நிறைந்து ததும்பும் சிறந்த மங்கை ” – ராகம் : நாட்டக்குறிஞ்சி

2. நாடகம் : பவளக்கொடி

பாடல் : 1 . எத்தனை நேரம் இப்படி நிற்ப்பேன் – ராகம் : தன்யாசி தாளம் : ஆதி
பாடல் : 2 . ஏதுக்கு இந்த விசாரம் – ராகம் : நாட்டக்குறிஞ்சி தாளம் : ஆதி
இந்தப்பாடல் தியாகராஜ சுவாமியின் ” சங்கீத ஞானமு ” என்ற அதே ராகப் பாடலை
ஓட்டியமைந்தததாகும்.இதே ராகத்தில் வள்ளிதிருமணம் நாடகத்தில்
“சுந்தரம் நிறைந்து ததும்பும் ” என்ற பாடலும் பயன் படுள்ளது.

பாடல் : 3 . ஏதுக்கிந்த சரப்பளியினால் – ராகம் : பூர்விகல்யாணி தாளம் : ஆதி
பாடல் : 4 . செம்பவள வள்ளி போல் எங்கே வந்தாய் ” – ராகம் : மோகனம் தாளம் : ஆதி

பாடல் : 5 . அப்பா புலேந்திரனே அருமைக்கண்மணியே – ராகம் :முகாரி

3. நாடகம் : சத்தியவான் சாவித்திரி

பாடல் : 1 . நந்தவன அழகைக் கண்டு – ராகம் : கமாஸ்
இதே ராகத்தில் ” காமி சத்தியபாமா கதவை திறவாய் “என்று எஸ்.ஜி.கிட்டப்பா பாடி புகழ் பெற்றார்.
பாடல் : 2 . அம்மணி நீ சொல்லக் கேளாய் – ராகம் : பரசு

4. நாடகம் : ஞானசௌந்தரி

பாடல் : 1 . தந்தை இன்று தான் பிரிந்தார் – ராகம் : முகாரி – [ஏக்கப்பாடல் ]
இதே ராகத்தில் ராமன வனம் புகும் காட்சியில் அருணாசலக்கவிராயரின் ராமநாடகத்தில் பாடல் இடம் பெற்றுள்ளது.

பாடல் : 2 . இனிமேல் இவனை விட்டால் எனக்கு கெடுதி வரும் – ராகம் : சாவேரி

பாடல் : 3 . இந்த மாதிரி அன்பு செய்திடில் – ராகம் : பைரவி

பாடல் : 4 . மாதவம் செய் மாமுனியே – ராகம் : குறிஞ்சி

5. நாடகம் : கோவலன் சரித்திரம்

பாடல் : 1 . நீயே சகாயமென நினையாமல் மானே
நேசம் தாசி மேல் வைத்தேன் – - ராகம் : சகானா – தாளம் :மிஸ்ர சாபு

பாடல் : 2 . அடைக்கலமே அடைக்கலமே
அருமை குணமுள்ள நாயகியானாள் – ராகம் : ஆரபி – தாளம் :ஆதி
இந்தப்பாடல் வரிகளை அப்படியே இசை மேதை ஜி.ராமநாதன் ” கற்ப்புக்கரசி ” [1955] என்ற படத்தில் வரும் ஒரு கோவலன் இசை நாடகப்பாடலில் அர்ப்புதம்மாகப் பயன்படுத்தி இருப்பார்.அந்த பாடலை A.ரத்னமாலா + கே.ஜமுனாராணி + ஜிக்கி போன்றோர் அழகாகப் பாடியிருக்கின்றார்கள்.

பாடல் : 3 . மதியிலுயர் வணிகர்குல மதனில் வரு துணைவரடி
மலர்தொழுது கண்ணகை யெனும் – ராகம் : ஆபேரி

கோவலனுக்கு கண்ணகி எழுதும் கடிதம் போல் அமைந்த பாடல்.

