தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 5 ] : T.சௌந்தர்

ராக ரசங்களில் ஊற்றெடுத்து நமது உள்ளார்ந்த உணர்வலைகளில் பேருணர்ச்சியை எழ வைத்த சினிமாப் பாடல்கள் ஏராளம்.அந்த வகையில் ராகங்களின் நுண்ணிய கூறுகளிலிருந்து விரிந்தெழுந்து கதை மாந்தரின் இன்னிசைப் பாடல்களாக தோன்றி , இசை ரசிகர்களின் ஆன்மாவை ஊடுருவி ஆழ வேரூண்றியுள்ளமை அவற்றின் சிறப்பாகும்.

அவ்விதம் உருவான பாடல்கள் காலக்கழிவாக போகாமல் மக்கள் நெஞ்சங்களில் எரியும் கனல்களாக, நிலைபெற்ற் பாடல்களாக்கி, மக்களின் இதயத்தில் பதிய வைத்த திரை இசையமைப்பாளர்களின் பேரார்வம வியக்கத்தக்கது.அவர்கள் அடைந்த “தம்மை மறந்த படைப்புப் பரவச” [ Unconscious creative impulse ] அனுபவத்தை மற்றவர்களும் பெற வைத்தது அவர்களது பேராற்றாலாகும்.

மரபு, மரபாக வந்த ராகங்களில் தாம் அடைந்த இன்பத்தை,அனுபவத்தை பிறரும் அனுபவிக்க வேண்டும் என அவர்கள் காட்டிய பேரார்வத்துடிப்பு அதன் மூலகாரணமாய் அமைந்தது.மரபிசையில் தாம் கண்ட ஒலியின்பங்களை தங்கள் காலத்து இசைப் போக்குககளில் பொருத்தமாக இணைத்தும், இழைந்தும் ரசம் ததும்பும் பாடலக்ளைத் தந்து பல சந்ததிகள் தாண்டி ரசிக்கக் கூடிய பாடல்களைத் தந்தார்கள். அவை நாம் பெற்ற பாக்கியமாகும்.

பெரும்பாலான நமது இசையமைப்பாளர்கள் தமிழ் செவ்வியல் இசையில் ஆழ்ந்த அறிவு பெற்றிருக்கவில்லை என்பது பெருங் குறையாக கருதப்பட முடியாது.நாடக மரபில் வந்த அவர்கள் ராகங்கள் பற்றிய அடிப்படையான சில விசயங்களைத் எடுத்துக் கொண்டு உணர்ச்சி வெளிப்பாட்டை, கலை நயத்தோடு காண்பிப்பதில் கரை கண்டவர்களாக விளங்கினார்கள்.தம்மை வளர்த்துக் கொள்ள தமிழ் செவ்வியல் இசை வார்ப்புகளில் உந்துதல் பெற்றார்கள்.

அந்த உந்துதல் அல்லது வேட்கை, ராகங்களை ஜீவநதியாக ஓட வைத்தது.ராகக் கூறுகளை நவீனத்துடன் இணைத்து, இணைத்து மரபுக் கோடு அறுபடாமல் பாதுகாத்தார்கள்.இன்று பல நிலைகளில் ராக இசை குலைந்தாலும்,அங்காங்கே அதன் கோடு தொடர்கிறது.

தமிழ் செவ்வியல் இசையில் எண்ணற்ற ராகங்கள் இருந்தும் ஒரு குறிப்பிட்ட சில ராகங்களின் பிரயோகம் நாடகத்திலிருந்து சினிமா வரை பல தசாப்தங்களாக எதிரொலித்துக் கொண்டேயிருக்கிறது.அவை புதுமை நோக்கில் பயன்படுத்தப்பட்டமையே காரணம் எனலாம்.அதே போல பிற இராகங்கள்

தமிழ் இசையில் ஆதியில் 12.000 ராகங்கள் வழக்கத்தில் இருந்ததென்றும் , அவை வர வரக் குறைந்து வந்ததென்றும் தமிழசை ஆய்வாளர்கள் கூறுவர்.இன்றிருக்கும் பல நூறு ராகங்களில் சிலவே உயிர்ப்புடன் இருப்பதுடன் பொதுமைப்பண்பில் சிறப்பாகவும் இருக்கின்றன.நினைக்க, நினைக்க ஆழ்ந்த இனபம் தரும் திரைப்பாடல்களில் இலைமறை காயாய் அந்த இராகங்கள் விளங்கின.இவ்வகைத் திரையிசைப் பாடல்கள் சமுதாயத்தில் ஒரு புதிய விழிப்புணர்ச்சியை உண்டாக்கியது.

தமிழ் திரையிசையின் பரிணாம வளர்ச்சிப் போக்கில் 1940 களிலிருந்து மாற்றம் கண்டு வளர்ந்துள்ளது.பாடல் இசையமைப்பு முறை , பாடும் முறை , வாத்திய அமைப்பு முறை போன்றவற்றில் அந்தந்தக் காலத்துக்கு ஏற்ப புதுமைகள் முன்னணிக்கு வந்து சென்றுள்ளன.காலத்துக்காலம் ஏற்ப்படும் புதுமைகள் அந்தக் காலத்திலேயே முதன்மை இடத்தை வகித்து பின் அதன் மதிப்பை இழக்க, வேறொரு புதிய முறை அதற்கு முன்பிருந்த முறையிலிருந்து உருவாகுவதால் அவை பழமையிலிருந்து உயிர் பெறுகிறது எனலாம்.

1940 களில் இருந்து 1990கள் வரை வெளியான தமிழ்திரை இசைப்பாடல்களை நினைவிலிருத்துவோமாயின் ராகங்கள் இயக்குசக்தியாக ,உந்துதல் சக்தியாக , சிறப்புக் கூறாக அமைத்துள்ளது.

popdance1990 களின் பின் உலகமயக் கொள்கைகள் ” அரச கொள்கையாக ” அறிமுகமாகியதுடன் பல துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. அது திரை இசையிலும் மிகக் குறுகிய காலத்தில் புகுந்து ஆடிப்படைத்து வருகிறது.புதிய உலகமயக் கொள்கை ஆதரவாளர்களான மேட்டுக்குடியினர்,மேட்டுக்குடியினராகத் துடிக்கும் நடுத்தர ,படித்த வர்க்கத்தினரின் குண இயல்புகளுக்கு தீனி போடுவதாகவும் மாறி கறை படிந்து வருகிறது.

பாரதி சொன்ன ” ஓரிரண்டு வருஷ பழக்கம் உள்ள தமிழ் மக்கள் எல்லோருக்கும் விளங்கும் படி ” என்றில்லாமல் தமிழ் மக்களின் அடையாளமாக இருக்கும் இசையின் கூறுகளை அழித்தொழிக்கும் கலைத் திறனற்ற குப்பைகளை உருவாக்குவதிலும் உந்துதல் காட்டி வருவது வருந்தத் தக்கதாகவே உள்ளது.எல்லாவற்றையும் ஆங்கில மோகக்கண்ணாடி அணிந்து கொண்டு சந்தைச் சரக்காக மாற்றி தமிழ் சார்ந்த மெல்லிசைக்கு கொள்ளி வைத்தாயிற்று.பிறருடையதை எல்லாம் தங்கள் சொந்தச் சரக்காக செய்து தங்கள் பண்பாட்டைப் படுகொலைக்குள்ளாக்குகிறார்கள்.அவர்களை வைத்தே தேசிய கீதம் பாட வைப்பது அறச்சிதைவாகும்.

தமிழ் திரையில் ராகங்கள் தொடர்ச்சியாக பயன்பட்டு வந்ததெனினும் , குறிப்பாக ஒரு சில ராகங்களே தொடர்ச்சியாகப் பயன்பட்டு வந்துள்ளன.இராகங்களின் அடிப்படையான குணாம்சங்களை, மரபு ரீதியாக சொல்லப்பட்டு வந்த நியமநெறிகளை அனுசரித்தும், தாண்டியும் இசை இன்பச் சிதறல்களாக , நவரசங்களை இசை வடிவங்களில் சுதந்திரமாக ராகங்களின் இயல்பையும் அதன் மூலம் உணர்வுகளின் உன்னத நிலைகளையும் அழகாக பொருத்தித் தந்திருக்கின்றார்கள்.ராகங்களை தாம் விரும்புவது போல, தமது ஆளுமைக்கு ஏற்ப படைத்து அந்த அனுபவ உணர்வை பிறரும் உணரும்படி செய்து வெற்றி கண்டிருக்கின்றார்கள்.

நாடக அரங்கில் புகழ் பெற்று சினிமாவிலும் சாதனை படைத்த ராகங்களில் முதன்மையான ஒன்று ஆபேரி ராகம்.தங்கள் படைப்புத் திறனுக்கு வாய்ப்பாக இசையமைப்பாளர் அதிசயக்கத் தக்க வகையில் பயன்படுத்தியிருக்கும் ராகம் இந்த ஆபேரி.மக்கள் இதயங்ககளை வெல்லும் தங்கள் இலக்கில் சுதந்திரமாக எந்த தயக்கமுமில்லாமல் இசை மெட்டுக்களை உருவாக்கி அற்ப்புதங்களைச் செய்து காட்டியிருக்கின்றர்கள் நமது சினிமா இசையமைப்பாளர்கள.

கரகரப்பிரியாதமிழ் செவ்வியல் இசையில் இந்த ராகம் 22 ஆவது மேளகர்த்தாவான கரகரப்பிரியா என்ற ராகத்தின் பிள்ளை ராகம்.கர்நாடக் தேவகாந்தாரி என்று தமிழில் இதற்க்கு இன்னும் ஒரு பெயர் உண்டு. இந்த ராகத்தை ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் பீம்பிளாஸ் என்று அழைக்கின்றனர்.மிகவும் புகழ் வாய்ந்த ராகம்.மிக எளிதில் மக்களின் மனங்ககளில் ஒட்டக்கூடிய ராகம்.உள்ளக்கிளர்ச்சியை ஏற்ப்படுத்தி உணர்வுகளை மேம்பட வைக்கின்ற இந்த ராகம் ,மேம்போக்காக பாடினாலும் மனக்கிளர்ச்சியை உண்டாக்கும் கம்பீரமான ராகம்.நாதஸ்வர இசையில் கேட்க்கும் போது இதன் முழுமையான இன்பத்தை இன்பத்தை நாம் நுகரலாம்.
இந்த ராகத்தில் செவ்வியல் இசையில் கீழ் கண்ட கீர்த்தனைகள் பிரபலமாக உள்ளன.

பஜரே மானச ஸ்ரீ ரகு வீரம் – மைசூர் வாசுதேவாச்சாரியார்
நகுமோ நீ கனலேனி நாதா – தியாகய்யர்
காயா ரோகனேத்யம் – முத்துசுவாமி தீட்சிதர்

இவற்றில் நகுமோ கனலேனி என்ற தியாகராஜர் கீர்த்தனை கர்னாடக இசை மேடைகளில் மிக்க புகழ் பெற்றது.இந்தப் பாடல் பல சினிமாக்களிலும் இடம் பெற்று புகழ் பெற்றது.
அல்லுடுகாரு [ 1990 ] என்ற தெலுங்கு திரைப்படத்தில் இசைமேதை கே.வீ.மகாதேவன் இசையில் , கே.ஜே.ஜேசுதாசும் , பூர்ண சந்தர் என்ற பாடகரும் மிக அற்ப்புதமாக இந்தப் பாடலை பாடியுள்ளனர்.மெய்சிலிர்க்க வைக்கின்ற சங்கதிகள் நிறைந்த கீர்த்தனை.சங்கரதாச சுவாமிகள் தனது நாடகங்களில் அற் ப்புதமாகப் பயன்படுத்திய ராகம்.அந்த ராகத்தின் அதி சியர்ப்புக்களை அனுபவித்ததால தான் திரை இசையமைப்பாளர்களும் விடாமல் பயன்படுத்தி வந்துள்ளனர்.இந்த ராகத்தின் சிறப்பை சொல்ல வார்த்தைகளில்லை.இந்த வாழ்வை முழுமையாகக வேண்டும் என்றால் இந்த ராகத்தை அனுபவிக்க வேண்டும்.

