தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 7 ] : T.சௌந்தர்
இசை ரசிகர்கள் எல்லோருக்கும் பிடிக்கக் கூடிய மிக முக்கியமான ராகங்களில் ஒன்று கல்யாணி.
5 சுரங்களைக் கொண்ட மோகனம் எவ்வளவு இனிமையானதோ அதே போன்று 7 சுரங்களைக் கொண்ட இந்த ராகமும் மிக இனிமையானதாகும்.7 சுரங்களை கொண்ட இந்த ராகத்தை சம்பூரண ராகம் என அழைப்பர்.தமிழிசைப் பாரம்பரிய கர்னாடக இசையில் தாய் ராகமான கல்யாணி 65 வது மேளகர்த்தா ராகமாகும்.
தமிழ் தொல்லிசை மரபில் “அரும்பாலைப்பண் ” என அழைக்கப்பட்ட இந்த கல்யாணி ராகம் தமிழ் மக்கள் இசை உலகத்திற்கு வழங்கிய கொடைகளில் ஒன்றாகும்.வட இந்திய ஹிந்துஸ்தானி இசையில் இதனை ” யமன் ” அல்லது ” யமன் கல்யாண ” என்று அழைக்கின்றனர்.இந்த ராகத்திலிருந்து பிறந்தவையே மோகனக்கல்யாணி , சாரங்கா , சுநாதவினோதினி போன்ற ராகங்கள்.
தமிழ் செவ்வியல் இசைக் கச்சேரிகளில் நிதிசால சுகமா , ஏதா உணரா நில கட போன்ற கீர்த்தனைகள் புகழ் பெற்றவை.
எல்லாச் சூழ் நிலைகளுக்கும் பொருந்தக் கூடிய இந்த ராகம் மங்களகரமானது என கருதப்படுவதால் திருமணங்களிலும் கண்டிப்பாகப் பயன்படுத்தப்படுகிறது.நாதஸ்வர இசைக்கலைஞர்கள் இந்த ராகத்தை தன்னிகரற்ற வகையில் வாசித்து பரவசப்படுத்துவர்.
தமிழ் செவ்வியல் இசையில் மிக விஸ்தாரமாகப் பாடக்கூடிய ராகமாகவும் , கற்பனைக்கும் இடம் கொடுக்கக் கூடிய ராகமாகவும்
இருப்பதால் சினிமாவில் அதிக அளவில் பயன்பட்ட ராகமாகவும் விளங்குகிறது.
தொட்ட இடம் எல்லாம் இனிப்பது என்பது இந்த ராகத்தின் சிறப்பாகும்.எப்படிப் பாடினாலும் மனதை கொள்ளை கொள்ளும் ராகம் என்பதால் சினிமா இசையமைப்பாளர்கள் தன்னிகற்றற்ற வகையில் செவ்வியல் இழைகளைப் பயன் படுத்தி அழகான மெல்லிசை நெசவுகளைத் தந்திருக்கின்றார்கள்.திரை இசை அலைகளில் மிதந்து நம் நெஞ்சங்களில் கோடி அலைகளை மீட்டிய பெருமைக்குரிய ராகம்.
புகழ் பெற்ற பெரும்பாலான இசையமைப்பாளர்கள் இந்த ராகத்தை நாடி தங்களையும் , தமது படைப்புக்களையும் பெருமைப்படுத்தியுள்ளனர்.
திரையில் இசையமைப்பாளர்கள் கதாபாத்திரங்களின் உணர்வு நிலைகளை சிறப்பாக எடுத்துக் காட்டவும் அவற்றையும் தாண்டி தங்கள் ஆவல் எழுச்சியால் பல பரிசோதனைகளையும் செய்து பார்க்கவும் இந்த அருமை கல்யாணியை பயன்படுத்தியிருக்கின்றார்கள்.தமிழ் செவ்வியல் இசை மரபில் நின்றும் அங்காங்கே சற்று மீறியும், ஒலி அலைகளைக் கட்டவிழ்த்து திகட்டாத இனபத்தை வழங்கியிருக்கின்றார்கள்.தமிழ் திரை இசையில் ஒரு கால கட்டத்தில் இந்த ராகத்தில் அமைந்த பாடல்கள் இல்லாமல் திரைப்படங்கள் இல்லை என்று கூறுமளவுக்கு முக்கியத்துவம் பெற்று விளங்கியது.
தொன்மை வாய்ந்த தமிழ் இசைவளப் பெருமை மிக்க பாணர்கள் தந்த பூர்வ இசைச் செல்வம் இந்த கல்யாணி என்றால் புகழ்ச்சியில்லை.இசை மரபின் பெருமைமிக்க இந்த ராகத்தில் எழுந்த இசைநாதம் நம் நெஞ்சங்களில் இனிக்கின்ற உன்னதமான பாடல்களாக நிறைந்திருக்கின்றன.
01 . கமல மலரிதழ் பணியும் – பக்த நாரதர் – கொத்தமங்கலம் சீனு – இசை:
1940 களில் எழுந்த செவ்வியல் இசை கலநத இன்பம் தருகின்ற கல்யாணி.அன்றைய புகழ் பெற்ற பாடகர் கொத்தமங்கலம் சீனு பாடிய சத்தமான கல்யாணிராகப்பாடல்.
02 .எந்த நாளும் பிரியேனே – தாசி அபரஞ்சி 1944 – K .ஸ்ரீநிவாஸ் +TV.ரத்தினம் – இசை:
காதல் பாடலை இவ்விதம் பாடியிருக்கின்றார்களே என்று எண்ண வைக்கும் பாடல்.அந்தகாலத்து இசை அவ்விதமாகவே இருந்திருக்கிறது என்றாலும் இன்று கேட்டாலும் இனிய கல்யாணியை நாம் ரசிக்க முடியம்.
03 .நமக்கினி பயமேது – ஜகதலப்பிரதாபன் 1944 – PUசின்னப்பா – இசை:ஜி.ராமநாதன்
செவ்வியல் பாணியில் அமைந்த பாடல்.ஒரு மினி கச்சேரி போன்றிருக்கும் பாடல்.சின்னப்பாவின் ஸ்டைலில் அனாயாசமாகப் பாடப்பட்ட பாடல்.
04 .கெதியாருமில்லை தாயே -ஜீவித நௌகா 1951 – கவியூர் ரேவம்மா – இசை:V.தட்சிணாமூர்த்தி
V.தட்சிணாமூர்த்தி இன்றும் உயிருடன் இருக்கும் ஒரு பழம்பெரும் இசையமைப்பாளர்.பெரும்பாலும் மலையாளத்தில் புகழ் பெற்றவர்.1950 களில்வந்த சோக உணர்வை தரும் மெல்லிசைபாடல் வகையை சேர்ந்தது.
05 .சூரியனும் ஒரு தொழிலாளி -நன்னம்பிக்கை – SV வெங்கட்ராமன் – இசை: SV வெங்கட்ராமன்
தமிழ் திரை இசையின் முதல் இசையமைப்பாளர் என புகழ் பெற்ற SV வெங்கட்ராமன் மிகவும் எழுச்சி பொங்கும் வகையில் பாடிய பாடல்.
06 . உன்னை அழைத்தது யாரோ – மலைக்கள்ளன் 1951 – பி.பானுமதி – இசை:எஸ்.எம்.சுப்பையா நாயுடு
நாட்டிய காட்சிக்கு பொருத்தமான இசைக்கோர்வை.கல்யாணி பளீச் எனத் தெரியும் பாடல்.பன்முக ஆற்றல் கொண்ட நடிகை பானுமதி பாடிய அருமையான பாடல்.
07 . இசையமுதம் போல் உண்டோ – கோடீஸ்வரன் – பி.லீலா – இசை :S.V.வெங்கட்ராமன்
அழகான கல்யாணி வார்ப்பில் இசையமுதத்தை அள்ளித் தரும் பாடல்.கல்யாணியின் இனிய உள்ளோசைகளை நிலைத்த இன்பம் தரும் வகையில் நம்மைப் பிணிக்கும் வண்ணம் நம் உள்ளங்ககளை உயிர்ப்பிக்கும் பாடல்.S.V.வெங்கட்ராமன் அமைத்த இனிய பாடல்.
08 . வந்திடுவார் அவர் என மனம்போலே – மலைக்கள்ளன் 1951 – பி.பானுமதி – இசை:எஸ்.எம்.சுப்பையா நாயுடு
வானத்தைப் பிரியாத நிலவு போல் கல்யாணியை விட்டகலாத இனிமை மிக்க நாட்டியப் பாடல்.பானுமதி பாடிய செவ்வியல் இசை தழுவிய பாடல்.