பாடல் : 4 . வாராய் நேசா மதன உல்லாசா – ராகம் : பெகாக்

பாடல் : 5 . ஆபரண வகை யாவும் தந்தேனினி – ராகம் : நாட்டைக்குறிஞ்சி

இதே போன்று நாட்டுப்புறபாங்கில் தெம்மாங்கு , குறத்திப்பாடல் ,ஒப்பாரி ,நொண்டிச்சிந்து , கும்மிப்பாடல் போன்றவற்றையும் அப்பர் , சுந்தரர் , சம்பந்தர் ஆகியோரின் தேவார இசையையும் தேவைகளுக்கேற்ப பயன் படுத்தியிருக்கின்றார்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பாடல் வகைகளில் எல்லாம் ராகங்கள் விரவிக்கிடக்கின்றன.குறத்தி பாடல்களில் சங்கராபரணம் ,ஒப்பாரிப் பாடல்களில் முகாரி ,தெம்மாங்கு இசையில் யதுகுல காம்போதி, ஆனந்த பைரவி , மாயாமாளவ கௌளை , கும்மிப்பாடல்களில் ஆனந்தபைரவி, பைரவி தேவார இசையில் மோகனம் , பூபாளம் போன்ற ராகங்கள் காணப்படுகின்றன.

பெரும்பாலான திருவாசகப் பாடல்கள் மோகனராகத்தில் இசைக்கப்படுகின்றன.விருத்தபாடல்களாகவும் அவை பாடப்படும்.ஆதிகாலத்தில் வழங்கி வந்த முல்லைப்பண் என்பதே இன்றைய மோகனம் என்பது அறிஞர்களின் கருத்து.இசை அறிஞர் எஸ்.ராமநாதன் இதனை தனது ஆய்வுகள் மூலம் நிறுவியுள்ளார்.
பலவித பாடல்களுக்கும் அதற்க்கான ராகங்கள் என்னென்னவென்றும் , இன்னன்ன நேரங்களில் அவை பாடப்பட வேண்டும் என வகுக்கப்பட்டன.மிகப்பழங்காலம் தொட்டே தமிழில் பகல்பண்கள் , இராப்பண்கள் , பொதுப்பண்கள் என்ற வகைப்பாடு இருந்து வந்துள்ளது.

பகல்பண்கள் :
புறநீர்மை , பஞ்சமம் , இந்தளம் , கௌசிகம் , காந்தர பஞ்சமம் , தக்கேசி , பழம் பஞ்சுரம் , நட்டபாடை , சாதாரி .

இராப்பண்கள் :
சீகாமரம் , வியாழக்குறிஞ்சி , அந்தாளக்க்குறிஞ்சி , கொல்லி , மேகராகக்குறிஞ்சி , பழந்தக்க ராகம் .

பொதுப்பண்கள்:
செந்துருத்தி , திருத்தாண்டகம் ,செவ்வழி.
இந்த மரபின் தொடர்ச்சியாகவே பின் வந்த காலங்களில் சில முறைகள் பின்பற்றப்பட்டன.

திருப்பள்ளி எழுச்சி – பூபாளம்
திருப்பொன்னூசல் – பைரவி , நீலாம்பரி ,ஆனந்த பைரவி
திருச்சாழல் – ஆரபி
திருப்படையாட்சி – ஆனந்த பைரவி

திருவெம்பாவை என்பது மகளிர் பொய்கையில் நீர் விளையாடி மகிழும் அதிகாலைக்குரியது.மாணிக்க வாசகர் பாடிய திருவெம்பாவை மோகனத்தில் இப்போதும் மார்க்ழியில் பாடப்படுகிறது.
அவை மட்டுமல்ல நாட்டுப்புற இசையில் செஞ்சுருட்டி , உசேனி ,கமாஸ் , ஆபேரி , சிந்துபைரவி என எங்கும் ராகங்கள் நீக்கமற நிறைந்துள்ளன.
இவை மட்டுமல்ல அன்றாட வாழ்வின் பல நிகழ்வுகளுக்கும் ,கொண்டாட்டங்களுக்கும் ,பல்வகைத் தேவைகளுக்கும் இன்ன , இன்ன இசை அல்லது ராகங்கள் பயன் பட வேண்டும் என சில விதி முறைகளை கையாண்டார்கள்.உ +ம் : ஒரு திருமண வைபவத்தில் நாதஸ்வர இசையில் என்னென்ன ராகங்கள் பயன்பட வேண்டும் என்ற சில படிமுறைகள்:

மாப்பிள்ளை அழைப்பு – கல்யாணி
ஊர்வலம் புறப்படும் போது – சங்கராபரணம்
ஊர்வலம் போகும் போது – காம்போதி , தோடி
திருமண கூடத்தில் – கரகரப்பிரியா
நிச்சயதார்த்தம் – பியாகடை ,கானடா , அடானா
முகூர்த்தம்நடக்கும் போது – நாடக்குருஞ்சி , தன்யாசி
தாலி கட்டும் போது – ஆனந்தபைரவி

பண்டைக் கலாச்சாரத் தொடர்பால் தாய்லாந்து நாட்டில் இன்றளவும் கோயில்களில் தமிழில் தேவாரம் பாடப்படுவதாகவும் நாம் அறிகின்றோம். மோகன ராகத்தில் தேவாரம் பாடப்படுகிறது . தாய்லாந்து நாட்டு இசையிலும் மோகனராகம் பயன் பாட்டில் உள்ளது.

அந்தக் கால நாடகக் கலைஞர்கள் நாடக மேடைகளில் இந்த ராகங்களை எல்லாம் பாடி மக்களை மகிழ்ச்சிப்படுத்தினார்கள். ஆனால் அந்தகால நாடகக் கலைஞர்களின் வாழ்வு எவ்வாறிருந்தது என்பதை நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.அந்த கால நாடக்கலைஞர்களின் நிலையை நாடக மேதை T.K.சண்முகம் [26 . 04 . 1912 - 15 . 02. 1973 ] தனது ” நாடகக்கலை ” எனும் நூலில் பின்வருமாறு விபரிக்கிறார்.

” நான் நாடகத்துறையில் இறங்கிய அந்த நாளில் [1918] நாடகக்கலைஞர்கள் மிகவும் இழிவாகக் கருதப்பட்டு வந்தார்கள்.கொலைகாரன், கொள்ளைக்காரன் முதலியவர்களைக் கண்டால் மக்கள் எப்படிப் பயந்து ஒதுங்கி வாழ்வார்களோ அதே நிலைதான் நாடகக்காரனுக்கும் இருந்து வந்தது.நாடகக்காரர் என்றால் குடியிருக்க வீடு கொடுக்கக்கூட மக்கள் பயந்தார்கள்.அனேக ஊர்களில் மயானக்கரைக்கு அருகே பேய்கள் வசிக்கும் வீடென்று ஒதுக்கப்பட்ட வீடுகளில் தான் அந்தக் காலங்களில் நாங்கள் குடியிருக்க நேர்ந்தது.” ஒரு தொழிலுமில்லாதார் நாடகக் காரரானார் “என்பது ஒரு பழமொழியாகக் கூட உருவாகியிருந்த காலம்.”

Sankaradass Swamigal Bookதவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் [ 1867 - 1922 ] நாடகத்துறையில் நுழைந்தது 1891 ம் ஆண்டு.அவருடைய காலத்தில் தமிழ் சமூகத்தில் நாடகத்துறை எவ்வாறிருந்தது என்பதை நாம் ஊகித்துக்கொள்ளலாம்.சுவாமிகளின் வாழ்வைப் பற்றி நூல் எழுதிய நாடக மேதை T.K.சண்முகம்
” நாடக உலகம் மட்டுமன்று, தமிழ் இலக்கிய உலகமே தன் இதயத்தில் வைத்துப் ஒற்ற வேண்டிய பெரும் புலவர் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள்.ஆனால் , தமிழ் இலக்கிய வரலாறு எழுதுவோருக்கு எங்கள் சுவாமியைப்பற்றி எதுவும் தெரியாது.பெயரைத் தெரிந்த ஒரு சிலருக்கும் அவருடைய பெருமை தெரியாது.இது காலம் செய்த சதி.சுவாமிகளின் ஆயிரக்கணக்கான மாணாக்கர்களில் அடியேனும் ஒருவன், அவர் வாழ்ந்த காலத்தில் நான் அறியாச் சிறுவன்.நன்கு அறிமுகப்படுத்தும் அளவுக்கு உறவாடிப் பழ்கியவனல்லன்.
பெரியவர்கள் யாரேனும் இப்பணியை செய்திருந்தால் பெரு மகிழ்ச்சியடைந்திருப்பேன் என்ன செய்வது? எவரும் முன்வரவில்லை.” என்று எழுதுகின்றார்.