1940 களில் இருந்து தமிழ் – ஹிந்தி சினிமாக்களில் ஆபேரி ராகத்தில் ஏராளமான பாடல்கள் வெளிவந்திருக்கின்றன. இப்போதும் ஆங்காங்கே வந்த வண்ணம் இருக்கிறன.இனிமைமிக்க ஆபேரி ராகத்தில் அமைந்த பாடல்கள் சிலவற்றைப் பார்ப்போம்.

ஆபேரி ராகத்தில் அமைந்த பாடல்களின் முழுமையான் தொகுப்பு அல்ல இது.ஏதாவது தவறு இருப்பின் , விபரம் தெரிந்தவர்கள் சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்ளலாம்.

சூலமங்கலம் சகோதரிகள் பாடும் ” கந்த சஷ்டி கவசம் ” பாடலின் ஆரம்பமே ஆபேரி ராகத்திலேயே தொடங்கும்.

துதிப்போர்க்கு வல்வினை போம் துன்பம் போம் – நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்தோங்கும்
நிஷ்டையும் கைகூடும் நிமலர் அருள்
கந்தர் சஸ்டி கவசந்தனை
அமரர் இடர் தீர அமரம் புரிந்த ∙
குமரன் அடி நெஞ்சே குறி …

என்று ஆரம்பிக்கும் வரிகளும் தொடரும் வீணை இசையும் உள்ளத்தை அந்த இசைக்குள் இழுத்துவிடும்.அப்படி ஓர் ஈர்ப்பை ஏற்ப்படுத்தி மக்களை வசப்படுத்தும் வல்லமை ஆபேரிக்கு தான் உண்டு.

” உள்ளம் உருகுதையா முருகா உன்னடி காண்கையிலே ” என்ற பாடலும் [ பாடலை எழுதியவர் கவிஞர் வாலி] , பாடல் வரிகளுக்கு ஏற்ப ஆபேரி ராகத்தில் அமைக்கப்பட்டது போலும்! T.M .சௌந்தரராஜன் நன்றாகப் பாடிய பாடல்களில் ஒன்றாகும்.

சந்தனமும் ஜவ்வாதும் சேர்ந்து மணம் கமள….

yesudas“சந்தனமும் ஜவ்வாதும் சேர்ந்து மணம் கமள “என்றொரு பக்திப்பாடல் கே.ஜே.ஜேசுதாஸ் பாடி புகழ் பெற்ற பாடல்.1980 ம் வருடம்யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இசைக்கச்சேரியில் முதன் முதலில் கேட்கும்வாய்ப்பு கிடைத்தது.மிக அற்ப்புதமாக , தனது கம்பீரக் குரலால் கே.ஜே.ஜேசுதாஸ் பாடி இசை ரசிகர்களை அன்று பிரமிக்க வைத்தார்.அதை தொடர்ந்த எத்தனையோ வருடங்களாக என்னை ஆக்கிரமித்த பாடல் இது. இந்தப் பாடலை மெல்லிசை கச்சேரியில் ஒரு விதமாகவும் , கர்னாடக இசை நிகழ்ச்சியில் வேறு விதமாகவும் பாடி நம்மை அன்று பரவசபடுத்தினார் ஜேசுதாஸ்.

1. பித்தன் என்றாலும் அவன் பேயன் என்றாலும் -பாடியவர்:என்.சி.வசந்தகோகிலம்
மிகவும் புகழ் பெற்ற பாடல்.1940 களில் மிகவும் புகழ பெற்ற பாடகியாக விளங்கிய என்.சி.வசந்தகோகிலம் என்கிற பாடகி பாடிய பாடல்.ஆபேரியின் மிக அழகான வார்ப்பு. இந்தப் பாடல் சினிமாவில் வந்ததா அல்லது தனிப்பாடலா என்பது பற்றிய விபரம்தெரியவில்லை.அற்ப்புதமான பாடல். இந்த பாடலை சில வருடங்களுக்கு முன்பு சுதா ரகுநாதன் மீண்டும் பாடியிருந்தார்.

2. வீணையின் இனிமையைத் தரும் – படம் :ராமராஜ்ஜியம் [1940 ]
இந்த பாடலும் என்.சி.வசந்தகோகிலம்பாடிய அழகான பாடல்.ஆபேரி ராக உருவத்தில் மெல்லிசையின் கூறுகள் அழகு சேர்க்கின்ற பாடல்.

3. மனமே கணமும் மறவாதே – படம் :சாவித்திரி – பாடியவர்:எம்.எஸ் .சுப்புலட்சுமி – இசை : – கவிஞர் :பாபநாசம் சிவன்
எம்.எஸ் .சுப்புலட்சுமி அவர்கள் மிகவும் சிறப்பாகப் பாடிப் புகழ் பெற்ற பாடல். இசைரசிகர்கள் மனதில் என்றென்றும் வாழும் பாடல்.

4. எப்படி பாடினரோ – தனிப்பாடல் [ Private Albam ]-பாடியவர்:டி.கே..பட்டம்மாள்
தமிழ் பாடல்களை பாடுவதில் முன்னணியில் நின்ற டி.கே.பட்டம்மாள் பாடிய அழகான பாடல்.ஆபேரி ராகத்திற்கு எடுத்துக் காட்டாக இன்று பரவலாக எல்லோராலும் பாடப் படுகின்ற பாடல்.தற்காலத்தில் இந்த பாடலை பாடி அதன் புகழைப் பரப்பி வருபவர் டி.கே.பட்டம்மாளின் பேத்தி நித்யஸ்ரீ.

5 .வெள்ளை தாமரை பூவி இருப்பாள்- பாரதி பாடல் – பாடியவர் :

தனிப்பாடல்[ PRIVATE SONG ] என்று அந்தக்கால இசைத்தட்டாக வந்த பாரதி பாடல்.இந்த பாடலைப் பல கலைஞர்களும் பாடியிருக்கின்றார்கள்.மிக சமீபத்தில் உன்னிகிருஷ்ணனும் பாடியிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.ஆபேரி என்ற ராகம் என்றதும் பலருக்கும் நினைவுக்கு வருகின்ற பாடல இதுவாகும்.பாடசாலைகளில் சரஸ்வதிப்பூஜைகளில் அதிகம் பாடப்படுகின்றபாடல்.

6 . ஆருயிரே அமுதே- படம் : பாண்டுரங்கா [1939 ] – பாடியவர் : கிருஷ்ணமூர்த்தி + சிவபாக்கியம்

ஜோடியாகப் பாடப்படும் காதல் பாடல்.தமிழ் செவ்வியல் இசைப்பாங்கில் நிறைய கமகங்கள் வைத்து அமைக்கப்பட்ட பாடல். 1940 களின் காதல் பாடல்களுக்கு உரிய போக்கு இந்தபாடலில் தென்படும்.பாடியவர்கள மிக அருமையாக , உணர்வு பொங்கப் பாடியிருப்பது சிறப்பான அம்சம்.சில் இடங்களில் மெய் சிலிரிக்க வைக்கும்பாடல்.

7. மானும் மயிலும் ஆடும் சோலை – படம் :அபூர்வ சகோதரர்கள் – பாடியவர்:பி.பானுமதி – இசை : எஸ்.ராஜேஸ்வர ராவ்

ராகத்தை மெல்லிசையால் மறைத்து பாடப்படும் இனிமையான காதல்பாடல்.எஸ்.ராஜேஸ்வரராவ் மெல்லிசை பாடல்களைத் தந்த முன்னோடிகளில் ஒருவர்.மிகச் சிறிய பாடல்.

ஆபேரி ராகத்தில் பிரமிக்க தக்கவகையில் பல வெற்றி பாடலக்ளைத் தந்தவர்களில் முதன்மையான முன்னோடி இசையமைப்பாளர் ஜி.ராமநாதன்.அவருடைய வெற்றிப் பாடல்கள் [Hits songs ] வரிசையை பார்த்தாலே அது புரியும். ஒரே ராகம் தான்ஆனாலும்,பாடலுக்குப் பாடல் மிக வித்தியாசமான நிறங்களை , ரசங்களை வெளிப்படுத்தி வெற்றி கண்டார் ஜி.ராமநாதன்.

8. வாராய் நீ வாராய்- படம் :மந்திரிகுமாரி [ 1949 ] – பாடியவர்கள்:திருச்சி லோகநாதன் + ஜிக்கி – இசை :ஜி ராமநாதன்

ஜி.ராமநாதன் இசையமைத்த இந்தப் பாடல தமிழ் நாட்டையே ஓரூ கலக்குகலக்கிய பாடல் என்று சொல்வார்கள்.இன்று கேட்டாலும் சுவை குன்றாத பாடல்.தமிழ் சினிமாவில் ஹிந்தி திரைப்படபாடலகளின் பாதிப்பில்லாமல் தனித்துவமாக இசையமைக்க முடியும் என்றதைரியத்தை வழங்கிய பாடல் என்று சொல்லலாம்.

9. நம் ஜீவாதரமே செல்வம் -படம்: பொன்முடி 1950 – பாடியவர்கள்: ஜி ராமநாதன்+ டி.வீ.ரத்தினம் – இசை :ஜி ராமநாதன்

ஜி .ராமநாதன் , தனது கனத்த குரலில் எழுச்சியூட்டக் கூடிய வகையில் பாடிய பாடல். பொருள் வளத்தின் முக்கியத்துவத்தை பறை சாற்றும் பாடல். இசைமேதை நௌசாத் இசையமைத்த ” தூ மேரே சாந்து நீ ” என்ற பாடலின் தாக்கம் மிக்க பாடல்.

10. யானை தந்தம் போலே பிறை நிலா – படம் :அமரகவி[1952 ] – பாடியவர்கள்:தியாகராஜபாகவதர்+ பி.லீலா – கவிஞர் :கம்பதாசன் – இசை :ஜி ராமநாதன்

தன்னுடைய இனிமையான குரலில் தியாகராஜபாகவதர் பாடிய அற்ப்புதமான பாடல். மெல்லிசைப் பாங்காக அமைந்தாலும் அருமையான சங்கதிகளைக் கொண்ட பாடல். ஒலிப்பதிவு வசதிகள் குறைந்த அந்தக் காலத்திலேயே மிக நேர்த்தியாக பாடலின் நிறைவில் ஒன்றுக்குள் ஒன்றாக ஒலிக்கின்ற ,இசையுக்திகள் பயன்படுத்தப்பட்டுள்ள பாடல். இன்று கேட்கும் போதும் மலையில் வீசும் குளிர்த் தென்றல் தழுவும் சுகத்தை தருகின்ற பாடல்.
இந்தப்பாடலின் தாக்கம் ஹிந்தி சினிமாவிலும் எதிரொலித்தது என்று சொல்லுமளவுக்கு ஒரு பாடல் இந்தப் பாடல் வெளிவந்த சில வருடங்களுக்கு பின் வெளிவந்தது.