09 . நானே இன்ப ரோஜா நாடி வாராய் ஆசை ராஜா – மலைக்கள்ளன் 1951 – பி.பானுமதி – இசை:எஸ்.எம்.சுப்பையா நாயுடு
இன்ப உணர்வை வெளிப்படுத்தும் மகிழ்ச்சிப் பாடல். ராஜா , ரோஜா என்று பின்னாளில் திரைப்படக் கவிஞர்கள் கண்டபடி எழுத அடி எடுத்துக் கொடுத்த பாடலோ என என்ன வைத்தாலும் கல்யாணி அதனை பக்குவப் படுத்திவிடுகிறது.
10 . எல்லையில்லாத இன்பத்திலே நாம் – சக்கரவர்த்தித் திருமகள் 1957 – சீர்காழி + பி.லீலா
அழகான சங்கதிகள் கொண்ட ஜி.ராமநாதனின் காதல் கீதம்.பாடலின் முன்பகுதி மட்டும் கல்யாணியில் அமைய , பின் பகுதி கானடா ராகத்தில் நிறைவு பெறும் பாடல்.
11 . கலைவாணி கல்யாணி தீஞ்சுவை தரும் மாங்கனி – பண்ணையார் மகள் – T.R.மகாலிங்கம் + P.சுசீலா – இசை: ஜி.ராமநாதன்
ஜி.ராமநாதன் இசையமைத்த அற்ப்புதமான பாடல்.சிக்கலான ,இனிமைமிக்க சங்கதிகளை கொண்ட பாடல்.T.R.மகாலிங்கம் தன்னிகரில்லாமல் பாடிய பாடல்.சுசீலாவும் ஈடு கொடுத்து பாடிய பாடல்.
12 . பொல்லாத்தனத்தை என்ன சொல்வேன் கண்ணா – பெண் – T .S .பகவதி – இசை: R.சுதர்சனம்
வீணை இசையுடன் ஆரம்பிக்கும் கல்யாணியின் பெருமையை பறை சாற்றும் இனிமைமிக்க பாடல்.இசை மேதை சுதர்சனத்தின் கைவண்ணம்.
13 . காவேரி பெண்ணே வாழ்க – பூம்புகார் 1963 – T .M. S + .P.சுசீலா – இசை: R.சுதர்சனம்
1960 களில் முளைத்த மெல்லிசையில் மிதந்து வரும் மென்மையான கல்யாணி.கோவலனும் ,மாதவியும் இன்பமாக வீணை இசையுடன் ஆரம்பித்து பாடி கானல் வரியாக பிரிந்து போகின்ற பாடலாக அமைக்கப்பட்ட பாடல்.
ஆயிரம் வழிகளில் ஆடவர் செல்வார்
அதுவே கர்ப்பென்று நம்மிடம் சொல்வார்
என்று விளையாட்டாக சொன்ன வார்த்தை வினையாகி போவதை உணர்த்தும் பாடல்.
14 . பால் கடல் தனிலே தீர சயனமதில் – செஞ்சுலடசுமி – P.சுசீலா – இசை: S.ராஜேஸ்வரராவ்
பக்தி உணர்வை ஏற்ப்படுத்தும் பரவசமிக்க பாடல்.பால்கடலில் துயிலும் திருமாலைப் பற்றிப் புகழும் பாடல்.பல்லவியிலேயே நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் சங்கதிகளால் உணர்ச்சி மேலிட வைக்கும் பாடல்.இறைநம்பிக்கை அற்றவர்களையும் நம்பிக்கை பக்கம் ஈர்க்கும் மிக அருமையான் செவ்வியல் இசையில் அமைந்த கல்யாணி வார்ப்பு.
15 . ஆனந்த கானம் தான் இசைத்திடுதே – - P.லீலா
இன்னுமொரு அழகான பாடல்.வேகத்தையும் இனிமையையும் ஒன்று சேர்த்துப் பாடும் கலையில் சிறந்த பாடகியான P.லீலா பாடிய செம்மை இன்பம் தரும் பாடல்.
16 . வெண்தாமரை ராணியே – சௌபாக்கியவதி 1957 – சீர்காழி + P.லீலா இசை:M.S.ஞானமணி
சௌபாக்கியவதி படத்தில் இடம் பெற்ற இந்த பாடலை மட்டு இசையமைத்தவர் M.S.ஞானமணி.ஏனைய பாடல்களுக்கு இசை வழங்கியவர் பெண்டலாயா நாகேஸ்வரராவ்.கல்யாணி ரகத்திற்கு இலக்கணமாக அமைந்த பாடல் என்று இதனைச் சொல்லலாம்.தகுதியானவர்கள் பாடியதால் மேன்மைபெற்ற பாடல்.
17 . சிந்தனை செய் மனமே – அம்பிகாபதி 1957 – T .M. S – இசை: ஜி.ராமநாதன்
அம்பிகாபதி படத்தில் இடம் பெற்ற பாடலகளில் மிகவும் புகழ் பெற்ற பாடல்களில் முதல் இடம் பிடிக்கின்ற பாடல்.இன்றுவரை சினிமாவில் கல்யாணி ராகம் என்றால் எல்லோராலும் பரவலாகச் சொல்லப்படும் பாடல்.T .M. S உரமும், உணர்வும் மிக்க வகையில் பாடி பரவசப்படுத்திய ஜி.ராமநாதன் பாடல்.
18 . அன்பில் மலர்ந்த நல ரோஜா – கணவனே கண் கண்ட தெய்வம் 1955 – P.சுசீலா இசை: M.ராமராவ்
தாலாட்டு பாடல்களுக்கு மகுடம் வைத்தது போன்ற பாடல்.தெலுங்கு இசையமைப்பாளர் M.ராமராவ் வின் அருமையான சங்கதிகள் கொண்ட சாகாவரம் பெற்ற பாடல்களில் ஒன்று.
“வாழ்விலே ஒழி வீசவே வந்தவனே கண் வளராய் “என்ற வரிகளைப் பாடும் போது கல்யாணியின் உயிர்ப்பகுதி மின்னி வீசும்.உள்விழையும் இசையை, அன்பை வீசும் இந்தப் பாடல் நம் வாழ்வோடு இணைந்தது.
19 . மாறாத சோகம் தானோ – மஞ்சள் மகிமை 1959- கண்டசாலா + P.சுசீலா – இசை: மாஸ்டர் வேணு
சோக ரசம் ததும்பும் பாடல்.இணையில்லாத வகையில் கண்டசாலாவும், சுசீலாவும் பாடிய பாடல்.கண்ட கனவுகள் சிதறும் போது ,கட்டிய மனக்கோட்டை நொறுங்கி , குலைந்து சிதறுண்டு போகும் போது எழும் மனக்குமுறலை, உளக்கொந்தளிப்பை வெளிப்படுத்தும் பாடல்.பாடலின் வாத்திய அமைப்பு வியக்கத்தக்கதாக இருக்கும்.மாஸ்டர் வேணு என்கிற இசைமேதையின் வீரியமிக்க , மனதை நெகிழ வைக்கும் ,கல்யாணி ராகத்தில் அமைந்த மெல்லிசைப்பாங்கான பாடல்.மாஸ்டர் வேணு நடிகர் பானு சந்தரின் தந்தையாவார்.
20 . ஆடும் அருள் ஜோதி – மீண்ட சொர்க்கம் 1960 – சீர்காழி + MLவசந்தகுமாரி – இசை:T.சலபதிராவ்
செவ்வியல் இசைப்பாங்கில் அமைந்த பாடல்.கல்யாணியின் இனிய பக்கங்களை காட்டும் பாடல்.சீர்காழி + MLவசந்தகுமாரி இருவரின் இணைவு களிப்பு தருகிறது.
21 . புத்தம் புதிய புத்தகமே – அரசகட்டளை 1967 – TMS + P.சுசீலா – இசை:K.V.மகாதேவன்
1960 களில் முன்னணி இசைவாணர்களில் ஒருவரான K.V.மகாதேவன் கல்யாணியை காதல் பாடல்களில் நல்லிணக்கமாக வைத்த பாடல்.
22 . கள்ளமில்லாத அன்பாலே – பெண் குலத்தின் பெருமை – P.லீலா – இசை:ஜி.ராமநாதன்
ஜி.ராமநாதன் இசையில் P.லீலா பாடிய பாடல்கள் ஒன்றும் சோடை போனதில்லை.இந்தப் பாடலிலும் ஜி.ராமநாதனின் முத்திரையான ச்ங்கதிகள் நிறைந்த பாட்டு.