தமிழ் புலவர்கள் , அறிஞர்கள் போன்றவர்கள் அவரை ஒரு ” கூத்தாடி ” என்று கேவலமாக தான் கருதியிருக்க வேண்டும்.!இசை என்பது குறைந்த சாதியினருடன் அடையாளப்படுத்தபட்டு வந்ததென்பதையும் நாம் நினைவில் கொள்வதும் நலம்.

சுவாமிகளின் நாடக இசையில் மற்ற எந்த கலை வடிவத்தையும் காட்டிலும் கதாகாலாட்சேபத்தின் தாக்கமே மிகவும் அதிகம் என்பார் , சுவாமிகளின் பாலர் நாடக சபை மரபில் வந்த திரைப்பட நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவர்கள்.

சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகங்களில் பயிற்சி பெற்ற கலைஞர்களில் கிட்டப்பா சகோதரர்கள் மிக முக்கியமானவர்கள்.குறிப்பாக எஸ்.ஜி. கிட்டப்பா [1906–1933 ] தனது இனிய குரல் வளத்தால் எல்லோரையும் கவர்ந்தார்.மிக்க ஏழைக் குடும்பத்தில் பிறந்த கிட்டப்பா மிக இள வயதிலேயே [ 6 வயது ] வறுமை காரணமாக நாடகத்தில் சேர்க்கப்பட்டார். அவரது பாடல்களை கர்னாடக இசைகலைஞர்களும் ரசித்துக் கேட்டார்கள்.வள்ளி திருமணம் என்ற சுவாமிகளின் முதன்மை நாடகத்தில் நடித்து பெரும்புகழ் பெற்றார் கிட்டப்பா.
” இந்த நாடகத்தில் இசையும் ஒரு கதாபாத்திரம் ” என்பார் இந்திரா பார்த்தசாரதி .

நாடகமேடையில் தோன்றி தனது குரலினிமையால் பாடுவதில் புதிய பாங்கை உண்டாக்கினர்.இவ்விதம் முறையாக பாடுபவர்களால் நாடக இசையும் வளம் பெற்றது.எஸ்.ஜி.கிட்டப்பாவின் இனிமையான பாடல்கள் இசைத்தட்டுக்களாக வெளிவந்து புகழ் பெற்றன.ஓங்கி குரல் எடுத்துப் பாடும் அவரது குரல் 5 ,6 கட்டைகளுக்கும் அனாயாசமாக போகக்கூடியது .அவரது சுருதி 4 கட்டை என்பர்.அவரது பாடல்களை இன்றும் நாம் இசைத்தட்டுக்களில் கேட்டு மகிழலாம்.

கிட்டப்பா பாடி பிரபலமான பாடல்களில் :

எவரெனி நிர்னயின்சனா – ராகம்: தேவாம்ருதவர்சினி – தியாகராஜர் கீர்த்தனை

கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த – ராகமாலிகை – வள்ளலார் பாடல்

காயாத கானகத்தே நின்றுலாவும் – ஸ்ரீ வள்ளி நாடகத்திற்க்காக சங்கரதாஸ் எழுதிய ராகமாலிகைப்பாடல் பாடல்

கீதா சமுத்திரம் – ராகம் : சுருட்டி – தியாகராஜர் கீர்த்தனை

ராக சுத்த ரச பாலமு தேசி – ராகம் : ஆந்தோளிகா

trmகிட்டப்பாவின் பாணியில் பல பாடகர்கள் பாடி புகழ் பெற்றார்கள்.அவர்களில் முக்கியமானவர்கள் சி.எஸ்.ஜெயராமன் , டி.ஆர். மகாலிங்கம் , வீ.ஏ .செல்லப்பா போன்ற பாடகர்கள்.இளவயது சி.எஸ்.ஜெயராமன் பாடிய போது கிட்டப்பாவே அவதாரம் எடுத்தது போல் இருந்தது என அந்தக்கால பத்திரிகைகள் எழுதின.ஆயினும் கிட்டப்பாவின் சுருதியில் பாடக்கூடிய டி.ஆர்.மகாலிங்கம் , கிட்டப்பாவின் பாணியில் பாடி புகழ் பெற்றார். மேல் சொன்ன கிட்டப்பாவின் பாடல்களை வேதாள உலகம் , ஸ்ரீவள்ளி போன்ற படங்களில் பாடினார்.