11. பேரின்பமே வாழ்விலே நேர்ந்ததே – படம் :தேவகி[1952 ] – பாடியவர்கள்:திருச்சி லோகநாதன் + பி.லீலா – இசை : ஜி ராமநாதன்

வேகத்துடன் ஆரம்பிக்கும் பாடல்.துரிதமான கமகங்களால் அழகு பெற்றுள்ள பாடல்.வேகமாகப்பாடினாலும் இனிமை குன்றாமல் பாடக் கூடிய பி.லீலா கச்சிதமாகப் பாடிய பாடல்.ஜி.ராமநாதன் அவர்களின் முத்திரை பாடலில் தெரியும்.

12. கேட்பதெல்லாம் காதல் கீதங்களே – படம் :இல்லறஜோதி[1955 ] – பாடியவர்:பி.லீலா – இசை : ஜி ராமநாதன்

இசைக்குயில் பி.லீலா மிகச் சிறப்பாகப் பாடிய பாடல். செவ்வியல் இசை அடிப்படையில் அமைக்கப்பட்ட பாடல்.அந்த காலத்தில் இந்த வகை பாடலை பாடுவதில் புகழ் பெற்றிருந்தவர் , கர்னாடக இசை பாடகி எம்.எல்.வசந்தகுமாரி , இருந்தாலும் பி.லீலாவும் மிக அற்ப்புதமாகப் பாடக்கூடியவர் என்பதை பல பாடல்கள் மூலம் ஜி.ராமநாதன் நிரூபித்திருக்கின்றார்.என்னை பொருத்தவரை பி.லீலா எள்ளளவும்எம்.எல்.வசந்தகுமாரிக்கு குறைந்தவரில்லை என்பது எனது கருத்தாகவே இருந்து வந்துள்ளது.எனது குடும்பத்தில் , குறிப்பாக எனது தந்தை[எம்.எல்.வசந்தகுமாரி அபிமானி ] எனது கருத்தை அவ்வளவாக ஏற்றுக்கொள்வதில்லை.அது ஒரு புறம் இருந்தாலும் பி.லீலா பாடுவதில் எந்த குறையையும் காண முடியாது என்பது தான் உண்மை. செவ்வியல் இசை ரசிகர்களால் ரசிக்கப்பட்ட பாடல்.

12. கண்ணல்ல தூங்கம்மா – படம்:இல்லற ஜோதி 1956 – பாடியவர்:பி.லீலா – இசை :ஜி ராமநாதன்

தாலாட்டு பாடல்களுக்கு பயன்படும் சம்பிரதாயமான ராகங்கள் என இல்லாமல் ஆபேரி ராகத்தில் போடப்பட்ட தாலாட்டு பாடலாகும். இது தமிழ் சினிமாவின் முதல் முயற்சி எனலாம்.இதனைப் பின்பற்றி பின்னாளில் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி காலத்தில் ஆபேரி ராகத்தில்” சிங்கார புன்னகை கண்ணாரக் கண்டாலே” என்ற தாலாட்டுப் பாடலை அமைத்துபெரும் புகழ் அடைந்தார்கள்.

13. சிங்கார புன்னகை கண்ணாரக் கண்டாலே – படம் :மகாதேவி [1957 ] – பாடியவர்கள்:பாலசரஸ்வதிதேவி +ராஜேஸ்வரி – இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி- கவிஞர் :கண்ணதாசன்.

இந்தப்பாடலின் இனிமையும்,அதனால் அடைந்த புகழும் தமிழ் சினிமாவில் தாலாட்டு பாடல் என்றாலே ஆபேரி ராகம் என்று ஒரு trendஉருவாகியது. தாலாட்டுப்பாடல்களாக வெளி வந்து மாபெரும் வெற்றியடைந்தது.

தாய்மையின் உணர்வை மிக அழகாக வெளிப்படுத்தும் மென்மையான குரல் வளம் கொண்ட பாலசரஸ்வதிதேவி அழகாகப் பாடிய பாடல்.இதே பாடல் படத்தில் சிறை காட்சியிலும் ஒலிக்கும்.மனதை நெகிழ வைக்கும் முறையில் ராகமாலிகையாக ஒலிக்கும்.மிக மிக உருக்கமாக ஒலிக்கும்பாடல். தியேட்டரில் இந்த பாடலைக் கேட்டு அழாதவர்கள் இருந்திருக்க முடியாது எனலாம்.

14. ஏன் பிறந்தாய் மகனே ன் பிறந்தாயோ- படம் :பாகப்பிரிவினை [1959 ] – பாடியவர்கள்:TMS – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி – கவிஞர் :கண்ணதாசன் ]

கை , கால்கள் வழங்காத ஒருவன் தன மகனை தாலாட்டும் விதத்தில் பாடப்பட்டாலும் , தன மனைவியையும் அவள் தனக்காக செய்திருக்கும் தியாகத்தையும் போற்றும் ஓர் அருமையான பாடல்.தாலாட்டு என்றாலும் தன மனைவிக்கு தன்னால் கிடைக்காத மகிழ்க்ச்சி தன மகனாலாவது கிடைக்க வேண்டும் என சிறப்புறுத்தி காட்டுவதாகவே பாடல் அமைந்துள்ளது.

” மண் வளர்த்த் பொறுமை எல்லாம் மனதில் வளர்ததவளாம் ” என்ற வரிகளை பாடும் போது பாடலின் உணர்ச்சி நம்மைஆட்கொண்டுவிடுகிறது.அங்கே ஆபேரி துலங்குகிறது.

15. மலர்ந்தும் மலராத பாதி மலர் போல – படம் :பாசமலர் [1960 ] – பாடியவர்கள்:TMS + பி.சுசீலா – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி -கவிஞர் :கண்ணதாசன்

இந்தப் பாடல் இன்றளவும் சுவை குன்றாமல் இனிக்கின்ற பாடல். என்றென்றும் அழியாத பாடலாக காலத்தை வென்று நிற்கின்ற பாடலாகவும் உள்ளது எனலாம்.மெல்லிசை வார்ப்பில் அமைந்த அற்புதப் பாடல்.ராகத்தை மறைத்து உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மெல்லிசை மன்னர்களின் சாகாவரம் பெற்ற பாடல்.போலித்தனமும் , உள் ஒன்று வைத்து புறம் ஒன்று என வாழாத , எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத,உண்மையான சகோதர பாசத்தை , அதன் ஆன்மாவை ஊடுருவி சென்ற பாடல்.

16. சின்ன அரும்பு மலரும் – படம்:பங்காளிகள் [1960 ] – - பாடியவர்கள்: திருச்சி லோகநாதன் + பி.சுசீலா -இசை :எஸ்..தட்சிணாமூர்த்தி
தமிழ் சினிமாவில் வந்த தாலாட்டுப்பாடல்களில் மிகவும் முக்கியமான பாடல்.திருச்சி லோகநாதன் தனியேயும் , பி.சுசீலா தனியேயும் பாடிய பாடல.இருவரும் மிக அற்ப்புதமாகப்பாடிய பாடல்.தாலாட்டு பாடலில் உணர்ச்சி செறிவுமிக்க இன்னுமொரு பாடல.

ஜி.ராமநாதன் இசையமைத்த ஆபேரி ராகப் பாடல்கள்:

17. அன்பே என் ஆரமுதே வாராய் – படம்:கோமதியின் காதலன்1956 – பாடியவர்: சீர்காழி +ஜிக்கி – இசை :ஜி ராமநாதன்
ராகத்தில் புதைந்திருக்கும் ஜீவன்களை வெளிக்கொண்டு வருவதில் நிபுணரான ஜி.ராமநாதன் அவர்களின் இசையில் உணர்வுகள் ததும்பும் காதல் பாடல்.ஜனரஞ்சகக் கற்பனையை உசுப்பிவிடும் பாடல்.ஆனந்தம் என்று சொல்வதா ..? அற்ப்புதம் என்று சொல்வதா..? அமுதம் என்று சொல்வதா..?இந்த பாடலை பாடிய .சீர்காழி கோவிந்தராஜனும், ஜிக்கியும் ஒப்புவமை இல்லாமல் பாடியிருக்கின்றார்கள்.சுருக்கமாகச் சொன்னால் மெய் சிலிர்க்க வைக்கும் பாடல் இது.
இதை எழுதும் பொது எனது அபிமான இசையமைப்பாளர் ஜி.ராமநாதனை நினைக்காமல் இருக்க முடியவில்லை.

18. கண்ணிலே இருப்பதென்ன கன்னி இள மானே – படம் :அம்பிகாபதி[1956 ] – பாடியவர்:பி.பானுமதி- இசை : ஜி ராமநாதன்
ஆபேரி ராகம் முழு ஜொலிப்போடு முழங்கும் அதே நேரம் ஜனரஞ்சக ரீதியிலும் மாபெரும் வெற்றி பெற்ற பாடல்.இதுவும் ஜி.ராமநாதன் அவர்களின் முத்திரைப்பாடல்.மெய்சிலிர்க்க வைக்கும் பாடல்.பி.பானுமதி பாடிய இந்தப் பாடல் தமிழ் மக்கள் என்றென்றும் ரசிக்கும் பாடல்களில் ஒன்றாகும்.பாட்டு பாட வராத என் தாத்தா ஒருவர் ” ஒரு கன்னி இள மானே ..ஒரு கன்னி இள மானே..” என்று பாடித்திரிந்த பாடல்.அம்பிகாபதி படத்தின் மிகப்பெரிய வெற்றி பாடலகளில் ஒன்று.இந்த பாடல் மகிழ்ச்சியாகப் பாடப்படாபாடல்.இந்த பாடலை சோகப்பாடலாக டி.எம். சௌந்தரராஜன் உணர்வு பொங்கப் பாடியிருப்பார். சிறிய பாடலாக அது அமைந்தாலும் உள்ளத்தைக் கவரும் பாடல் என்பதில் ஐயமில்லை.

19. ராஜயோகமே பாரீர் – படம் : வணங்காமுடி[1959 ] – பாடியவர்:பி.சுசீலா – இசை : ஜி ராமநாதன்
படகில் உல்லாசமாக தோழியருடன் நாயகி பாடும் பாடல்.நாமும் அந்த பயணத்தில் போகும் உணர்வை தருகின்ற பாடல்.உல்லாச உணர்வை வெளிப்படுத்த பெண்கள் குரல்களில் அற்ப்புதமான ஹோரஸ் பயபடுள்ளது.பி.சுசீலா வழமை போல மிகஅருமையாகப்பாடிய பாடல்.ஜி.ராமநாதவெள்ளத்தின் பிரமிக்க வைக்கும் கற்பனைப் பாடல்.
இந்தப்பாடலின் முடிவில் மிக அருமையான ஒரு மிக்ஸ் செய்திருப்பார் ஜி.ராமநாதன்.படத்தில் நாயகி இந்த பாடலை பாடி முடிக்கும் தருணத்தில், நாயகன் பாடல் ஹம்மிங்கில் ஆரம்பிக்கும்.முதல் பாடலின் இறுதியிலும் , நாயகன் பாடும் பாடலின் தொடக்கமும் இணைக்கப்படும்.அந்தப் பாடல் சீர்காழி கோவிந்தராஜன் பாடும் ” மலையே உன் நிலையை நீ பாராய் ..” என்ற ஜோன் புரி ராகப்பாடல்.நல்ல இணைவாக இரண்டு ராகங்களும் இணைக்கப்பட்டிருக்கும்.
20. பூவாமராமும் பூத்ததே -படம்: நான் பெற்ற செல்வம் – பாடியவர்கள்: டி .எம் சௌந்தரராஜன் + ஜிக்கி – இசை :ஜி ராமநாதன்
சௌந்தரராஜன் + ஜிக்கி இணைந்து ஜோடியாக பாடிய நல்ல பாடல்களில் இந்த இனிமையான காதல் பாடலும் ஒன்று.உருண்டோடும் தாளத்தில் ஜிக்கியின் விறுவிறுப்பான கமகங்கள் ஜி.ராமனாதனின் கம்பீரமான இசையமைப்பையும் காட்டும் அற்ப்புதமான பாடல்.