23 . இமய மலை சாரலிலே இசை பாடும் – மனிதனும் மிருகமும் 1953 – M.L.வசந்தகுமாரி – இசை:ஜி.கோவிந்தராஜிலு நாயுடு
கர்னாடக இசை உலகின் இசைக்குயில் என்று போற்றப்பட்ட M.L.வசந்தகுமாரியின் அழகான குரலில் நம்மை ஆரத் தழுவும் பாடல்.ஜீவசுவை ததும்பும் சங்கதிகள் கொண்ட பாடல்
24 . அதிசயம் இவனது அறிவு மயம் – - M.L.வசந்தகுமாரி – இசை:
இசைக்குயில் M.L.வசந்தகுமாரியின் நல்ல பிடிகளைக் கொண்ட மென்மையும் இனிமையும் மிக்க பாடல்.
25 . நேற்று அந்தி நேரத்திலே – - AP.கோமளா
AP.கோமளா என்ற சிறந்த பாடகி வேகமாகவும் இனிமையாகவும் பாடிய பாடல்களில் ஒன்று.1950 களில் பல நல்ல பாடல்களைப் பாடியவர் AP.கோமளா .
26 . வாடா மலர் தேனே – தோழன் 1960- R.பாலசரஸ்வதி தேவி – இசை: ஜி.ராமநாதன்
தாலாட்டுப் பாடல்களை மிக மென்மையாகப் பாடக்கூடிய தனிச் சிறப்பு வாய்ந்த R .பாலசரஸ்வதிதேவி ஜி.ராமநாதன் இசையில் பாடிய எளிமையான பாடல்.
27 . பூமாலை நீயே புழுதி மண் மேலே – பராசக்தி 1952 – T.S.பகவதி – இசை: R.சுதர்சனம்
தாலாட்டுப் பாடல்களிலும் கல்யாணி ராகம் அழகாகப் பயன்படலாம் என காட்டிய R.சுதர்சனம் அவர்களின் மெல்லிசைப்பாங்கான முன்னோடிப் பாடல்.
28 . துணிந்த பின் மனமே – தேவதாஸ் 1953- கண்டசாலா – இசை:C.R.சுப்பராமன்
பொதுவாக மங்களகரமான ராகம் எனச் சொல்லப்படும் இந்த ராகத்தில் சோக உணர்வை வெளிப்படுத்திய பாடல்.கல்யாணி ராகத்தை புதுமை நோக்கில் அமைத்த பெருமை C.R.சுப்பராமனுக்குரியது என்பர்.இந்த ராகத்தின் குறைந்த சுரங்களை வைத்துக் கொண்டு அமைக்கப்பட்ட பாடல் இதுவாகும்.
தமிழ் சினிமாவில் மெல்லிசை இயக்கத்தைத் தொடக்கி வைத்த ஓர் இசை விற்பனர் C.R.சுப்பராமன்.அவரது பாதையை பின்பற்றியவர்களே மெல்லிசை மன்னர்கள்.
29 . ஊருக்கும் தெரியாது – மாடப்புறா 1962 – TMS + P.சுசீலா – இசை:K.V.மகாதேவன்
மெல்லிசை வண்ணத்தில் சலனமற்று ,மிக இயல்பாக அசைவுகளில் இதம் தரும் பாடல்.
30 . கண்ணெதிரே தோன்றினாள் – இருவர் உள்ளம் 1963 – TMS – இசை:K.V.மகாதேவன்
தனது படைப்புக்களில் சில சமயங்களில் மீண்டும் மீண்டும் ஒரே சாயல்களைக் காட்டினாரோ என எண்ண வைக்கும் படியாக சில பாடல்களைத் தந்திருக்கின்றார்.
31 . நான் அனுப்புவது கடிதம் அல்ல – பேசும் தெய்வம் 1967- TMS – இசை:K.V.மகாதேவன்
மேலே சொன்ன கருத்தை உறுதிப்படுத்துவது போன்று அமைந்த பாடல்.கல்யாணியில் இனிய வார்ப்புக்கள்.
32 . என்னருமை காதலிக்கு வெண்ணிலாவே – எல்லோரும் இந்நாட்டு மன்னர் 1960 – TMS + – இசை:T .G .லிங்கப்பா
” கெஞ்சினால் தரமாட்டாள் வெண்ணிலாவே ..” என்ற வரிகளில் கல்யாணி எதிரொலிக்கும் வண்ணம் எழில் ததும்ப அமைத்து கனிவான பாடலாக்கிய T .G .லிங்கப்பாவின் கற்பனை அற்ப்புதம்.TMS தன் இயல்பான குரலால் அழகுறப் பாடிய பாடல்.
33 . அன்பே பாவமா – தேவதாஸ் 1953 – R.பாலசரஸ்வதி தேவி – இசை:C.R.சுப்பராமன்
மீண்டும் சோகரசம் பொங்கும் பாடல்.பாடகி தெரிவும் அபாரம்.
” என் மனதை நன்றாய் அறிந்த பின்னும்
என்னை இழிவாகவே மதித்தாய்
ஏவல் செய்யும் அடிமையாய் இருக்கவும் விடை மறுத்தாய் ”
என்ற வரிகளைப்பாடும் போது தன்னிரக்கம் மேலெழுந்து உள்ளத்தை உலுக்கி விடும்.சொல்ல வந்த கருத்தை கல்யாணி உன்னத நிலைக்கு கொண்டு சென்று விடுகிறது.சாகாவரம் பெற்ற பாடல்.
34 . பதினாறும் நிறையாத பருவமங்கை – யானைப் பாகன் 1960 – TMS – இசை:K.V.மகாதேவன்
கட்டு மீறிப்பாயும் இனிமை பொங்கும் அழகிய பாடல்.K.V.மகாதேவன் தனக்கே உரிய பாங்கில் அள்ளித்தந்த கலயாணியின் இனிமையான தழுவல்.
35 . நான் என்ன சொல்லி விட்டேன் – பலே பாண்டியா 1962 – TMS – இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி
மெல்லிசைமன்னர்களின் மெல்லிசை உந்துதல்.1960 களின் மெல்லிசைப்பந்தலில் புதிய இசைக்கருவிகளை ராகத்தில் தோய்த்து பரிமாறிய இனிய பாடல்.
36 . அத்திக்காய் காய் காய் – பலே பாண்டியா 1962 – TMS + P.சுசீலா + ஸ்ரீநிவாஸ் +ஜமுனாராணி – இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி
சாதாரண சொற்களில் நுண்மையான விவரணைகளை வைத்து கண்ணதாசன் விளையாட செவ்வியல் ராகங்களின் சுவையை புது தினுசாக தந்து பாட்டா இல்லை மெட்டா என்று போட்டி போட வைக்கும் பாடல்.மெட்டுக்குள் பாடல் வரிகளைக் குழைத்து அதன் உயிர் துடிப்பை நாம் உணர வைத்த பாடல்.சினிமாஇசையின் அலைகளில் நர்த்தனம் புரிந்த இசை விற்ப்பனர்களின் இனிமை துலங்கும் பாடல்.
37 . மதுரையில் பறந்த மீன் கொடியை – பூவா தலையா 1969 – TMS – இசை:விஸ்வநாதன்
கல்யாணி ராகத்தின் ஆளுமையையும் ,எழுச்சியையும் தனது இசைச் சாம்ராஜ்ஜியத்தில் தமிழ் நாட்டின் வண்ணத்தையும் , பெருமையையும் தந்த மெல்லிசைமன்னரின் அற்ப்புதமான இசை வார்ப்பு.கவிஞர் வாலி எழுதிய பாடல்.
38 . இசை கேட்டால் புவி அசைந்தாடும் – தவப்புதல்வன் 1972 – TMS – இசை:விஸ்வநாதன்
அணைந்த விளக்கை தனது இசையால் எரிய வைத்த அக்பர் மாளிகையின் இசைக்கலைஞன் தான்சன் நோய்வாய்பட்ட பெண்ணை குணப்படுத்திய காட்சிக்கான பாடல்.1940 களில் K.L .சைகல் [ 1904 - 1947 ] என்ற பழம் பெரும் பாடக நடிகர் நடித்த TANSEN என்ற ஹிந்தி படத்திலும் இந்த காட்சிக்கு கல்யாணி ராகமமே பயன்படுத்தியிருப்பார்கள்.
தவப்புதல்வன் படத்தில் வரும் TANSEN நாடகத்திற்கான மெல்லிசை மன்னரின் ஈடு இணையற்ற கல்யாணி வார்ப்பு.TMS கல்யாணியின் சுவை அறிந்து அபாரமாகப் பாடிய பாடல்.