” காயாத கானகத்தே நின்றுலாவும் நற்காரிகையே ” என்ற பாடலை 1974 இல் வெளிவந்த ” ராஜபார்ட் ரங்கதுரை ” படத்தில் T.M.சௌந்தரராஜனும் கிட்டப்பாவின் சாயல் தெரியும்படி பாடியிருப்பார்.

டி.ஆர்.மகாலிங்கத்தின் பாடல் பாணியை பின்பற்றிப் பாடி புகழ் பெற்றவரே சீர்காழி கோவிந்தராஜன். அகத்தியர் [1972 ] படத்தில் இருவரும் இணைந்து பாடிய” இசையாய் தமிழாய் இருப்பவனே ” , ” நமச்சிவாய என சொல்வோமே ” போன்ற பாடல்களில் ஒற்றுமையை நாம் அவதானிக்கலாம்.

எம் .கே.தியாகராஜா பாகவதர் [ 1910 - 1959 ]

கிட்டப்பாவின் [ 1906 - 1933 ] சமகாலத்தவரான எம் .கே.தியாகராஜா பாகவதர் கிட்டப்பாவின் இசைத்தட்டுக்களை ஆர்வமோடு கேட்ட்வராவார்.இவரும் நாடக மேடையிலிருந்து திரைக்கு வந்த கலைஞரே.
எஸ்.ஜி.கிட்டப்பா வின் நாடகங்களைப் பார்ப்பதில் அலாதிப்பிரியம் கொண்டவராயிருந்தார்எம் .கே.தியாகராஜா பாகவதர். .தனித்தன்மையும் ஒப்பற்ற திறமையும் , தன்னிகரில்லாத குரல் வளமும் , அழகிய தோற்றமும் கொண்ட தியாகராஜ பாகவதர் சுருதி சுத்தமாக கர்னாடக இசை பாடல்களைப் பாடுவதில் வல்லவராயிருந்தார்.
மிக இளம் வயதிலேயே அபாரமாகப் பாடும் திறமை பெற்ற சிறுவன் தியாகராஜனின் திறமையை அறிந்த ரசிக ரஞ்சனி சபா அதிபர் எப்.ஜி. நடேசய்யர் தியாகராஜனின் தந்தையிடம் பின்வருமாறு கூறினார் .

” எனக்கொரு பையன் வேண்டும்! ஆமாம் , அவன் எப்படிப்பட்ட பையனாக இருக்க வேண்டும்தேரியுமா ? இந்த மஹா ஜனங்கள் இருக்கிறார்களே , ரசிக மகா ஜனங்கள் , இவர்கள் அவன் சிரித்தால் தாங்களும் சிரிக்க வேண்டும் ;அவன் அழுதால் தாங்களும் அழவேண்டும்.அவனை யாராவது அடித்தால் இவர்கள் உடனே எழுந்து சென்று அவனை அடித்தவனை அடித்து நொறுக்கத் துடிக்க வேண்டும்…”

baghavadar_thiyagarajaதந்தையாரை இணங்க வைத்து “அரிச்சந்திரா ” நாடகத்தில் லோகிதாசனாக நடிக்க வைத்தார்.தியாகராஜ பாகவதரின் தந்தையார் கதாகாலட்சேபத்தில் பின்பாட்டுக்கலைஞராகவும் , நாடகங்ககளிலும் நடித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.தனது பாட்டுத்திறத்தால் மக்களை கவர்ந்த பாகவதர் பற்றி கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்

” மக்கள் பாகவதரைத் தேடிக் கொண்டு வருகிறார்கள் , நானோ அவர்களைத் தேடிக்கொண்டு போகிறேன் .” என பெருமையாகக் கூறினார்.

பிறவியில் அவருக்கு அமைந்த பாடல் திறனும், இனிய குரலும் அவரது உயர்வுக்கு காரணமாயிருந்தாலும் , அவரது உழைப்பும் , ஊக்கமும் அவரது காலத்தில் வாழ்ந்த நாதஸ்வரமேதை திருவாடுதுறை ராஜரத்தினம்பிள்ளை ,புகழ் பெற்ற ஆலத்தூர் சகோதரர்கள் ,இசை மகா சமுத்திரம்’ என்று புகழப்படும் விளாத்திக்குளம் சுவாமிகள் , பாபநாசம் சிவன் ஆகியோரின் வழியை அவர் தக்க இடத்தில் தக்கவாறு பயன்படுத்தியதும் காரணமாகும்.