21. கண்களின் வெண்ணிலவே – படம்:மணிமேகலை 1959 – பாடியவர்கள்: டி.ஆர்.மகாலிங்கம்+ பி.பானுமதி – இசை :ஜி ராமநாதன்
ஜி.ராமனாதனின் இன்னுமொரு கம்பீரமான பாடல்.ஓங்கி குரல் எடுத்து உச்சஸ்தாயியில் பாடும் T.R.மகாலிங்கம் + P.பானுமதி பாடிய பாடல்.அமைதியாக தொடங்கும் பாடல் சரணங்களில் உச்சங்களைத் தொடும் பாடல்.ராமனாதனின் முத்திரை பாடல்.

22. வெள்ளிப்பனி மலையின் மீதுலாவுவோம்- படம்:கப்பலோட்டிய தமிழன் 1960- பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன் – இசை :ஜி ராமநாதன்
இடையே இராகங்கள மாறி , மாறி ராகமாலிகையாக வருகின்ற பாடல் . முதல ஆரம்பம் ஆபேரியில் கம்பீரமாக ஒலிக்கின்ற பாடல் . திருச்சி லோகநாந்தனும் , சீர்காழி கோவிந்தராஜனும் கம்பீரமாகப் பாடிய பாடல்.

23. கண்ணன் மன நிலையை- படம்:தெய்வத்தின் தெய்வம்1963 – பாடியவர்கள்: இசை:எஸ்.ஜானகி – இசை :ஜி ராமநாதன்
சிங்காரவேலனே தேவா பாடல் வெற்றியின் தொடர்ச்சியாக எஸ்.ஜானகி பாடிய பாடல்.இதுவும் ஒரு புகழ் பெற்ற பாடல்.

24.அறம் காத்த தேவி- ஏ.எம்.ராஜா + ஜிக்கி – இசை: ஜி ராமநாதன்
மென்மையாகப் பாடக்கூடிய ஏ.எம்.ராஜாவையே கம்பீரமாக பாட வைத்த ஜி.ராமநாதனின் பாடல்.பின்னணியில் ஹோரஸ் மிக எழுச்சி தரும் வகையில் அமைந்த பாடல்.உற்சாகம் தரும் பாடல்.ஜிக்கி மிக எழுச்சியாகப் பாடிய பாடல்.

25. காதலாகி கசிந்து- படம்:திருவருட்ச்செல்வர் – பாடியவர்கள்: டி .எல் .மகாராஜன் – இசை : கே.வீ .மகாதேவன்
திருச்சி லோகநாதனின் மகன் மகராஜன் 13 வயதில் , T.M.சௌந்தரராஜனுடன் இணைந்து மிக அருமையாகப் பாடிய பாடல்.ஆபேரி ராகத்தி மிக அழகாகப் பாடியிருந்தார்.
26. மாசில் வீணையும் – படம்:திருவருட்ச்செல்வர் – பாடியவர்:T.M.சௌந்தரராஜன்- இசை : கே.வீ .மகாதேவன்
காதலாகி என்ற பாடலைத் தொடர்ந்து இந்த பாடலல்ஒலிக்கும்.
27. கோமாதா என் குல மாதா -படம்:சரஸ்வதி சபதம் – பாடியவர்:பி.சுசீலா – இசை : கே.வீ .மகாதேவன்
மிக அழகாக ஆபேரியின் உருவம் தெரியும் படியான ராக ஆலாபனையுடன் தொடங்கும் பாடல்.கோரஸ் இசையும் சேர்ந்து இனிமை ததும்புகின்றபாடல்.

28. இசைத் தமிழ் நீ செய்த -படம்: திருவிளையாடல் – பாடியவர் – தீ.ஆர்.மகாலிங்கம் – இசை : கே.வீ .மகாதேவன்
K.V.மகாதேவனின் சக்தி மிக்க படைப்பு.கம்பீரமாக இறைவனிடம் வேண்டும் அதே நேரத்தில் உருக்கமும் ததும்பும் பாடல்.T.R.மகாலிங்கம் அர்ப்புதமாக்ப் பாடிய பாடல்.

29. மயக்கம் எனது தாயகம் – படம்:குங்குமம் – பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன் இசை : கே.வீ .மகாதேவன்
K.V.மகாதேவனின்அழகான பாடல். சோகத்திலும் அழகாக மிளிரும் பாடல்.சௌந்தரராஜன் மென்மையாக பாடிய பாடல்.கம்பீரமான ஒரு ராகத்தில் தன்னிரக்கப் பாடல ஒன்றை தந்து தன்னை இசைமேதை என்று K.V.மகாதேவன் அவர்கள் நிரூபித்த பாடல்.தன மன வேதனையை ,ஆழ்ந்த வலியுடன் வெளிப்படுத்தும் இந்த பாடலில் வாத்திய இசை அருமையாக இருக்கும்.

30. சிங்கார வேலனே தேவா -படம்: கொஞ்சும் சலங்கை – பாடியவர்: எஸ்.ஜானகி – இசை : எஸ்.எம்.சுப்பைய்யா நாயுடு.
மகிழ்ச்சிமயமான மனோநிலையை வெளிப்படுத்தவும் , உள்ளத்தில் அழகுணர்ச்சியையும் உண்டாக்கும் ஆற்றலும் கொண்ட நாதஸ்வர இசைநம் ஆன்மாவை நிறைத்துவிடும் வல்லமை கொண்டது.திரைப்படப்பாடல்களில்நாதஸ்வர இசையும் இரண்டறக்கலந்து இணைந்த பலவெற்றிப்பாடல்கள் நாதஸ்வர இசையை மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமாக்கியது.
அதன் ஆரம்பமாக கொஞ்சும் சலங்கை [ 1962] படம் அமைந்தது.அந்தப்படத்தில் இடம் பெற்ற ” சிங்கார வேலனே தேவா” என்ற பாடல்ஆபேரி ராகத்தில் அமைக்கப்பட்டு மாபெரும் வெற்றியடைந்தது.அந்தக்காலத்தில் இது போன்ற செவ்வியல் இசை கலந்த [ SEMICLASSICAL SONGS ]பாடல்களைப் பாடுவதில் மிகவும் சிறப்பு வாய்ந்த பாடகியாக விளங்கிய திருமதி .பி.லீலா பாட அழைக்கப்பட்டார்.எனினும் ” நாதஸ்வர சுருதிக்கு இணையாக எஸ்.ஜானகி தான் சிறப்பாகப் பாடக்கூடியவர் ” என்று எஸ்.ஜானகியை , பி.லீலா சிபார்சு செய்ததால் எஸ்.ஜானகிக்கு அந்த வாய்ப்பு போனது.அந்தப் பாடலை இசையமைத்தவர் எஸ்.எம்.சுப்பைய்யா நாயுடு.”அந்த பாடலின் மெட்டு தேவார இசைக்கு போடப்பட்ட மெட்டு என்ற சர்ச்சைகள் ஏற்ப்பட்டு ,சில தடைகளை தாண்டி தான் வரவேண்டியிருந்தது “என ஆய்வாளர் வாமனன் குறிப்பிடுவது மனம் கொள்ளத் தக்கது.எனினும் ஆபேரி ராகத்தை பிரபல்யப்படுதிய பாடல்களில் மிக முக்கியமான பாடலாக இன்று வரை விளங்க்குகின்றது.இந்த பாடலில் ” சாந்தா ..! ஏன் நிறுத்தி விட்டாய் ?உன் பாடலை கேட்க ஓடோடி வந்த என்னை ஏமாற்றாதே” என்ற ஜெமினி கணேஷன் பேசும் வசனங்களும் புகழ் பெற்றது எல்லோரும் அறிந்ததே !

31. தங்க நிலவில் கெண்டை இரண்டு – திருமணம் -பாடியவர்கள்:ஏ.எம்.ராஜா +ஜிக்கி – இசை : எஸ்.எம்.சுப்பைய்யா நாயுடு
A.M.ராஜாவும் ஜிக்கியும் இணைந்து பாடிய காதல் பாடல் வரிசையில் மிகவும் இனிமையான பாடல் இது .ஆபேரியின் அழகுகளை மெல்லிசை வார்ப்பில் தந்தார் மிகப் பழம் பெரும் இசை மேதை எஸ்.எம்.சுப்பைய்யா நாயுடு.

32. வாராயோ வெண்ணிலாவே – படம்:மிஸ்ஸியம்மா [ 1955 ] – பாடியவர்கள்: ஏ.எம்.ராஜா + பி.லீலா – இசை : எஸ்.ராஜேஸ்வர ராவ்
மெல்லிசையின் முன்னோடி இசையமைப்பாளர் எஸ்.ராஜேஸ்வர ராவ் அவர்களின் இசை வீச்சு இந்த பாடல்.அந்த கால கட்ட இசையை கவனித்தால் இந்த பாடல் எவ்வளவு புதுமையான பாடல் என்பது புரியும்.இந்த பாடல் ஹிந்தியிலும் வெளிவந்து புகழ் பெற்றது.இந்த பாடல் ஹிந்தி படமாக்கப்பட்ட போது அந்த படத்தின் இசையமைப்பாளராக இருந்த இசை மேதை ஹேமந்த் குமார் இந்த\எ பாடலை அப்படியே பயன்படுத்தினார்.பொதுவாக ஹிந்தி பதிப்பில் பாடல்களை மாற்றுவதுஇ அந்தக் கால வழமையாக இருந்தது.
ஆபெரியின் இந்த இனிய இசையை யாரால் மறுக்க முடியும் ? என்பது மட்டுமல்ல இனிமையாகப்பாடிய ஏ.எம்.ராஜா + பி.லீலா இணையும் முக்கியமானதாகும்.

33. சுய நலம் பெரிதா – படம்:யார் பையன் – பாடியவர்:கண்டசாலா – இசை : எஸ்.ராஜேஸ்வர ராவ்
சோக இசையாக ஒலிக்கும் இந்த பாடலும் புதிய ஒரு கோணத்தில் ஆபேரியை காட்டுகிறது.சோக ரசத்துடன் மனம் தளராத கம்பீரத்தையும் கண்டசாலா தனது குரலில் வெளிப்படுத்தும் போது இனம் புரியாத சோகம் நம்மை வாட்டுகிறது.

34. தென்றல் உறங்கிய போதும் – படம்:பெற்ற மகனை விற்ற அன்னை [ 1958 ] – பாடியவர்கள்:ஏ.எம்.ராஜா + பி.சுசீலா -இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
ஆரம்ப கால மெல்லிசை மன்னர்களின் தேனிலும் இனிக்கின்ற அற்புதமான பாடல்களில் இந்த பாடல் மிக முக்கியமான பாடல்.நெஞ்சில் உற்சாகம் பீறிட வைக்கின்ற பாடல்.காதலர்களின் குதூகலத்தைத் துல்லியமாக வெளிப்படுத்தியிருக்கின்ற பாடல்.இடையிடையே ஹம்மிங் இணைந்து நம்மை பரவசப்பட வைக்கின்ற பாடல்.
இசைமேதை நௌசாத் இசையமைத்த ஹிந்தி பாடலான ” ” என்ற பாடலின் பாதிப்பில் உருவான பாடல் தான் என்றாலும் தன்னளவில் முழுமை பெற்ற பாடல்.