39 . நிலவே நீ சாட்சி – நிலவே நீ சாட்சி 1970 – P.சுசீலா – இசை:விஸ்வநாதன்
சுகமான பாடல் என்று சொல்வதற்கு எடுத்துக்காட்டான பாடல்.எளிமையான வாத்தியங்ககளில் நெஞ்சைப் பிணிக்கும் இனிமையை விடாப்பிடியாக கொண்ட காலகட்டத்துப் பாடல்.
40 . சித்திரை மாதம் பௌர்ணமி நேரம் – ராமன் எத்தனை ராமனடி1970 – P.சுசீலா – இசை:விஸ்வநாதன்
ரயில் சத்தத்தை பின்னணியாகக் கொண்டு மெல்லிசையை உச்சாணிக்கொம்பில் ஏற்றிவைத்த மெல்லிசைமன்னரின் நெகிழ்ச்சி மிக்க பாடல்.
” பொன்னழகு கன்னம் காதல் தேவன் பூஜையில் மலராதோ ” வரிக்ளைப்பாடும் போதும்
” சொர்க்கமோ நானும் நீயும் போகுமிடம் ” வரிகளிலும் கல்யாணி நெஞ்சை நிறைத்து விடுகிறது.என்ன கற்பனை..!!எப்படிப் பாடியிருக்கிறார் சுசீலா !!அபாரம்.அபாரம்.
41 . பண்ணோடு பிறந்தது தாளம் – விடிவெள்ளி 1960 – P.B.ஸ்ரீநிவாஸ்+ ஜிக்கி – இசை:A.M.ராஜா
மெல்லிசையின் முன்னோடியான A.M.ராஜா இசையமைத்த அருமையான பாடல்.ஹிந்தி பாடல்களுக்கு நிகராக அமைந்த பாடல்.மோகனத்தில் பல இனிமையான பாடல்களைப் பாடிய A.M.ராஜா தந்த தூய மெல்லிசை வடிவு. பாட்டா மெட்டா என்று போட்டி போடும் பாடல்.
41 . வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் – மன்னிப்பு 1967- TMS + P.சுசீலா – இசை:எஸ்.எம்.சப்பையா நாயுடு
சூப்பர் ஹிட் என்று சொல்லத்தக்க பாடல்.இந்த பாடலின் ஒளிப்பதிவைப் பற்றிக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.மிகத் துல்லியமான ஒலிப்பதிவில் பாடகர்கள் ஜொலிக்கின்றார்கள்.கேட்கக் கேடகத் திகட்டாத பாடல்.ஆரம்ப இசை ஹம்மிங் போன்ற அருமையான பல சங்கதிகள் உள்ள பாடல்.
42 . தண்ணொளி வெண்ணிலவோ – சந்தானம் 1956 – கண்டசாலா – இசை:எஸ்.தட்சிணாமூர்த்தி
கண்டசாலா கம்பீரமாகவும் ,நீரோட்டம் போல் லாவகமாகவும் பாடிய பாடல்.சங்கதிகளுக்கும் குறைவில்லாத பாடல்.
43 . பெண்ணில்லாத ஊரிலே – - ஜிக்கி – இசை:ஜி.ராமநாதன்
P.லீலா பாட வேண்டிய பாடலோ என்று எண்ண வைக்கும் பாடல்.கர்னாடக இசைப் பாங்கில் அமைக்கப்பட்ட இந்த பாடல் ஜிக்கியின் குரலில் வித்தியாசமாக ஒலிக்கும்.இது போன்ற பாடல்களை ஜிக்கி பாடுவதில்லை என்பதால் அப்படி ஒரு உணர்வு ஏற்ப்படுகிறது.இதுவும் ராமநாதனின் முத்திரைப்பாடல்.
44 . மஞ்சள் வெயில் மாலையிலே – காவேரி [ 1955 ] – C.S.ஜெயராமன் + ML வசந்தகுமாரி – இசை: ஜி.ராமநாதன்
கல்யாணியில் கஷ்டமான சங்கதிகளைப் போட்டு ராமநாதன் அசத்திய பாடல்.C.S.ஜெயராமனும் + ML வசந்தகுமாரியும் அற்புதமகப்பாடிய பாடல்.
” பஞ்சவர்ணக் கிளிகள் கொஞ்சும்
பரவசம் பார் ”
என்ற வரிகளில் ” பார் ” என்ற சொல்லில் நுண் சங்கதிகளை வைத்த ராமநாதனின் கைவண்ணப் பாடல்.C.S.ஜெயராமனும் + ML வசந்தகுமாரியும் தமிழ் செவ்வியல் இசையில் பரீட்சயம் மிக்கவர்கள் என்பதால் பாடல் தப்பியது.
45 . உள்ளம் இரண்டும் ஒன்று – புதுமைப்பித்தன் 1956 – C.S.ஜெயராமன் + ஜிக்கி – இசை: ஜி.ராமநாதன்
மீண்டும் ராமநாதனின் இன்னொரு நிறைவும் இனிமையும் தரும் பாடல்.தொட வேண்டிய இனிய சங்கதிகளை உச்சஸ்தாயியிலும் தொட்டு சென்று நம்மைப் பரவசப்படுத்தும் பாடல்.
46 . ஆதி அந்தம் இல்லா – நானே ராஜா 1957 – TMS – இசை:TR.ராமநாதன்
ஒரு சில படங்களுக்கு இசையமைத்த TR.ராமநாதனின் கர்னாடக இசைப்பாணியில் அமைந்த பாடல்.இனிய சங்கதிகளை போட்டு நல்ல பாடலுக்கு செய்ய வேண்டிய நியாயத்தை செய்துள்ளார் இசையமைப்பாளர்.TMS நன்றாகப்படிய பாடல்.
47 . முகத்தில் முகம் பார்க்கலாம் – தங்கப்பதுமை 1959 – TMS + P.லீலா + – இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி
மெல்லிசைமன்னர்களின் செவ்வியல் இசை சார்ந்த [ Semiclassical ] இனிய பாடல்.பொதுவாக தத்துவப் பாடல்களையும் ,சமுதாயக் கருத்துக்களையும் பாடு பொருளாக எழுதுவதில் நிபுணரான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய இலக்கிய நயமிக்க பாடல்.
48. வெட்கமாய் இருக்குதடி – பார்மகளே பார் 1963- சூலமங்கலம் + P.லீலா இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி
மன்னவன் வந்தானடி என்ற பாடலுக்கு அடி எடுத்துக் கொடுத்த பாடல் என்று சொல்லுமளவுக்கு சாயல் கொண்ட பாடல்.சூலமங்கலம் + P.லீலா இருவரும் அற்ப்புதமாகப் பாடிய பாடல்.இலங்கை வானொலியில் நாட்டியப்பாடல் என்ற நிகழ்ச்சியில் இது போன்ற பாடல்களை ஒலிபரப்பி நல்ல பாடல்களைக் கேட்க வைத்தார்கள். 1970 களிலிருந்து இது போன்ற பாடல்கள் இல்லாமல் போய்விட்டன.
49 . மன்னவன் வந்தானடி தோழி – திருவருட் செல்வர் 1966- P.சுசீலா – இசை:K.V.மகாதேவன்
KV .மகாதேவனுக்கு பெரும் புகழைத் தேடித் தந்த பாடல்.கல்யாணி ராகத்தின் இலட்சணங்களை அறிய விரும்பவர்கள் இந்தப் பாடலை கேட்டு அறிந்து கொள்ளலாம் என்ற கருத்துக்கேற்ப அமைந்த பாடல்.
50 . அந்தி மயங்குதடி ஆசை பெருகுதடி – பார்த்திபன் கனவு 1960 – ML.வசந்தகுமாரி – இசை:வேதா
மொடேர்ன் தியேட்டர்ஸ் என்ற பட நிறுவனத்திற்கு அதிகமாக இசையமைத்தவர் வேதா.பாடல்கள் வேறு மொழிகளிலிருந்து பிரதி பண்ணும் படி இசையமைப்பாளர்களை அனுமதிப்பதை வாடிக்கையாகக் கொண்ட அல்லது கட்டளை இடும் இந்த நிறுவனத்தின் உரிமையாளர் TR சுந்தரம் என்பவர் அந்தக் கால புகழ் பெற்ற இயக்குனர்.அந்தக் கால நடிகரான PU.சின்னப்பாவை படப்பிடிப்புக்கு தாமதமாக வந்தர்க்காக மரத்தில் கட்டி வைத்த இயக்குனர்.
ஜி.ராமநாதன் போன்றவர்கள் தங்கள் சொந்த படைப்புகளுக்கு சுதந்திரம் இல்லாததால் TR சுந்தரத்திடமிருந்து விலகிச் சென்றார்கள்.