” கேட்ட மாத்திரத்தில் “ஓட வைக்கும் ” கர்னாடக இசையை மெல்லிசையாக்கி பாடி மக்களை மகிழ்வித்தவர் பாகவதர் ” என்பார் விந்தன்.

நெல்லையில் வாழ்ந்த விளாத்திக்குளம் சுவாமிகள் என்ற இசை மேதை பற்றி பழம்பெரும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் சிறப்பாக எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.
விளாத்திக்குளம் சுவாமிகள் சண்முகப்பிரியா , சிந்துபைரவி ,நாகடப்பிரியா, புன்னாகவராளி போன்ற ராகங்களையே எப்போதும் பாடுவார் என எழுதுகின்றார் விந்தன்.

திருநீலகண்டர் [ 1938 ] படத்தில் ” பவள மால்வரை பனி படர்ந்தனையதோர் ” என்ற பைரவி ராகத்தில் ஆரம்பிக்கும் ராகமாலிகைப் பாடலுக்கான ,அருமையான சங்கதிகளை ,பிருக்காக்களை நாதஸ்வரமேதை திருவாடுதுறை ராஜரத்தினம்பிள்ளையிடம் கற்றுக்கொண்டு பாடினார் தியாக ராஜ பாகவதர்.
ராஜரத்தினம்பிள்ளையின் நாதஸ்வர வாசிப்பின் தன்மையை இந்த பாடலில் நாம் துல்லியமாகக் கேட்கலாம்.

ராஜரத்தினம்பிள்ளைசங்கீத சக்கரவர்த்தி ராஜரத்தினம்பிள்ளை மிகச் சிறந்த பாடகர் என்பது பலரும் அறியாத செய்தி.அவர் பாடி நடித்த காளமேகம் [1940] திரைப்படத்தில் தோடி ராகத்தில் அவர் பாடிய ” சண்முகன் காட்டிடும் ” என்ற விருத்தப்பாடலில் அசாத்தியமான கமகங்களால் பாவங்களை காட்டியிருப்பார்.அதுமட்டுமல்ல காளமேகம் படத்தில் பல பாடல்களை இவ்விதமாகப் பாடி அசத்தியிருப்பார்.

தமிழ்மக்கள் “சங்கீத சக்கரவர்த்தி ” எனப் பெருமை கொள்ளும் ராஜரத்தினம்பிள்ளை பாகவதரின் ரசிகராக இருந்தார்.

கலைவாணர் என்.எஸ் .கிருஷ்ணனின் புதுமனை புகுவிழாவில் பாகவதரின் கச்சேரி இடம் பெற்றது.பாகவதரின் கதையை எழுதிய விந்தன் பின்வருமாறு எழுதுகிறார்.

“அந்தக் கச்சேரிக்கு வந்தவர்களில் இருவர் விசேசமாகக் குறிப்பிடத்தக்கவர்கள்.அவர்களில்; ஒருவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ; இன்னொருவர் திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை .

எந்த ராஜரத்தினம் பிள்ளை ? என்று இதற்குள் கேட்கமாட்டீர்கள் என்று நினைக்கின்றேன்.” சங்கீத சக்கரவர்த்தி” என்று சொல்ல மனம் இல்லாமல் ” நாதசுவர சக்கரவர்த்தி ” என்று சிலர் “நாதசுவரம் ” என்பதற்கு மட்டும் ஒரு தனி அழுத்தம் கொடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்களே , அந்த” சங்கீத சக்கரவர்த்தி” தான் !.

பாகவதரின் பாட்டின் மயக்கமோ என்னவோ.அன்று சாட்சாத் ராஜரத்தினம் பிள்ளை , சாட்சாத் ராஜரத்தினம் பிள்ளையாக நடந்து கொள்ளவில்லை;சாதாரண காலரி மாஸ்டர் போல் பாகவதருக்கு எதிர்த்தாற் போல் உட்கார்ந்து , ” ராதே உனக்குக் கோபம் ஆகாதடி பாடுங்கள் , உனைக்கண்டு மயங்காத பேர்களுண்டோ பாடுங்கள்!” என்று கேட்டுக்கொண்டே இருந்தார்; பாகவதரும் புன்னகையுடன் அவர் கேட்டுக்கொண்டிருந்த பாடல்களைஎல்லாம் ஒன்று விடாமல் பாடிக்கொண்டே இருந்தார்.