35. வெள்ளிநிலா வானத்திலே வந்து போகுதடா – படம்:காதல் படுத்தும் பாடு – பாடியவர்: பி.சுசீலா – இசை :டி.ஆர்.பாப்பா
சோக ரசத்தில் புதிய கோணத்தில் காட்டப்படுகின்ற அற்ப்புதமான பாடல்.மிகத் திறமை வாய்ந்த டி.ஆர்.பாப்பா அவர்களின் இனிய கற்பனை.இனிமையான வாத்திய இசை கொண்ட பாடல்.உணர்வுகளை கிளர்த்தி ,சோகத்தில் நம்மை அமிழ்த்துகின்ற பாடல்.

36. வேலோடு விளையாடும் முருகையா – படம்:சித்ராங்கி [ 1964] – பாடியவர்: பி.சுசீலா – இசை : வேதா
செவ்வியல் இசைப்பாங்கில் அமைக்கப்பட்ட பாடல்.பரவலாக ஹிந்தி பாடல்களை ” கொப்பி “பண்ணும் இசையமைப்பாளர் என்று அறியப்பட்ட வேதா என்ற இசை மேதையின் பாடல்.
வேதா தனித்தனமையுடன் இசையமைக்கும் திறமை கொண்டவர் என்பதை பல பாடல்கள் மூலம் நிரூபிக்கலாம்.அதில் ஒன்று இந்தபாடல்.

37. பழமுதிர்ச்சோலையிலே பார்த்தவன் -படம்: குழந்தையும் தெய்வமும் [1965] – பாடியவர்: பி.சுசீலா- இசை : எம்.எஸ். .விஸ்வநாதன்
செவ்வியல் இசைப்பாங்கில் மெல்லிசை மன்னர் இசையமைத்த பாடல் இது.

38.மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு – படம்:கந்தன் கருணை – பி.சுசீலா இசை :கே.வீ .மகாதேவன்
நாதஸ்வர இசையில் மனம் பறி கொடுத்த இசைமேதை கே.வீ.மகாதேவனின் அழகான கற்பனையில் அமைந்த பாடல்.நாதஸ்வர இசையையும் இணைத்திருப்பது மனத்தை பரவசப்படுத்துகிறது.மங்களகரமான பாடல்.நாதஸ்வரத்தின் மகிமையா இல்லை சுசீலாவின் மகிமையா இல்லை மகாதேவன் மகிமையாஎன்று ஆச்சர்ய பட வைக்கின்ற பாடல்.

39. திருப்பரம் குன்றத்தில் நீ சிரித்தாள் – படம்:கந்தன் கருணை – பி.சுசீலா + சூலமங்கலம் ராஜலட்சுமி இசை:கே.வீ .மகாதேவன்
மிகவும் இனிமையான பாடல். இசையமைப்பாளர் குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைத்த பக்திப் பாடல், படத்திற்கு பொருத்தமான பாடல் என்பதால் இணைக்கப்பட்ட பாடல்.

40. கல்யாண சாப்பாடு போடு முன்னே – படம்:கந்தன் கருணை – எஸ் .ஜானகி இசை:கே.வீ .மகாதேவன்
ஆபேரி ராகத்தை மென்மையாகக் மெல்லிசைப் பாங்கில் குழைத்து வரும் பாடல்.மிகமேன்மையாக எஸ்.ஜானகி பாடிய ஆரம்பகாலப் பாடல்.
-
42. எஜமான் பெற்ற செல்வமே என் சின்ன எஜமானே – படம்:அள்ளி பெற்ற பிள்ளை- பாடியவர்:ஜி.ராமநாதன் – இசை :கே.வீ .மகாதேவன்
இசைமேதை ஜி.ராமநாதன் அவர்கள் , இசை மேதை கே.வீ. மகாதேவன் அவர்கள் இசையில் பாடிய அபூர்வமான பாடல்.மிக அருமையாகவே தமிழ் சினிமாவில் இவ்விதமான இணைவுகள் நடைபெற்றுள்ளது.உணர்ச்பூர்வமாக பாடும் ஆற்றல்மிக்க ஜி.ராமநாதன் சிறப்பாகப் பாடிய பாடல்.படத்தில் அசரீரி யாக ஒலிக்கும்.இறந்த தனது எஜமானின் குழந்தையை குதிரை தாலாட்டுவது போன்ற காட்சியில் ஒலிக்கும் பாடல்.

43. பூமாலையில் ஓர் மல்லிகை – படம்:ஊட்டி வரை உறவு – டி.எம் சௌந்தர்ராஜன் +பி.சுசீலா இசை :எம்.எஸ்.விஸ்வநாதன்
ஆபேரி ராகத்தின் சிறப்பு என்னவென்றால் ஹம்மிங்கில் குரலில் அதன் பாவங்களை காட்ட ஏதுவான ராகம். இது பொதுவாக நாதஸ்வர இசையின் பாதிப்பு என்று தான் சொல்ல வேண்டும்.இந்த ராகம் நாதஸ்வரத்தில் மேன்மை பெற்று விளங்குவதால் , அதை கேட்டுக்கும் இசையமைப்பாளர்கள் அதன் பாதிப்பால் தங்களும் அவ்விதமான உத்திகளைச் சேர்த்து அந்த ராகத்தின் மகிமையை பாடல்களில் பயன்படுத்தி வெற்றி பெற்றிருக்கின்றார்கள்.
நாடகப்பாங்கில் ஓங்கிக் குரல் எடுத்துப் பாடும் முறையை இந்த பாடலின் ஆரம்ப ஹம்மிங் மிக அழகாக நினைவூட்டி மெல்லிசையின் பக்கம் இதமாக இணைத்திருக்கும் கைவண்ணம் அற்ப்புதமானது.பாடலின் பல்லவி நௌசாத் அவர்களின் பாடல் ஒன்றின்[ Tu Mera Chand mein tere chandni – Film : Dillagi – Music : Nausad ]ஆரம்ப புல்லாங்குழல் இசையை தழுவியதாக அமைந்தது.ஆபெரி ராகத்திற்க்கு பெருமை சேர்த்த பாடல்களில் இதுவும் முக்கிய பாடலாகும்.

44.கண் ஒரு பக்கம் நெஞ்சொரு பக்கம் – படம்:நிறைகுடம் – டி.எம் சௌந்தர்ராஜன் + பி.சுசீலா இசை :வீ.குமார்
பொதுவாக இந்தப் பாடலை மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் பாடல் என்றே என்ன வைக்கும் பாடல் மேல் சொன்ன ” பூ மாலையில் ஓர் மல்லிகை ” பாடலின் தாக்கம் இந்த பாடலிலும் உண்டு.வாத்திய அமைப்பிலும் மெல்லிசையின் தாக்கம் உள்ள பாடல்.இனிமையான பல பாடல்களைத் தந்த வீ.குமாரின் நல்ல ஆபேரி ராகப்பாடல்.

45. ராகங்கள் பதினாறு உருவான வரலாறு – படம்:தில்லு முல்லு – எஸ்.பி.பாலசுரமணியம் இசை :எம்.எஸ்.விஸ்வநாதன்
மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் படைப்பாற்றல் பிரமிக்கத் தக்கது.காலத்திற்க்கேற்ப மெல்லிசைக்கு முக்கியத்துவம் கொடுத்து இசையமைக்கப்பட்ட ஆபேரி

46. கவிதை அரங்கேறும் நேரம் – படம்:அந்த 7 நாட்கள் – பி.ஜெயச்சந்திரன் +எஸ்.ஜானகி இசை எம்.எஸ்..விஸ்வநாதன்
மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் சற்று செவ்வியலிசை கலந்து உணர்வுகளைக் கிளர்த்துகின்ற பாடல். குறிப்பாக வாத்திய இசை மிக அருமையாக அமைக்கப்பட்டுள்ள பாடல்.

47.கண் வழி புகுந்து – படம்:தூக்கு தூக்கி – T.M.சௌந்தரராஜன் + M.S.ராஜேஸ்வரி – இசை : ஜி.ராமநாதன்

சௌந்தரராஜனின் ஆரம்ப கால் காதல் பாடல்.கண்டசாலாவின் பாணியில் பாடினாரோ என்று எண்ணத் தோன்றும் பாடல்.ஜி.ராமநாதனின் சங்கதிகள் அங்கங்கே விழுகின்ற பாடல்.

48. நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் -படம்: போலீஸ்காரன் மகள்- பி .பி.ஸ்ரீநிவாஸ் இசை ;எம்.எஸ்.விஸ்வநாதன்
விஸ்வநாதன்- ராமமூர்த்தியின் புதுமைமிக்க பாடல்.நோகாமல் பி.பி.ஸ்ரீநிவாஸ் பாடிய பாடல்.

49.பொனென்ன பூவென்ன கண்ணே – படம்:அலைகள் 1973 – பி.ஜெயச்சந்திரன் -இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
பி.ஜெயச்சந்திரன் பாடிய ஆரம்பகாலப் பாடல் .எப்போது கேட்டாலும் திகட்டாத பாடல்.விஸ்வநாதனின் ஆற்றல் மிக்க பாடல்.மனதில் சலனங்களை எழுப்பும் பாடல்.

50.ஆடும் ஊஞ்சலைப் போலே – படம்:என்தங்கை [1952] – டி.ஏ. மோதி + பி.லீலா
G.கோவிந்தராஜுலு நாயுடு என்ற பழம் பெரும் இசையமைப்பாளர் [ T.G.லிங்கப்பாவின் தந்தை ] இசையமைத்த பாடல்.

51. மலைச் சாரலில் இளம் பூங் குயில் – ஒரு குடும்பத்தின் கதை – கே.ஜே.யேசுதாஸ் + சசிரேகா – இசை: வீ.குமார்

52. பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய் – தணியாத தாகம் [1982 ] – மலேசிய வாசுதேவன் + எஸ்.ஜானகி- இசை:A.A.ராஜ்
மிக அருமையான மெல்லிசைப்பாடல் ராஜ் என்ற இசையமைப்பாளர் அதிகம் பேசப்படாதவர்.ஒருதலை ராகம் படத்தில் டி.ராஜேந்தருடன் பணியாற்றியவர்.அந்தப் பாடல்கள் பற்றிய சிறு சர்ச்சைகளும் இடம் பெற்றன.A.A.ராஜ் பழம்பெரும் இசையமைப்பாளர்களான எஸ்.ராஜேஸ்வரராவ் , மாட்டர் வேணு போன்றவர்களிடம் உதவியாளராகப் பணியாற்றியவர்.

மிகக் குறுகிய காலத்தில் வேகமாகவும் தரமாகவும் இசையமைக்கும் ஆற்றல் பெற்ற இசைஞானி ஒவ்வொரு ராகத்திலும் மற்ற இசையமைப்பாளர்கள் எல்லோரும் இசையமைத்த ஒட்டு மொத்த எண்ணிக்கையளவு பாடலகளை சில சமயம் அதற்க்கு அதிகமாகவும்இசையமைத்தவராவார். ஆபேரி ராகத்தில் வியக்கத்தக்க அளவில் பல வண்ணங்களில் வித விதமான பாடல்களைத்தந்து அதிசயிக்க வைத்திருப்பார் இசை ஞானி இளையராஜா.