அந்த நிறுவனத்தில் பிற்காலத்தில் பணியாற்றிய வேதா பல நல்ல ஹிந்திப்பாடல்களை நேரடியாக தமிழில் கொண்டு வந்தார்.அதனால் அவரை ” காப்பி ” இசையமைப்பாளர் என அழைப்பதுண்டு.ஆனால் அவர் தனித் தனமையாக பல அற்ப்புதப் பாடல்களுக்கு இசையமைத்தவர் என்பது பலரும் அறியாத செய்தி.அந்த வகையில் தனித்துவமாக செவ்வியல் இசையில் வேதா இசையமைத்த பாடல் தான் இந்தப் பாடல். ML.வசந்தகுமாரி இனிமையாகப் பாடிய பாடல்.
இந்தப்படத்தில் மட்டுமல்ல ,
நீலமான் கடலலையில் கோலமிடும் மீனினங்கள் ,- படம் :மலைநாட்டு மங்கை -KJஜேசுதாஸ் + P.சுசீலா
நீல வண்ண கண்கள் இரண்டு [ படம் : வீராங்கனை ] ,- KJஜேசுதாஸ் + P.சுசீலா
நெஞ்சினிலே நினைவு முகம் [ படம்: சித்திராங்கி ]
போன்ற பல நல்ல பாடல்களை தந்தவர் வேதா
51 . இதய வானின் உதய நிலவே எங்கே போகிறாய் – பார்த்திபன் கனவு 1960- ML.வசந்தகுமாரி – இசை:வேதா
வேதாவின் மேதாவிலாசத்தைப் பறை சாற்றும் பாடல்.மேலே உள்ள பாடல் கர்னாடக இசை சார்ந்தாதகவும் இந்தப் பாடல் மிகச் சிறந்த மெல்லிசைப் பாடலாகவும் தந்த அவரது ஒப்பற்ற பாடல்.விரகதாபத்தை உணர்த்தும் தன்னிகரற்ற பாடல்.மிகச் சிறந்த எழுத்தாளாரான விந்தன் எழுதிய அற்ப்புதமான வரிகளுக்கு வேதாவின் இசை மகிமை சேர்க்கும்.
” பறந்து வந்து உன்னைத் தழுவ
பாழும் சிறகு இல்லையே ” வரிகளில் பிரிவின் வேதனை அழகாக வெளிப்படும்.நெஞ்சைப்பிழியும் இசையும் பாடலும்.
52 . ஏதுக்கோ இரு விழி நாணங்கள் ஏதுக்கோ – சௌபாக்கியவதி 1957 – TMS – இசை:பெண்டலாயா நாகேஸ்வரராவ்
இலங்கை வானொலியிலேயே மிக அரிதாக ஒலிபரப்பட்ட மிக இனிமையான பாடல்.மெல்லிசை வார்ப்பில் அழகு துலங்கும் பாடல். கல்யாணி ராகத்தை எத்தனை விதமாக இசையமைப்பாளர்கள் கையாண்டாலும் ஒவ்வொரு வகையிலும் இனிப்பாகவே இருக்கும்.
53 . உள்ளும் புறமுமாகி ஒளியாகி – சௌபாக்கியவதி 1957 – P. லீலா – இசை:பெண்டலாயா நாகேஸ்வரராவ்
பட்டுக்கோட்டையின் விருத்தப்பாடலை மிக , மிக அழகான கல்யாணியில் வடித்த இசையமைப்பாளரை எப்படியும் வாழ்த்தலாம்.
54 . உன்னை நினைக்கையிலே கண்ணே – கல்யாணிக்கு கல்யாணம்1957 – TMS – இசை:ஜி.ராமநாதன்
ஜி.ராமநாதனின் இனிமை மிக்க பாடல்.அமைதியில் தோய்ந்து அடக்கமாக அமைத்தாலும் அமர்க்களமான சங்கதிகளால் துலங்கும் பாடல்.மெல்லிசைக்கு ஒரு புதிய அமைப்பை தரும் பாடல்.
55 . நான் செய்த பூஜாபலம் – குணசுந்தரி 1955 – AM.ராஜா + P.லீலா – இசை:கண்டசாலா
பல் வேறு சிறந்த இசையமைப்பாளர்களிடம் சிறந்த பாடல்களைப்பாடிக் கொண்டே , அதையும் விட மாறுதலாக , புதுமையாக தன்னாலும் இசையமைக்க முடியும் என்று சாதித்த கண்டசாலா இசையமைத்த பாடல். அவரைப் போலவே திறமைமிக்க AM.ராஜாவும் P.லீலாவும் இணைந்து பாடிய ஈடுஇணையற்ற தேனினும் இனிய மெல்லிசைபாடல்.
56 . பார்த்துக்கொண்டிருந்தாலே போதும் – சித்தூர் ராணி பத்மினி 1963 – சீர்காழி – இசை:ஜி.ராமநாதன்
இசைமேதை ஜி.ராமநாதனின் நெஞ்சத்தையும் , கலை ஞானத்தையும் ஒன்று சேர்த்து நம் கைகளில் இசைத்தட்டாகத் தந்து சென்ற பாடல்.ஜி.ராமநாதனின் இசை வன்மையை உணர்த்தும் பாடல்.தமிழ் மக்களின் மகோன்னத இசை தந்த அரும்பாலைப்பண்ணில் [கல்யாணி ] அர்ப்புதப்பாடல்.சீர்காழி கோவிந்தராஜனின் சாதனைப்பாடல்.இசைச் சிகரத்தில் நிற்கின்ற பாடல்,
57 .தேன் சுவை மேவும் சுந்தர கீதம் – டாக்டர் சாவித்திரி 1955 – P.லீலா – இசை:ஜி.ராமநாதன்
விதம் விதமாக இசையில் தேன் பாய்ச்சிய ஜி.ராமநாதன் அவர்களின் சுந்தர கீதம்.ஆனந்த அமுத சாகரம்.
P.லீலா பாடும் ஆ…ஆ …என்ற அசைவுகளில் என்ன வேகம் ! என்ன இனிமை !! சொல்ல வார்த்தைகள் இல்லை.
58 . கோமள செலும் தாமரை மலர் – நல்ல தங்கள் 1955 – P. லீலா – இசை:ஜி.ராமநாதன்
தாள லயத்தில் தனது முத்திரையை பதித்த ஜி.ராமனாதனின் தாலாட்டுப்பாடல்.
59 . ஆட வாரீர் இங்கே ஆட வாரீர் – ரம்பையின் காதல் – பி.பானுமதி – இசை:TR பாப்பா
TR பாப்பா என்ற பாரம்பரிய இசைத்திறனும் ,அதிலிருந்து முளைக்கும் மெல்லிசையிலும் பல விருந்து தந்த இசை மேதையின் அழகிய வார்ப்பில் கல்யாணி களை கட்டும் பாடல்.
60 .துள்ளி திரிந்த பெண் ஒன்று – காத்திருந்த கண்கள் 1962 – BPஸ்ரீநிவாஸ் – இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி
ஹிந்தி இசையின் தாக்கத்தால் உந்தப்பெற்ற மெல்லிசைமன்னர்கள் ஹிந்தி இசை சார்ந்த பாடலகளை போன்ற பல பாட்ல்களைத் தந்தவர்கள்.அவர்களின் அற்ப்புத மெல்லிசைப்பாடல் இந்தப்பாடல்.படத்திற்குப் படம் மெல்லிசை வண்ணங்களை அள்ளி இறைத்து பின் வந்த இசையமைப்பாளர்களின் முன்னோடிகளாக விளங்கினர்.
“சொல்லி வைத்து வந்தது போல் சொக்க வைக்கும் மொழி எங்கே ” என்ற வரிகளில் வழுக்கி விழுந்து விடக்கூடிய அருமையான சங்கதிகளை நுட்பமாக வைத்த சாதனை பாராட்டத்தக்கது.PBஸ்ரீநிவாஸ் மிக அழகாக அந்த சங்கதிகளை பாடியிருப்பார்.
61 .தானே தனக்குள் ரசிக்கின்றாள் – பேரும் புகழும் 1976 -KJ ஜேசுதாஸ் – இசை:V குமார்
துள்ளி திரிந்த பெண் ஒன்று என்ற பாடலின் தெறிப்புக்கள் தெரிகின்ற பாடல் இது.அந்தப் பாடலின் உந்துதல் துல்லியமாகத் தெரிகின்ற மதுரமான பாடல்.