இதனால் என்ன ஆயிற்று என்கிறீர்கள்? ” பாகவதர் சாதாரண மக்களுக்காகப் பாடுகிறார். நாங்களோ சங்கீத விற்ப்பனர்களுக்காகப் பாடுகிறோம் ” என்று சொல்லிக் கொண்டிருந்த சில மகா வித்துவான்களின் கொட்டம் அடங்கிப் போயிற்று.”

ராஜரத்தினம் பிள்ளை போன்ற சங்கீத மேதைகள் மட்டுமல்ல பாமர மக்களும் தியாக ராஜ பாகவதரின் பாடலகளில் மயங்கினார்கள்.மேலோட்டமாகப் பார்க்கும் போது மெல்லிசையாகத் தோன்றும் அந்தப் பாடலகளில் கனதியான செவ்வியல் இசை ராகங்களே அவற்றின் அடிப்படையானதாக இருந்தன.

இசையமைப்பில் இசைமேதை ஜி.ராமநாதனும் , பாடல் எழுதிய பாபநாசம் சிவனும் அவற்றை தனது இனிமையான குரலால் பாடிய தியாகராஜா பாகவதரும் புதிய இசை சாம்ராஜ்ஜியத்தை படைத்தார்கள்.அந்தப் பாடல்கள் இன்று கேட்டாலும் இனிக்கின்ற பாடல்களே !

புகழின் உச்ச்சியில் இருந்த தியாகராஜபாகவதர் , ஸ்டூடியோவில் ஒரே ஒருவரைக் காணும் போது மட்டும் தான் கை கூப்பி வணக்கம் செலுத்துவாராம்! அந்தபெருமைக்கும் , மரியாதைக்குமுரியவராக இருந்தவர் இசைமேதை ஜி.ராமானாதன்.

ஜி.ராமானாதன் போட்ட வர்ண மெட்டுக்கள் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றன.அந்த மெட்டுக்களால் இனிமை நிறைந்த ராகங்கள் பரந்துபட்ட மக்களிடம் போய்ச் சேர்ந்தன.

பாபநாசம் சிவன் – ஜி.ராமநாதன் , தியாகராஜ பாகவதர் கூட்டணியில் வெற்றிபெற்ற பாடல்கள் :

1. அம்பா மனம் கனிந்துனது – படம் : சிவகவி [1943] – தியாகராஜ பாகவதர் – ராகம் : பந்துவராளி – இசை : ஜி.ராமநாதன்

2. ராதே உனக்கு கோபம் ஆகாதடி – படம் : – தியாகராஜ பாகவதர் – ராகம் : செஞ்சுருட்டி – இசை : ஜி.ராமநாதன்

3. சிவபெருமான் கிருபை வேண்டும் – படம் : நவீன சாரங்கதாரா – தியாகராஜ பாகவதர் – ராகம் : சுருட்டி – இசை :
ஜி.ராமநாதன்

4. ஞானக்கண் ஒன்று இருந்திடும் போதினிலே – படம் : – தியாகராஜ பாகவதர் – ராகம் : அசாவேரி – இசை : ஜி.ராமநாதன்

5. சந்திரர் சூரியர் -படம் :அம்பிகாபதி – தியாகராஜ பாகவதர் – ராகம் : மாண்டு – இசை : ஜி.ராமநாதன்

6. உலகில் இன்பம் வேறுண்டோ – படம் :அம்பிகாபதி – தியாகராஜ பாகவதர் – ராகம் : சிம்மேந்திர மத்திமம் – இசை :
ஜி.ராமநாதன்

7. நாடகமே உலகம் – படம் :அம்பிகாபதி – தியாகராஜ பாகவதர் – ராகம் : கமாஸ் – இசை : ஜி.ராமநாதன்

8. சிதம்பர நாத – படம் :திருநீல கண்டர் – தியாகராஜ பாகவதர் – ராகம் : ஹேமாவதி – இசை : ஜி.ராமநாதன்

9. மறைவாய் புதைந்த ஓடு – படம் :திருநீல கண்டர் – தியாகராஜ பாகவதர் – ராகம் : தர்பார் – இசை : ஜி.ராமநாதன்