இளையராஜா இசையமைத்த ஆபேரி ராகப் பாடல்கள்:

01 . அன்னக்கிளி உன்னைத் தேடுதே – படம்:அன்னக்கிளி 1976- பாடியவர் : எஸ்.ஜானகி – இசை: இளையராஜா
முதல் படத்திலேயே மிக அருமையான மெட்டுகளை தந்த இசைஞானியின் அபாரத்திறமைக்கு எடுத்துக்காட்டான பாடல்.பாடலின் ஆரம்ப ஹம்மிங் இனம் புரியாத உணர்வுகளைக் கிளர்த்தி விடும்.என் பதின்ம வயதில் , என் ஞாபகத்தில் இந்த பாடலை கேட்ட அந்த இடத்திலேயே என்னை நிற்க வைத்த முதல் பாடல். எங்கு கேட்டாலும் அங்கேயே நின்று பாடல் முழுதும் கேட்க வைத்த பாடல்.இந்த பாடலின் ஹம்மிங் அவ்வளவு ஈர்ப்பாக இருந்தது.ஒரு தேவதை என்னை அழைப்பதாக நான் உணர்ந்த பாடல்.இனம் புரியாத சோகம் என்னைத் தாக்கியது. ஆனால் இந்த படத்தை கிட்டத்தட்ட 30 வருடங்கள் கழித்தே பார்த்தேன்.பாடலை முதன்முதலில் கேட்ட அந்த பனங் கூடலும் , சோழகக் காற்றும் என்றென்றும் என் நினைவில் இருந்து நீங்காது.

02 . குயிலே கவி குயிலே- படம்:கவிக்குயில் 1977 – எஸ்.ஜானகி – இசை: இளையராஜா
புல்லாங்குழலில் ஜால வித்தைகளை காட்டும் ஆரம்ப கால பாடல்களில் இதுவும் ஒன்று.வாத்திய பிரயோகங்களில் புதுமை காட்டிய பாடல்.ஆரம்ப இசையில் தொடங்கி , இடை இசை எல்லாவற்றிலும் நாட்டுபுறத்தின் அழகை காட்டும் பாடல்.கண்ணை மூடி கேட்டால் கிராமிய அழகுகள் விரிந்து செல்ல வைக்கும் பாடல்.

03 . செந்தூரப்பூவே செந்தூரப்பூவே-படம்: பதினாறு வயதினிலே – 1977 – எஸ்.ஜானகி – இசை: இளையராஜா
இந்தப் பாடலில் மேற்க்கத்திய ஹார்மொனி இசையின் இணைப்பு மிக அருமையாக இருக்கும்.இந்த காலகட்டத்தில்17ஆம் நூற்றாண்டின் சிம்பொனி இசையின் கூறுகளை இளையராஜா தமிழ் சினிமாவில் இணைக்கத்த் தொடங்கிய காலமாகும்.அவரின் இசைக் கனவுகள் நனவாகத் தொடங்கிய காலம்.அந்த இசையின் துல்லியம் செந்தூரப்பூவே பாடலில் துல்லியமாக விழுந்திருக்கிறது.தமிழ் நாடுப்புற இசையின் வீச்சும் ,மேலை ஹார்மொனி இசையின் இனிமையும் ஆபேரி ராகத்தில் பின்னிப் பிணைக்கப்பட்டிருக்கும் அதிசயத்தை நிகழ்த்தினார்.இந்த பாடலில் இளையராஜாவின் அபிமான இசையமைப்பாளரான எஸ்.டி .பர்மானின் [ S.D.Burman ] இசையின் தாக்கத்தையும் நாம் அவதானிக்கலாம்.அவர் இசையமைத்த சர்மிலி என்ற ஹிந்தி படத்தில் இடம் பெற்ற ” Khilte Haine Gul Yahan ” என்ற லதா மங்கேஸ்கர் பாடிய பாடலின் தாக்கம் தெரியும்.
காட்சியின் மனப்பதிவை மைய்யமாகக் கொண்டு பாடலின் இடையிசையை புத்தாக்கம் செய்து தமிழ் சினிமாவில் இசையின் மேன்மையை உயர்த்தியவர் இளையராஜா.
“நீ என்ன பேச வேண்டும் என்று விரும்புகிறாயோ அதைப் பேச அதனால் இயலாது ” என்று மொழியின் குறைபாடுகளை Beckett என்ற அறிஞர் கூறியதை இளையராஜாவின் இசை நினைவூட்டும்.

04 . சிந்து நதிக்கரையோரம்- படம்:நல்லதொரு குடும்பம் – 1978 – பாடியவர்கள் :T.சௌந்தரராஜன் + P .சுசீலா – இசை: இளையராஜா
இனிமையான பாடல்.மென்மையான மெட்டு. இளையராஜாவின் முத்திரை பதித்த பின்னணி இசை.சுசீலா அளவுக்கு சௌந்தரராஜன் குரலில் மென்மை வெளிப்படவில்லை என நினைக்கின்றேன்.
ஆபேரியை அழகு படுத்திய பாடல் என்பதில் சந்தேகமில்லை.

05 . வசந்த கால கோலங்கள் – படம்:தியாகம் 1978 – பாடியவர் : எஸ்.ஜானகி – இசை: இளையராஜா
தொன்மஇசை நிகழ்கால உணர்வுகளையும் அருமையாக வெளிப்படுத்தும் அதே வேளை சோக உணர்வுகளைக் கிளர்ந்தெளவும் வைக்கும் ஆற்றல் கொண்டது என்பதை உணர்த்தும் பாடல்.வேரில் நின்று புதுக்கிளைகள் பரப்பி மரம் காட்டும் அதிசயம் போல மரபிசை ராகங்களில் நின்று திழைக்கவும், புதுமைகளில் திழைக்கவும் வைத்த இசைஞானியின் பாடல்.எஸ்.ஜானகி பாடிய அருமையான பாடல்.

06 . வா பொன் மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் – - படம் : பூந்தளிர் 1979 – பாடியவர்: SPB
ஒத்திசைவின் ஒழுங்கும் ,ஒன்றிணைந்த லயமும் இரண்டறக் கலந்த பின்னணியில் , தன்னையே பறி கொடுக்கும் காதலின் உன்னதத்தை உணர்த்த ஆபேரியை இனிமையின் உருவமாக்கி இசைஞானி தந்த நம் உயிரிலே கலந்த பாடல்.

07 . மேகம் கருக்குது- படம்:ஆனந்த ராகம் 1982 – பாடியவர்கள் : K .J .ஜேசுதாஸ் + S.ஜானகி – இசை:இளையராஜா
நாட்டுப்புற சாயம் பூசிய ஆபேரி இது.எந்த ஒரு தொன்மையான ராகத்தையும் பட சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி மாற்றியமைக்கும் இசை வித்தைகளை சினிமா இசையமைப்பாளர்கள் மரபுகளை கையகப்படுத்தும் அதே வேளை சூழலுக்கு ஏற்ப மாற்றுவதிலும் வல்லவர்களாக இருந்திருக்கின்றார்கள் என்பதை உணர்த்தும் பாடல்.

08 . காளிதாசன் கண்ணதாசன் – படம்:சூரக் கோட்டை சிங்கக்குட்டி 1983 – P.ஜெயச்சந்திரன் + P .சுசீலா – இசை: இளையராஜா
இளையராஜாவின் இசைக்கலவை தெரிகின்ற பாடல்.செவ்வியல் இசை ராகம் நாட்டுப்புறம், மெல்லிசைவடிவம்,அழகு சேர்க்கும் வாத்திய இசை பரிவாரங்கள் இணைக்கப்பட்ட பாடல்.ஆனால் ஏதோ ஒரு அவசரமும் தெரின்கின்ற பாடல்.

09 . சின்னஞ சிறு வயதில் எனக்கோர்- படம்:மீண்டும் கோகிலா 1982 – பாடியவர்கள் : K .J .ஜேசுதாஸ் + S.P.சைலஜா – இசை: இளையராஜா
இந்த பாடலின் இறுதியில் ஜேசுதாஸ் பாடும் ம் …ம் …..ம் …ம்…. என்ற சங்கதிகள் ஆபேரியின்கம்பீரத்தையும் , ஜேசுதாசின் குரல் உறுதியையும் ,கம்பீரத்தையும் காட்டி நிற்கும். இவ்விதம் ” ம் …ம் …..ம் …ம்….” மை வேறுயாராவது பாடகர்கள் பாடுவார்களா என்பது சந்தேகமே.

10 . விளக்கு வைச்ச நேரத்திலே- படம்:முந்தானை முடிச்சு 1983 – பாடியவர்கள்: இளையராஜா + S.ஜானகி – இசை: இளையராஜா
கிராமியத்தை மிக லாவகமாகக் கொண்டுவரும் பாடல்.

11 . ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு- படம்:வைதேகி காத்திருந்தாள் 1985 – பாடியவர்: P.ஜெயச்சந்திரன் – இசை:இளையராஜா
ஜெயச்சந்திரன் பாடிய மிகவும் பிரபல்யமான பாடல்.உளுந்தூர்பேட்டை என்ற இடத்தில் இந்த திரைப்படம் காணிக்கப்பட்ட போது இந்த பாடலை கேட்க காட்டு யானைகள் வந்ததாகவும் , பாடல் முடியும் வரை நின்று கேட்டு விட்டு போகும் என்ற செய்திகள் வெளிவந்தன.ஆபேரியை மனிதர்களா மட்டுமல்ல யானைகளும் ரசித்து மகிழ்ந்திருக்கின்றன.

12 . பூவே பூச்சூட வா- படம்:பூவே பூச்சூட வா 1985 – பாடியவர்கள்: K .J .ஜேசுதாஸ் + சித்ரா – இசை:இளையராஜா
K .J .ஜேசுதாஸ் + சித்ரா பாடிய இந்த பாடல் தனிமையின் துயரத்தை வெளிப்படுத்தும் மனதை நெகிழ வைக்கின்ற பாடல்.உறவுக்காக ஏங்கும் உயிர் படும் வதையை அற்ப்புதமாக வெளிப்படுத்திய இசைஞானியின் அசாத்தியமான பாடல்.எப்ப்போது கேட்டாலும் உயிரை வதைக்கும் பாடல்.

13 . குருவாயூரப்பா- படம்:புது புது அர்த்தங்கள் 1990 – பாடியவர்கள்: S.P.B + சித்ரா – இசை:இளையராஜா
உற்சாகமான காதல் பாடல் என்றாலும் மெல்லிதான ஒரு சோகம் அதனுள்ளில் ஒட்டிக்கொண்டிருக்கும் பாடல்.

14 . வெள்ளி கொலுசு மணி – படம்:பொங்கிவரும் காவேரி 1990 – பாடியவர்கள்: அருண்மொழி + சித்ரா – இசை:இளையராஜா
உள்ளுணர்வில் உற்சாகம் பொங்கிப் பிரவாகிக்கும் பாடல். பாடலின் ஆரம்ப இசை நெஞ்சை அள்ளும் ஆபேரியைக் முன் நிறுத்தி விடுகிறது.பாடல் முழுவதும் உற்சாகம் ததும்புகின்ற பாடல்.கற்பனை வீச்சு மிக்க பாடல்.இளையராஜாவின் அடையாளப்பாடல்.கற்பனைகளின் உச்சம்.