62 .பொன் ஓவியம் ஒன்று ரதியின் வடிவில் – குமரி பெண்ணின் உள்ளத்திலே 1981 -SPB + வாணி ஜெயராம் – இசை:சங்கர் -கணேஷ்
இசைவேந்தர்கள் சங்கர் -கணேசின் இனிய இசையில் வெளிவந்த அருமையான பாடல்.இந்த பாடல் அவர்களே இசையமைத்த ” லட்சார்ச்சன கண்டு ” ஜேசுதாஸ் பாடிய மலையாளப் பாடலின் தமிழ் வடிவம் ஆகும்.
62 .கோகுலத்தில் கண்ணா கண்ணா – கோகுலத்தில் சீதை 1996 – SPB + சித்ரா + தேவா – இசை:தேவா
63 . எந்தன் உயிரே எந்தன் உயிரே – உன்னருகில் நான் இருந்தால் 2000- கிருஷ்ணராஜ் + சித்ரா – இசை:தேவா
மெல்லிசையில் கட்டுகோப்பான மெட்டுக்கள் முகிழ்த்த் 1960களில் கல்யாணி ராகத்தில் வெளிவந்த இனிமையான பாடல்கள் சில:
64 . திருநாள் வந்தது தேர் வந்தது – காக்கும் கரங்கள் 1965 – P. சுசீலா – இசை:K.V.மகாதேவன்
65 .வழிவழியே வந்த தமிழ் பண்பாடு – நம்ம வீட்டு லட்சுமி 1966 – P. சுசீலா – இசை:MS விஸ்வநாதன்
66 . இனிதான தென்றல் – -சூலமங்கலம் ராஜலட்சுமி – இசை:
67 . அதிசயம் இவனது அறிவு மயம் – மரகதம் 1959 – ML வசந்தகுமாரி – இசை:SM.சுப்பைய்யாநாயுடு
68 .கண்ணன் வந்தான் எங்கள் கண்ணன் வந்தான் – ராமு 1966 – சீர்காழி + TMS – இசை:MS விஸ்வநாதன்
64 . காதலாகி கசிந்து – கண்கள் – ஜிக்கி தி – இசை:
69 . பரமன் அருளை பெற நியாயமா – கல்யாணம் பண்ணியும் பிரமச்சாரி 1954 – ஜிக்கி தி – இசை:TG.லிங்கப்பா
70 . எங்கெங்கு போனாலும் -குடும்ப கௌரவம் 1958 – பி.லீலா – இசை:விசுவநாதன் ராமமூர்த்தி
71 . இடுக்கண் வருங்கால் -முதல் தேதி – MM தண்டபாய் தேசிகர் – இசை:TRபாப்பா
71 . இதயத்திலே புகுந்து -நம் குழந்தை – S.வரலட்சுமி – இசை:V.நாகைய்யா
72 . வாழ்வின் கடமையை மறவாதே -நம் குழந்தை – VNசுந்தரம் + கானசரஸ்வதி – இசை:V.நாகைய்யா
73 .நல்லதோர் வீணை செய்தே -கள்வனின் காதலி 1955 – P.பானுமதி – இசை: G.கோவிந்தராஜுலு நாயுடு
74 .சுப மங்களம் பொங்கிடும் -ஏழையின் ஆஸ்தி 1955 – A P.கோமளா – இசை:
இளையராஜாவின் கல்யாணி :
பழம்பெரும் தமிழ் இசையமைப்பளர்கள் பலரும் கல்யாணி ராகத்தில் என்னென்ன விதமாக ரசங்களைப் பிழிய வேண்டுமோ அந்தந்த விதங்களில் பிழிந்து தெடுத்து நாம் திளைக்கும் வண்ணம் பாடல்களைத் தந்தார்கள்.அவர்கள் மட்டுமல்ல , அவர்கள் வியந்து பார்த்துக்கொண்டிருந்த ஹிந்தி திரை இசையின் ஜாம்பவான்கள் தங்கள் பங்கிற்கு கல்யாணி ராகத்தில் பாடல்களை அள்ளி வீசினார்கள்.
அவர்களின் இசை கூட ஒரு எல்லைதான் என்று சொல்லவைக்கும் அளவுக்கு இருந்தது.இதற்கு மேலும் யாரவது கற்பனை வளம் கொண்டவர்கள் வரமுடியுமா என்று என்று எண்ணிய காலம் ஒன்றிருந்தது.
ஏன் இல்லை ? தமிழ் மக்களின் நாட்டுப்புற இசையும் , வளமிக்க தமிழ் செவ்வியல் மரபும் , நவீனங்ககளை நமக்குக் காட்டிய ஐரோப்பியரின் மேலைத்தேய உன்னத இசையும் என அந்த மூன்று இயக்கங்கள் ஒன்றுகலந்த ஆழ்ந்த இசைஞானம் மிக்க கலைஞனாக தன்னை வளர்த்துக் கொண்டஇசைக்கலைஞன் அன்னக்கிளி படத்தில் அறிமுகமானார்.
ஊற்று ஒன்றிலிருந்து பெருகும் நீர் பல திசைகளிலும் ஓடி பின், ஓரிடத்தில் சங்கமித்து பேராறாக ஓடும் போது அதனை நைல் நதி என்றும் , கங்கை நதி என்றும் , வோல்கா நதி என்றும் அவை காட்டும் அழகையும் வியந்து ,வியந்து பாராட்டுகிறோம்.அவற்றை இலக்கியமாக , கவிதையாக , ஓவியமாக கலைஞர்கள் தரிசிக்கின்றார்கள்.அந்த நதிகள் காட்டும் அழகில் மயங்கி ரசிக்கும் மக்களும் அவ்விதமே தாங்கள் விரும்பியவாறு ஏற்றிப் போற்றுவர் .அவர்கள் அந்த நதியின் மூலத்தை தேடுவதில்லை.அது ஆராய்ச்சியாளர்களின் வேலை.
காலங்காலமாக் இசை வாழ்வோடு மிக நெருங்கி உறவாடி ,உணர்வூட்டிய பல இசைமேதைகள் என்கிற ஊற்றுக்கள் தங்கள் படைப்பின் ரகசியங்களைக் காவிச் சென்று ஒன்று கலந்த ,சங்கமித்த பெரும் வனப்பு மிக்க மகாநதியே இளையராஜா.
பொங்கி பிரவகித்து ஓடும் பேராறு ஊற்றின் பரிமாணமே அவர். ஒன்றுக்கொன்று முரண் அல்ல.
ஊற்றிலிருந்து நதியை பிரிக்க முடியாதது போல முன்னவர்களின் ஈடுஇணையற்ற தொடர்ச்சி அவர்.ஒன்றிலிருந்து ஒன்றை பிரிக்க முடியாது.
பல நூறு இசைக்கலைஞர்களும் தங்கள் கற்பனையின் உச்சங்களை எல்லாம் காட்டிய பின்னும் , பத்தோடு ஒன்றாக இல்லாமல் அதிலிருந்தும் புதிதாக ஒன்றைத் தந்த புதுமைக்கலைஞன் இளையராஜா.
இந்திய மரபு சார்ந்த ராக இசையின் உச்சங்களையும் , நுண்மையான மேலை செவ்வியல் இசையின் உன்னதத்தையும் இணைத்து , ராக இசையின் ஆழத்தையும் , உயிர்ப்பையும் வைத்துக் கொண்டே அவர் தந்த இசைபின்னல்கள் ஏராளம்.அவரின் மனவிழைவும் , ஆற்றலும் வியக்கத் தக்கது.
வீதியில் அலையும் மாடுகள் காகிதத்தை உண்ணுவதைப் பார்த்து நாம் ஆச்சரியப்படுகின்றோம்.என்னவிதமான வண்ணங்களைக் கொண்டு மறைத்தாலும் மாடுகள் பொருட்படுத்துவதில்லை.
அந்தக் காகிதங்கள் மரத்தின் மூலத்திலிருந்து வந்தவை என்பதை மாடுகள் அறிந்தது போலவே ,நாம் கேட்டு , நம் மனக் குகைகளில் நம்மை அறியாமல் படிந்து ,உணர்வூட்டி , உள்ளத்தோடு கலந்து கிடக்கின்ற ராகப் புதையல்களை , தனது இசையில் தந்த பாங்கு இளையராஜாவின் படைப்பாற்றலின் சிறப்பம்சமாகும். .வாத்தியக்கருவிகளின் பயன் பாட்டில் அந்த புதுமை தன்னிகற்றற்று துலங்கின.வாத்திய இசையை தேவையான இடத்தில் பாய விடுவதும் , இசை வர்ணனைகளை அங்காங்கே விரித்து ரசிகரை இசை அறிவூட்டலுக்கும் உள்ளாக்கினார்..