10. ஒரு நாள் ஒரு பொழுதாகினும் – படம் :திருநீல கண்டர் – தியாகராஜ பாகவதர் – ராகம் : கமாஸ் – இசை : ஜி.ராமநாதன்

11. தீன கருணாகரனே நீலகண்டனே – படம் :திருநீல கண்டர் – தியாகராஜ பாகவதர் – ராகம் : – இசை : ஜி.ராமநாதன்

12. தியானமே எனது மனம் – படம் :அசோக்குமார் – தியாகராஜ பாகவதர் – ராகம் : காபி – இசை : ஜி.ராமநாதன்

13. சற்ப கோண போதன் – படம் :அசோக்குமார் – தியாகராஜ பாகவதர் – ராகம் : ஜோன்புரி – இசை : ஜி.ராமநாதன்

14. மாநில வாழ்வு பெரும் ஆனந்தம் – படம் :அசோக்குமார் – தியாகராஜ பாகவதர் – ராகம் : கல்யாணி – இசை : ஜி.ராமநாதன்

15. உன்னை கண்டு மயங்காத – படம் :அசோக்குமார் – தியாகராஜ பாகவதர் – ராகம் : – இசை : ஜி.ராமநாதன்

16. வதனமே சந்திர பிம்பமோ – படம் : – தியாகராஜ பாகவதர் – ராகம் : சிந்துபைரவி – இசை : ஜி.ராமநாதன்

17. வள்ளலைப் பாடும் வாயால் – படம் : – தியாகராஜ பாகவதர் – ராகம் : செஞ்சுருட்டி – இசை : ஜி.ராமநாதன்

18. சொப்பன வாழ்வில் மகிழ்ந்து – படம் : – தியாகராஜ பாகவதர் – ராகம் : விஜய நகரி + புவன் காந்தாரி – இசை : ஜி.ராமநாதன்

19. கவலையைத் தீர்ப்பது – படம் : – தியாகராஜ பாகவதர் – ராகம் : நாட்டக்குறிஞ்சி – இசை : ஜி.ராமநாதன்

20. அற்ப்புத லீலைகளை – படம் :சிவகாமி – தியாகராஜ பாகவதர் – ராகம் : மத்யமாவதி – இசை : ஜி.ராமநாதன்

21. தில்லையின் நாயகனே – படம் :சிவகாமி – தியாகராஜ பாகவதர் – ராகம் : சிந்துபைரவி +சாமா + பௌளி – இசை : ஜி.ராமநாதன்

22. என் உடல் தனில் – படம் :சிவகவி – தியாகராஜ பாகவதர் – ராகம் : யதுகுலகாம்போதி – இசை : ஜி.ராமநாதன்

23. கிருஷ்ணா முகுந்தா – படம் :சிவகாமி – தியாகராஜ பாகவதர் – ராகம் : நவரோஜ் – இசை : ஜி.ராமநாதன்

24. மன்மத லீலையை வென்றார் – படம் :ஹரிதாஸ் – தியாகராஜ பாகவதர் – ராகம் : சாருகேசி – இசை : ஜி.ராமநாதன்

25. கண்ணா வா மணி வண்ண வா – படம் :ஹரிதாஸ் – N.C.வசந்த கோகிலம் – ராகம் : சுத்த தன்யாசி – இசை : ஜி.ராமநாதன்

26. எனது மனம் துள்ளி – படம் :ஹரிதாஸ் – N.C.வசந்த கோகிலம் – ராகம் : மாண்டு – இசை : ஜி.ராமநாதன்

27. கதிரவன் உதயம் கண்டு – படம் :ஹரிதாஸ் – N.C.வசந்த கோகிலம் – ராகம் : பிலகரி – இசை : ஜி.ராமநாதன்

28. சியாமளா சியாமளா – படம் :சியாமளா – தியாகராஜ பாகவதர் – ராகம் : திலங் – இசை : ஜி.ராமநாதன்

அந்நாளைய நாடகங்களில் பின் பாட்டு , முன்பாட்டு முறைகள் முக்கியத்துவம் வாய்ந்ததவையாக விளங் கியதால் பாடக்கூடியவ்ரக்ளுக்குப் பயிற்சிக களனாகவும் நாடக மேடை திகழ்ந்தது.