15 . பூங் குயில் ஒன்று- படம்:வீட்லே விசேஷங்க 1990 – பாடியவர்கள்: S.P.B + சித்ரா – இசை:இளையராஜா

16 . ராக்கம்மா கைய தட்டு- படம்:தளபதி 1991 – பாடியவர்கள் : S.P.B + சுவர்ணலதா – இசை: இளையராஜா
ஆபேரியை தொட தொட அற்ப்புதங்கள் போல எத்தனை விதமான பாட்லக்ளைத் தந்த இசைஞானியின் அழகியல் உன்னதத்தை காட்டும் புதையல்.ஆபேரி ராகத்தை ஒரு புதுப் பரிமாணத்திற்கு இட்டுச் சென்ற பாடல்.வீணாய் போகும் திரைக் காட்சிக்கு சங்கீதத்தின் அழகால் ஒரு ஆராதனை தேவையா? என்று கேட்க வைக்கும் பாடல்.இசை மந்திர ஜாலப்பாடல்.பாடலின் பின்பகுதியில் ஆனந்த பைரவி இணைப்பும் அபாரம்.இரண்டு ராகங்களின் இணைப்பும் அலாதியானவை.இரண்டு ராகங்களும் நாட்டுப்புற இசை ராகங்கள்.அதில் ஒன்றை பக்திக்கும் ஒன்றை டப்பாங்கூத்துக்கும் பயன்படுத்திய ராஜாவின் கைவண்ணம்.

17 . ஊரெல்லாம் உன் பாட்டு தான்- படம்:ஊரெல்லாம் உன் பாட்டு 1990 – பாடியவர்: K .J .ஜேசுதாஸ் – இசை:இளையராஜா
வீரியம் மிக்க இசைப்படைப்பு.ஓங்கிக் குரல் எடுத்து பாடுவதற்கு ஏற்ற ராகம் என்பதால , பாடலின் ஆரம்ப ஆலாபனை அற்ப்புதமாக அமைந்துள்ளது.இளையராஜா , ஜேசுதாஸ் , சுவர்ணலதா போன்றோர் மூன்று விதமாகப்பாடப்பட்ட பாடல்.மூன்றும் நன்றாக இருக்கும்.

18 . பூங் காவியம் பேசும் ஓவியம்- படம்:கர்ப்பூரமுல்லை 1990 – பாடியவர் : K .J .ஜேசுதாஸ் + பி.சுசீலா + சித்ரா – இசை:இளையராஜா
வலியின் உக்கிரம் இசையின் ஆன்மாவாகி நம்மையும் பரவசப்படுத்துகின்ற பாடல்.பாடகர்கள் தெரிவு அற்ப்புதம்.அன்னையை அணைக்கத் துடிக்கின்ற பிரிவின் ஏக்கத்தையும், தன்னிரக்கததையும்ஒன்று சேர்க்கும் மனநிலையை தருகின்ற பாடல்.பாசத்தின் விசும்பல்.பின்னணி இசை காவியம் படைக்கிறது.இது போன்ற அற்ப்புதங்களை இசைஞானியின் இசையில் தான் கேட்கலாம்.

19 . என்னை தொட்டு அள்ளி கொண்ட- படம்:உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் 1990 – பாடியவர் :S.P.B + சுவர்ணலதா -இசை:இளையராஜா
இந்த பாடல் 1990 களில்வந்த சிறப்பான பாடல்களில் ஒன்று எனலாம்.மனதை அள்ளிக் கொண்டு போகின்ற பாடல்.எதிர்பாராத விதமாக வரும் ஆண் குரலின் ஹம்மிங் கம்பீரத்தை தரும்.அந்த ஹம்மிங் என்பதே அந்த ராகத்தின் சிறப்பம்சமாகும்.அந்தப் பாடலின் உச்சமும் அந்த ஹம்மிங்கில் தான் நிறைந்திருக்கிறது.

20 . உன் மனசுலே பாட்டு தான் – படம்:பாண்டி நாட்டு தங்கம் 1990 – பாடியவர்கள்: S.P.B + சித்ரா — இசை: இளையராஜா
ஆபேரி ராகத்தில் கிராமிய பாணியில் மிக அழகான பாடல்.

21 . என் பாட்டு என் பாட்டு – படம்:பூமணி – பாடியவர் : இளையராஜா – இசை: இளையராஜா
ஆபேரி ராகத்தில் சோகத்தை பின்னித் தரும் பாடல்.ஏற்கனவே பல பாடல்களை இதே ராகத்தில் அமைத்தாலும் புது ரகமாக தரும் இசைஞானியின் படைப்பாற்றலை சொல்லும் பாடல்.நாட்ட்ப்புற தாளத்தில் இசைந்து வருகின்ற பாடல்.பாடலின் ஆரம்ப ஹம்மிங்குடன் இழையும் புல்லாங்குழல் இசையின் அமைதியும் பின்வரும் சரணமும் மிக அழகானவை.நம் நெஞ்சை துவைக்கிற மெட்டு.

22 . முத்தமிழே முத்தமிழே- படம்:ராமன் அப்துல்லா – பாடியவர்கள் : S.P.B + சித்ரா – இசை: இளையராஜா
விம்மிவரும் அழுகையை ராஜஇசையால் ஆற்றுப்படுத்தும் பாடல்.காதலின் பரவசமும், தவிப்பும் அலையலையாய் பொங்கி வருவதை இசையில் தந்து நம்மை இனம் புரியாத வேதனையில் நம்மை மூழ்கடிக்கும் பாடல்.

23 . பூங் காற்று திரும்புமா- படம்:முதல் மரியாதை – பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன் + S.ஜானகி – இசை: இளையராஜா
கசப்பும், சதா நிந்தனையும்,அவமானங்களையும் நிதம் அடையும் ஒரு நடுத்தர மனிதனின் தவிப்பு, தலைநிமிர்ந்து நிற்க வேண்டியவன் துயரத்தால் துடிக்கும் பாடல்.அவனை தேற்றஅன்னையின் மிடுக்கோடு நிற்கும் இளம் பெண் காட்டும் பாசமும் , பரிவும் மிக அழகாக வெளிப்படும் பாடல்.வாத்தியங்ககளின் நுண்மைகளை கிராமிய மரபில் தீராத புதுமைகளை நிதானத்துடன் பின்னிய இளையராஜாவின் பாடல். இதில் வரும் புல்லாங்குழலை கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

24 . துள்ளி திரிந்ததொரு காலம்- படம்:முதல் மரியாதை – பாடியவர் : S.P.B – இசை:இளையராஜா
தொலைத்த வசந்தத்தை தேடும் துன்பியல் பாடல்.பாடல் தரும் உணர்வெழுச்சி நம் தொண்டையை அடைத்து விடுகிறது.வாத்தியம் ஓலமிட்டு அழுவதில்லை. பாடலின் போக்கில் துள்ளும் இசை அலையாக எழுந்து நம் நெஞ்சங்ககளை ரணமாக்கி விடுகிறது.உயர்ந்த இசை நம் நெஞ்சத்தை அசைத்து விடுகிறது.

25 . மனசு மயங்கும் மௌனராகம் படம்- சிப்பிக்குள் முத்து – பாடியவர் : S.P.B + S.ஜானகி – இசை:இளையராஜா
மென்மையான பாடல்.ஆனால் மெய் சிலிர்க்க வைக்கும் பாடல்.ஆபேரி ராகத்தை இப்படி எல்லாம் வளைக்க முடியுமா என்று என்ன வைக்கும் பாடல்.விரகதாபத்தை மிக அருமையாக வெளிப்படுத்தியிருக்கும் பாடல்.பின்னணி இசையின் நாயகன் இசைஞானி மிக அருமையாக பெண்களின் கோரஸ் இசையை பயன்படுத்திய மெல்லிசையின் சிகரப்பாடல்.மனதில் இனம் புரியாத உணர்வலைகளை எழுப்பும் பாடல்.வர்ணிக்க வார்த்தையில்லை.

26 . மஹா ராணி உன்னை தேடி – -பாடியவர்கள் : P.ஜெயச்சந்திரன் + S.ஜானகி – இசை: இளையராஜா
பார்வைக்கு ஒரு புதிய பாடல் போல தொற்றம் காட்டினாலும்,செந்தூரப்பூவே ,செந்தூரப்பூவே என்ற பாடலின் தாக்கம் உற்றுக் கவனித்தால் பிடிபட்டுவிடுகின்றதுஎன்பேன்.ஆனாலும் அந்தச் சாயலை மறைக்க பின்னணி இசை முயன்றிருக்கிறது.ஆனாலும் முழுமையாக ஒளித்து வைக்க முடியவில்லை.

27. எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல வந்த மகளே – படம்:சின்ன கண்ணம்மா – மனோ – இசை: இளையராஜா
தன்னோடு வாழ்ந்தவளின் நினைவூட்டங்களை மீட்டும் பாடல்.நம்மையும் அனுதாப உணர்வுக்கு இட்டுச் செல்லும் பாடல்.சோகப்பாடல் என்ற வரையறைகளைத் தாண்டி இன்பமும் , நினைவலைகளில் அமிழ்ந்த சோகத்தையும் ஒன்றாகக் குழைத்த இசைஞானியின் கற்பனை வியக்க வைக்கிறது.

28. தேவதை போல் ஒரு பெண் இங்கு – படம்:கோபுரவாசலிலே – தீபன்+ சுரேந்தர் + மனோ + மலேசியா வாசுதேவன் – இசை:இளையராஜா
பொங்கிப் பெருகும் ஆனந்த உணர்வை ஒழுங்கான இசை லயத்துடன் தரும் பாடல்.பொதுவாக நான்கு ஆண் பாடகர்கள் இணைந்து பாடும் பாடல் தமிழ்சினிமாவில் அபூர்வமாக இடம் பெற்றிருக்கிறது.கர்ணன் படத்தில் சீர்காழி கோவிந்தராஜன், ஸ்ரீநிவாஸ் ,திருச்சி லோகநாதன் , சௌந்தரராஜன் பாடிய ” மழை கொடுக்கும் கொடையும் ” என்ற பாடலைப் பாடினார்கள்.அந்தப் பாடலில் ஒவ்வொரு பாடகரும் ஒவ்வொரு ராகத்தை பாடுவார்கள்.
அந்தப் பாடலுக்குப் பின் நான்கு பாடகர்கள் இணைந்து பாடும் பாடல் இது.நான்கு குரல்களும் ஒன்றிணைந்து பாடலின் இனிமையை வெளிப்படுத்தும் பாங்கு சிறப்பானது.இசை தரும் உணர்வை மிக அற்பபுதமாக பாடகர்கள் போட்டி போட்டுக் கொண்டு வெளிப்படுத்தியிருக்கின்றனர்.கவாலி இசைப்பாணியில் பாடல் ஆரம்பித்து ,இளையராஜாவின் தனி முத்திரை பொதிந்த வாத்திய இசையுடன் ஆபேரி ராகத்தின் உயிர் நுண்கூறுகளை அருமையாக திரட்டித் தந்த பாடல்.

30. பூ என்றும் பொன்னே என்றும் – படம்:துருவ நட்சத்திரம் – S.P.B + சித்ரா – இசை: இளையராஜா

ஆபேரி ராகத்தில் இன்னுமொரு சிறப்பான பாடல்.பலவிதமாக பரிசோதனை செய்யும் இளையராஜாவின் படைப்பு.இசை நலம் மிக்க பாடல்.ஒரே ராகத்தில் எத்தனை பின்னல்கள் என்று அதிசயிக்க வைக்கும் இளையராஜாவின் கற்ப்பனைப்பாடல்.