அவற்றை அவர் , அவருக்கு முன்னைய , மற்றும் அவரது சமகால இசையமைப்பாளர்கள் பயன் படுத்திய அதே வாத்தியங்களிளிருந்தே எழுப்பிக் காட்டினர்.1950களில் இந்தி சினிமாவிலும் , 1960 களில் தமிழ் சினிமாவிலும பாடல்களில் ஆரம்பத்திலும் ,இடையிலும் வாத்திய இசையை அழகாக பயன்படுத்தும் ஒரு முறை உருவாகியது. அந்த வழியில் நின்று இளையராஜா எழுப்பிய இன்னிசையை அவரது முன்னோடி இசைமேதைகளான நௌசாத், சலீல் சௌத்த்ரி , ஆர் .டி.பர்மன் , எம்.எஸ்.விஸ்வநாதன் போன்றோர் வியந்து பாராட்டினார்கள்.
அவர்கள் மட்டுமல்ல் சிறந்த எழுத்தாளரும் , இசை மேதைகளுடன் நேரடியாகப் பழகியவரும் , சிறந்த இசை ரசிகரும் ,அவ்வப்போது இசை பற்றி அருமையாக எழுதிவரும் திரு. கி.ராஜநாராயணன் அவர்கள் இளையராஜாவின் வாத்திய இசையை ” அவர் செய்த ஜாலவித்தைகள் அர்ச்சுனன் அம்புக்கு நிகரானவை ” என ரமேஸ் -பிரேம் என்பார்கள் எழுதி , இயக்குனர் தங்கர்பச்சன் வெளியிட்ட நூல் முன்னுரையில் பாராட்டியிருக்கின்றார்.
பெருபாலான பழைய பாடல்களில் இசையமைப்பாளர்களின் பெயர்களை ஆங்காங்கே மாற்றி போட்டால் யார் எந்த பாடலுக்கு இசையமைத்தார்கள் எனபதை இலகுவில் இனம் காண முடிவதில்லை.அதனால் தான் ” இந்தப் பாடலை இசையமைத்தவர் V..குமார் , நான் விஸ்வநாதன் என்றல்லவா இவ்வளவு காலமும் நினைத்திருந்தேன் , இல்லை அது சுதர்சன்மா , கோவர்த்தனமா ” என பேசிக்கொள்வதை நாம் அடிக்கடி கேட்கிறோம்.
இளையாராவின் வாத்திய இசை அவரை துல்லியமாக அடையாளம் காட்டிவிடும் என்பதற்கு ” சின்னத்தம்பி பெரியதம்பி ” படத்தில் வரும் பாடல்களில் ஒன்றான ” ஒரு காதல் என்பது என் நெஞ்சில் உள்ளது ” என்று தொடங்கும் பாடலை சொல்லலாம்.
அந்த படத்திற்கு இசையமைத்தவர் கங்கை அமரன்.இவ்வளவு நேர்த்தியாக இசை இருக்கிறதே என்று எவ்வளவோ காலம் ஆச்சரியப்பட்டதுண்டு.சமீபத்தில் கங்கை அமரன் ” அந்தப் பாடல் இளையராஜா வேறு ஒரு படத்திற்கு இசையமைத்ததாகவும் , தான் அதனை இந்தப் படத்தில் பயன்படுபடுத்தினேன். ” என அந்த உண்மையைச் சொன்னார்.
” அவருக்கு வாசிக்கும் கலைஞர்கள் தான் எனக்கும் வாசிக்கின்றார்கள் , ஆனால் அதென்னவோ அவருடைய” நாதம் “நமக்கு கிடைப்பதில்லை ” எனவும் வியந்து கூறியிருக்கின்றார்.
கல்யாணி ராகத்தை குறிப்பிட்ட காலப்பகுதியில் மற்ற இசையமைப்பளர்களை விட , அதிகமாக பயன்டுத்திய இசையமைப்பாளராக விளங்கிய தனாலேயே சுப்புடு என்ற கர்நாடக இசை விமர்சகர் ” அவனைப்போல் கல்யாணியையும் , கம்சானந்தியியும் கும்பாபிசேகம் செய்து அசத்தியவர்கள் யாருமில்லை ” என்று புகழ்ந்தார்.
பழந்தமிழ்ச் செல்வியான , ராகங்களின் பேரரசியான , எங்கள் அருமை கல்யாணியை அவர் நவீன அழகியாக அலங்கரித்து நம்மிடம் உலவ விட்டிருக்கின்றார்.தொல்லிசை மரபின் தன்னிகரில்லாத ராணியான அவளை உள்ளுரம் குன்றாத , கேட்ப்போரை பிணிக்க வல்ல பாடல்களை மரபின் பெருமையில் நின்றும் , நவீனத்திலும் அவர் காட்டிய சாகசங்கள் இசைப் பேராசையின் சுழல்வீச்சு எனலாம்.
இனி இளையராஜா இசைய்மைத்த பாடல்கள் சிலவற்றைப் பார்ப்போம்.:
01 .மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே – நண்டு -உமா ரமணன் – இசை:இளையராஜா
வீணை இசையுடன் ஆரம்பித்து , ட்ரம்ஸ் , பின் மேலைத்தேய பாணியில் வயலின்கள் இசைக்க கல்யாணியை இன்னொரு பக்கமாக வயலின்கள் இசைக்க ஆரம்பிக்கும் இனிமையான கல்யாணி.
பாடிய உமா ரமணனின் குரல் இனிக்கிறது.பாடலின் மென்மைக்கு அற்ப்புத வாத்திய இசை இன்பப் புனலில் இணைந்த இன்னிசையாய் மலர்ந்து கல்யாணி ராகத்தை வளம் சேர்க்கிறது.
02 . நீங்காத எண்ணம் ஒன்று – விடியும் வரை காத்திரு -மலேசியா வாசுதேவன் + எஸ்.ஜானகி – இசை:இளையராஜா
பல்லவியை தொடரும் இசையில் கிட்டார் , குழல் ,அதனுடன் இழையும் வயலின்கள் நம்மை மிதக்க வைக்கும்.அனுபல்லவிக்கு பின் பாயும் இசைத்துணு க்கு அலை அலையாக எழுந்து கல்யாணியை சரணடையும்.
03 .நான் பாட வருவாய் – உதிரிப்பூக்கள் – S.ஜானகி – இசை:இளையராஜா
நகைசுவை பாடல்க தோற்றம் தந்தாலும் ஒரு கச்சேரி கேட்ட உணர்வைத் தரும் வகையில் எஸ்.ஜானகி பாடிய அழகான கல்யாணி.
04 .நதியில் ஆடும் பூவனம் – காதல் ஓவியம் – SPB + S.ஜானகி – இசை:இளையராஜா
இனிமையின் உச்சத்தை தரும் கல்யாணியில் நமது மரபு இசையின் வாத்தியங்களிலும் இசை நெசவுகளைத் தந்த இசைஞானியின் மென்மையான கல்யாணி வார்ப்பு.
” கனவு படுக்கை போடுமே ” என்ற வரிகளைத் தொடர்ந்து வரும் ஹம்மிங் பாடலின் உச்சம்.
05 .நான் என்பது நீயல்லவோ – சூரசம்காரம் – அருண்மொழி + சித்ரா – இசை:இளையராஜா
மெல்லிசையை ஒரு கை பார்க்கிறேன் என்று சொல்வது போல போடப்பட்ட மெட்டு.கல்யாணியில் பாலையும் தேனையும் பறிமாறிய பாடல்.பாடலின் இடையில் வரு ஹம்மிங் கல்யாணியை நிலைநிறுத்துவதுடன் பின்னணி இசை நம் காலத்துக்குரிய கல்யாணியை நமக்கு தந்து நம்மை மகிழ்வித்தது.
06 அதிசய நடமிடும் அபிநய சரஸ்வதியோ – சிறையில் பூத்த சின்ன மலர் – KJ ஜேசுதாஸ் + சித்ரா – இசை:இளையராஜா
அதிசய தாள அமைப்பில் தொடங்கி பிரவகித்து ஓடும் அழகான சங்கதிகள் கொண்ட பாடல்.எத்தனை எத்தனை விதமாக இசையைக் கலந்தாலும் ராகத்தின் உயிர் நிலைகளைத் தொடும் இசைஞானியின் கற்பனை வியக்க வைக்கும்.
07 வந்தால் மகா லக்ஸ்மியே – உயர்ந்த உள்ளம் – SPB – இசை:இளையராஜா
கர்நாடக இசைப்பாணியில் அனாசயமாக இசையமைக்க முடியும் என நிரூபிக்கும் பாடல்.கல்யாணியில் அமைக்கப்பட்ட இன்னொரு நகைச்சுவைப் பாடல்.