31. உன்னை காணாமல் நானேது -படம்: கவிதை பாடும் அலைகள – அருண்மொழி + சித்ரா – இசை: இளையராஜா

ஆபேரி ராகத்தின் உணர்ச்சியூட்டத்தை தனது பிரிக்கவியாலாத பின்னணி இசையால் ஒன்றித்து ராகத்தைப் பெருமைப்படுத்தும் பாடல்.பாடலைக் கேட்க்கும் போது ஏதோ மின்சாரம் பாய்ந்து நாடி நரம்புகளை சிலிர்க்க வைக்கும் பாடல்.key board இசை அழகாக பயன் படுத்தப்பட்டுள்ள பாடல்.

32. ஆராரோ பாட்டுப்பாட நானும் தாயில்லை -படம்: பொண்டாட்டி தேவை – அருண்மொழி + சித்ரா – இசை: இளையராஜா
வெளிப்பார்வைக்கு ஒரு புதிய பாடல் போல் தெரிந்தாலும் , உற்றுக் கேட்டால் “பூ என்றும் பொன்னே என்றும்” என்ற பாடலின் சாயல் தெரிகின்ற பாடல்.

33. எனக்கு பிடித்த பாடல் – படம்:ஜூலி கணபதி – விஜய் யேசுதாஸ் + ஸ்ரேயா கோஷல் – இசை: இளையராஜா
மேலைத்தேய பாணியில் ஒரு மெல்லிசையாக , புது தினுசான ஒரு பாடல்.ஸ்ரேயா கோஷல் ,விஜய் ஏசுதாஸ் பாடிய பாடல்.நவீன ஆபேரி என்றாலும் உணர்வு நிறைந்த பாடல்.

34. ஆராரோ பாட்டுப்பாட நானும் தாயில்லை -படம்: பொண்டாட்டி தேவை – அருண்மொழி + சித்ரா – இசை: இளையராஜா
வெளிப்பார்வைக்கு ஒரு புதிய பாடல் போல் தெரிந்தாலும் , உற்றுக் கேட்டால் “பூ என்றும் பொன்னே என்றும்” என்ற பாடலின் சாயல் தெரிகின்ற பாடல்.

35. ஊரெல்லாம் உன் பாட்டுத் தான் – படம்: ஊரெல்லாம் உன் பாட்டு – கே.ஜே.ஜேசுதாஸ் + சுவர்ணலதா + இளையராஜா
மூன்று பாடகர்கள் தனித் தனியே பாடிய பாடல்.மிகவும் அழகான பாடல்.ஒவ்வொரு பாடலும் அழகாகப் பாடப்பட்டிருக்கும்

34. எனக்கு பிடித்த பாடல் – படம்:ஜூலி கணபதி – விஜய் யேசுதாஸ் + ஸ்ரேயா கோஷல் – இசை: இளையராஜா
மேலைத்தேய பாணியில் ஒரு மெல்லிசையாக , புது தினுசான ஒரு பாடல்.ஸ்ரேயா கோஷல் ,விஜய் ஏசுதாஸ் பாடிய பாடல்.நவீன ஆபேரி என்றாலும் உணர்வு நிறைந்த பாடல்.

36. கடல் அலை கால்களை -படம்: பொம்பள மனசு – பி.ஜெயச்சந்திரன் – இசை: ரத்னா சூரியன்
ரத்தினசூரியன் எற்ற இசையமைப்பாளர் இசையில் வெளிவந்த பாடல்.இந்த படத்திற்கு பிறகு இவர் இசையமைத்தாரா என்பது தெரியவில்லை.பி.ஜெயச்சந்திரன்அழகான குரலில் பாடிய இனிமையான பாடல்.எளிமையான வாத்திய இசை கொண்ட பாடல்.

37. அமுத மழை பொழியும் முழு நிலவிலே – படம்: பொம்பள மனசு – T.L.தியாகராஜன் இசை: ரத்னா சூரியன்
ரத்தினசூரியநின் அழகான பிரபல்யம் பெற்ற பாடல்.இந்த பாடலைப் பாடியவர் மறைந்த பழம் பெரும் பாடகர் திருச்சி லோகநாதனின் மூன்றாவது பாடகப் புதல்வர் தியாகராஜன்.மிக அருமையாகப் பாடியிருந்தார் தியாகராஜன்.இன்று கேட்டாலும் இனிக்கின்ற , அருமையான ஆபேரி ராகப் பாடல்.

38. நீல வான ஓடையில்- படம்:வாழ்வே மாயம் 1983 – பாடியவர்: S.P.B இசை : கங்கை அமரன்
கங்கை அமரன் இசையமைத்த புகழ் பெற்ற பாடல்.இளையராஜாவின் பின்னணி இசையின் பாதிப்பு இவரிடம் நிறையவே இருக்கும்.வெளிப்படையாக பாடல்களைப் பற்றி வெளிப்படையாகப் பேசும் கங்கைஅமரன் , இந்தப் பாடலுக்கான உந்துதல் சொல்லும் பொழுது , எத்தனையோ பழைய பாடல்களைக் கேட்ட உந்துதலில் தான் இசையமைப்பது வழக்கம் என்றும் , குறிப்பாக இந்த பாடலின் உந்துதல் அனார்க்கலி [1953] என்ற ஹிந்திப் படத்தில் C.ராமச்சந்திரா என்ற இசைமேதையின் இசையில் வந்த ” yeh zindagi usi ki hai ” என்ற லதா மங்கேஸ்கர் பாடிய பாடலிலிருந்து கிடைத்தது என்று கூறியிருந்தார்.அந்தப் பாடல் அதே மெட்டில் தமிழில் ” என் சிந்தை நோயும் தீருமா ” என்று இசைமேதை ஜி.ராமநாதன் இசையிலும் , இசைமேதை ஆதினாராயன் ராவ் இசையமைத்த தமிழ்-தெலுங்கு படமான அனார்க்கலி படத்தில் ” ஜீவிதமே சபலமோ ” என்ற பாடல்களாக ஜிக்கியின் குரலில் வந்தன.

39. ஜானகி தேவி ராமனை தேடி – படம்:அம்சாரம் அது மின்சாரம் – பாடியவர்: சித்ரா இசை: சங்கர் கணேஷ்
1970 களில் ஆரம்பித்து ஆங்காங்கே நல்ல பல பாடலளைத் தந்த சங்கர்- கணேஷ் இரட்டையர்களின் இனிமையான ஆபேரி வார்ப்பு இந்தப் பாடல்.மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் காலத்திலிருந்து , அவரின் நிழலில் வளர்ந்த இந்த இரட்டையர்கள் குறிப்பிடத்தக்க நல்ல பாடல்களைத் தந்தவர்கள் என்பதை மறுக்க முடியாது.பல பாடல்களைத் தழுவல்கலாகத் தந்தாலும் அருமையான பல மெட்டுகளைத் தந்தவர்கள்.

40. ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ – படம்: சூரியவம்சம் -பாடியவர்: ஹரிகரன் இசை :S.A.ராஜ்குமார்
[ இந்தப்பாடல் இளையராஜா இசையமைத்த " ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு " என்ற பாடலின் பாதுப்பு நிறைய உள்ள பாடல்.] பாடல் எழுதுதல் , இசையமைத்தல் போன்றவற்றில் திறமை மிக்க எஸ்.ஏ.ராஜ்குமார் ஹிந்தி திரை இசையால் பாதிக்கப்பட்டு பல பாடல்களைத் தந்திருக்கின்றார்.ஒரே மேட்டில் பல பாடல்களை போட்டு அவற்றை வெற்றிப்பாடலக முயன்றவர்.இவர் இசையமைத்த நல்ல மெல்லிசைப் பாடல் பல் உண்டு.இளையராஜாவின் பாதிப்பால் பல பாடல்களை உருவாக்கியிருக்கின்றார்.

41. துளி துளி மழை துளி – படம்:புது வெள்ளம் [ 1975 ] -P.சுசீலா – இசை : எம்.பி.ஸ்ரீநிவாசன்
எம்.பி.ஸ்ரீநிவாசன் என்ற இசைமேதை இசையமைத்த பாடல்.விரகதாபத்தை , வாழ்வின்பத்தை அனுபவிக்கத் துடிக்கின்ற வாஞ்சைப்பாடல்.வார்த்தையால் விளக்க முடியாத போதை தருகின்ற லாஹிரி பாடல்,மனதை இனம் புரியாத உணர்வுகளைக் கிளர்த்தி இன்ப விருந்து தரும் பாடல்.ஆபேரி தரும் உன்னத இசை.இந்தப் பாடலின் மெட்டையே அந்தப் படத்தில் டைட்டில் இசையாகவும் பயன்படுத்திருப்பார் எம்.பி.ஸ்ரீநிவாசன்.

42. ராசா ராசா உன்னை – படம்: மானஸ்தன் – ஹரிகரன் + சித்ரா இசை :S.A.ராஜ்குமார்
இந்தப்பாடல் இளையராஜா இசையமைத்த ” உன்னை காணாமல் நானேது ” [ படம்:கவிதை பாடும் அலைகள் ] என்ற பாடலின் பாதிப்பு நிறைய உள்ள பாடல் என்றாலும் மிக அழகான பாடல்.இனிமையான புல்லாங்குழல் ,செனாய் பயன்படுத்தியுள்ளார்.

ar-rahman43. கண்ணோடு காண்பதெல்லாம் – படம்:ஜீன்ஸ் – நித்யஸ்ரீ மஹாதேவன் – இசை : ஏ.ஆர் .ரகுமான்
ஏ.ஆர்.ரகுமானின் பாணியில் எங்கும் தாளம் எதிலும் தாளம் வகைப்பாடல்.ஆட்டம் தான் பிரதானம்.பாடலில் வரும் ஜதிகளை தான் எட்டு விதமாகப் பாடிக்கொடுத்ததாக நித்யஸ்ரீ ஒரு போட்டியில் சொல்லியிருக்கின்றார்.ராகத்தின் இயல்பால் பாடல் கவரப்படுகிறது.

குறிப்பிடும் படியாக தாளம் தான் தலை தூக்கி நிற்கிற பாடல்.” பைலா ” போடும் இளைஞர்கள் மத்தியில் இந்த ராகத்தை அறிமுகப் படுத்தியமை பாராட்டுக்குரியது.

44 .திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு காதலா – - ஹரீஸ் ராகவேந்திரா + சித்ரா இசை : பரணி
இதயத் தவிப்பை அற்ப்புதமாக வெளிப்படுத்திய பாடல். புது இசையமைப்பாளர்களில் மெல்லிசைப்பாங்கான , இனிமைமிக்க பாடல்களைத் தந்த புதிய இசையமைப்பளர்களில் தந்து திறமையை காட்டியவர பரணி.பாடியவர்களும் அற்ப்புதமாக பாடிய பாடல்.

இன்னும் சில புதிய பாடல்கள்

44. கனா காண்கிறேன் கண்ணாலனே – படம்: ஆனந்த தாண்டவம் இசை ஜி .வீ.பிரகாஸ்
45. கனாக் கண்டேனடி கனாக் கண்டேனடி – பார்த்திபன் கனவு – இசை: வித்யாசாகர்
46. வாராய் என் தோழியே – படம் அரசியல் – இசை:வித்யாசாகர்
47. பூத்திருக்கும் வானமே – படம்: புதையல் இசை : வித்யாசாகர்
48. மனசெல்லாம் மழையே – படம்: சகுனி – இசை ஜி .வீ.பிரகாஸ்

ஆபேரியின் சுகத்தை அனுபவிக்க வேண்டும் என்றால் சமீபத்தில் வந்த பழசி ராஜா படத்தில் வந்த “குன்னத்தை குன்னக்கும் ” என்ற சித்ரா பாடும் மலையாள பாடலைக் கேட்கவும்.