08 .உன்னைக் காணும் நேரம் நெஞ்சம் – உன்னை நான் சந்தித்தேன் – KJ ஜேசுதாஸ் + வாணிஜெயராம் – இசை:இளையராஜா
எழுச்சி தரும் ஹம்மிங் முன்னிசை , அற்ப்புதமான ஆரம்பம் கொண்ட பாடல்.வாத்திய இசையில் லாவண்யங்கள் காட்டும் தன்னிகற்ற பாடல்.தனித் தன்மை மிக்க வாத்தியங்ககளை கலக்கும் ஆளுமையை ஒவ்வொரு பாடலிலும் தந்து தமிழ் சினிமா இசையை ஒப்பில்லாத உயர்வுக்கு கொண்டு சென்ற இசைஞானியின் விரிந்து செல்லும் கற்பனை ஆற்றலை உணர்த்தும் பாடல்.
09 .உன்னை நான் பார்க்கையில் – கண்ணுக்கொரு வண்ணக்கிளி – SPB + ஆஷா போஸ்லே – இசை:இளையராஜா
ஹார்மொனி இழையால் கல்யாணியை நெசவு செய்த பாடல்.
10 .உன்னை நான் பார்க்கையில் – கண்ணுக்கொரு வண்ணக்கிளி – KJ ஜேசுதாஸ் – இசை:இளையராஜா
மேலே சொன்ன அதே பாடலுக்கு இன்னுமொரு விதமான இசைச் சேர்ப்பை செய்த கற்பனையின் அதிபன் இளையராஜா என்று சொல்ல வைக்கும் பாடல்.இந்த பாடலின் ஆரம்பத்தில் ” எங்கேங்குமே ஒ ..ஒ போகின்றதே ஒ.. ஒ..” என்ற பகுதியை பாடும் போது பின்னணியில் கொடுக்கப்பட்ட இனிய ஒலி உடலில் அதிர்வுகளைத் தந்து சிலிர்க்க வைக்கும்.ஹார்மொனி இசையின் நுண் கூறுகளைப் பின்னி பின்னி அதில் ராகங்களின் வர்ணனைகளை சமநிலையாக தந்து தனது இசை ஆளுமை யைக் காட்டியிருப்பார் ராஜா.
அவற்றை தேவையான இடத்தில் பாய விடுவதும் , இசை வர்ணனைகளை அங்காங்கே விரித்து ரசிகரை இசை அறிவூட்டலுக்கும் உள்ளாக்கினார்..
11 .ராதா அழைக்கிறாள் – தெற்க்கத்திக்கள்ளன் – S.ஜானகி – இசை:இளையராஜா
பல வகை வாத்திய இசைவிணக்கத்திற்க்கு சிறப்பு சேர்க்கும் பாடல்.மெல்லிசையில் ஊடுபாவமாக கல்யாணியை கேட்டு திழைக்க வைக்கும் பாடல்.
12 .வைதேகி ராமன் – பகல் நிலவு – S.ஜானகி – இசை:இளையராஜா
விரிந்து பரவிய இசை வெளியில் பகட்டில்லாமல் நம்மை பித்தாக வைக்கும் செவ்வியல் இசையில் கல்யாணி துலங்கும் பாடல்.பாடிய எஸ்.ஜானகி பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.
13 .விழியே விளக்கொன்று ஏற்று – தழுவாத கைகள் – ஜெயச்சந்திரன் + S.ஜானகி – இசை:இளையராஜா
1980 களில் வெளிவந்த ஈடு இணையற்ற பாடல்களில் ஒன்று.கல்யாணியை எத்தனை விதமாக இசைஞானி சிங்காரித்திருக்கிறார் என்பதற்கு இந்தப் பாடலும் ஒரு சான்று.
14 .ஒண்ணா ரண்டா தாமரைப் பூ – தழுவாத கைகள் – ஜெயச்சந்திரன் + S.ஜானகி – இசை:இளையராஜா
வீணை இசையின் முன்னீட்ட்டுடன் ஆரம்பிக்கும் அழகிய பாடல்.கதையின் போக்குக்கு பாடல் வரிகள் ஏதேதோ சொன்னாலும் , இசை அதனையும் மீறி ஓங்கி நிற்கிறது.
15 .தேவன் தந்த வீணை – உன்னை நான் சந்தித்தேன் -ஜெயச்சந்திரன் + S.ஜானகி – இசை:இளையராஜா
” தேடும் கைகள் தேடினால் அதில் ராகம் இன்றி போகுமோ “என்பது போல இவ்வளவு அருமையாக பெரிய ராகங்களை காதுக்கினிய மெல்லிசையாகத் தரும் இசை
ஜாம்பவான்களால் நாம் “இசையில் எவ்வளவு பெரிய செல்வந்தர்கள் “என்பதை நமக்கு உணர்த்தும் பாடல்.
16 .தேவன் தந்த வீணை – உன்னை நான் சந்தித்தேன் -SPB + S.ஜானகி – இசை:இளையராஜா
மேல் சொன்ன அதே பாடலுக்கு இன்னுமொரு புதிய இசை விவரணை தொடுக்கப்பட்ட பாடல்.அற்ப்புதங்களை சாதாரணமாகச் செய்து காட்டிய பாடல்.
17 .ஜனனி ஜனனி ஜெகம் நீ – தாய் மூகாம்பிகை – இளையராஜா – இசை:இளையராஜா
கல்யாணி ராகத்தை புதிய கோணத்தில் அமைத்து மனதை உருக வைக்கும் வண்ணம் அமைக்கப்பட்ட பாடல்.கல் நெஞ்சையும் கனிய வைக்கும் பாடல்.பின்னணியில் கோரஸ் அற்ப்புதமாக இணைக்கப்பட்ட பாடல்.இந்தப்பாடல் இல்லாமல் இசைஞானியின் இசை நிகழ்ச்சிகள் தொடங்கப்படுவதில்லை.இந்தப்பாடலின் இசையமைப்பு இசை நிகழ் ச்சிகளில இந்தப்பாடல் தரும் பாதிப்பை இசை ரசிகர்களின் கண்களில் காணலாம்.
18 .அம்மா என்றழைக்காத உயிரில்லையே – மன்னன் – KJ ஜேசுதாஸ் – இசை:இளையராஜா
ஜேசுதாஸ் பாடத் தவறிய மேலே சொன்ன பாடலுக்கு பதிலாக இணையாக போடப்பட்ட மெட்டுப் பாடல்.திரை இசையில் அம்மா பற்றிய பாடலகளில் உச்சம் பெற்ற
பாடல்.கல்யாணியின் அழகுகளை தந்த இசைப்பாங்கு வியக்க வைக்கும்.ஜேசுதாஸ் பாடிய சிறப்பான பாடல்களில் இதுவும் ஒன்று.
19 .கலைவாணியே உனைத்தானே – சிந்துபைரவி – KJ ஜேசுதாஸ் – இசை:இளையராஜா
இந்தப் பாடல் இசையமைத்த விதம் பற்றி பல விற்ப்பனர்களும் விதந்து நிறைய பேசிய பாடல்.ஜேஸுதாஸ் உயிர்நிலைகளைத் தொடும் வண்ணம் பாடிய பாடல்.
20 .சுந்தரி கண்ணால் ஒரு சேதி – தளபதி -SPB + S.ஜானகி – இசை:இளையராஜா
விளக்குமாறு என்னும் படகாட்சிக்கு பட்டுக்குஞ்சமா என்று கேட்க வைக்கும் பாடல்.இந்த பாடலில் வரும் பின்னனி இசையை வாசித்தவர்கள் RD.பர்மனின் இசைக்குழுவினர்.ஒவ்வொரு பகுதி இசைத் துணுக்கையும் வாசித்த பின் கைதட்டி பாராட்டியதாகவும், அந்த இசைக்கலைஞர்கள் இது போன்ற இசையை வாசிப்பதற்கு அதிக நேரம் எடுத்ததாகவும் பின்னணிப்பாடகர் SPB பல சந்தர்ப்பங்களில் பேசியிருக்கின்றார்.
இது போன்ற இசையை யாராவது கொடுத்திருக்கின்றார்களா ” Higly Impossible ” என்று SPB வியந்ததும் உண்டு.
21 .வெள்ளைப்புறா ஒன்று – புதுக் கவிதை – KJ ஜேசுதாஸ் + S.ஜானகி – இசை:இளையராஜா
மரபிசைக்கு நவீன இசையை இசைவாக்கிய பாடல்களை அள்ளி அள்ளி , வகை வகையாக வீசிய இசைஞானியின் மகோன்னதப்பாடல்.மரபிசையை சலிக்க செய்யாமல் அதை புதுமை கலந்த அனுபவமாக்கிய மேதமைப்படைப்பு.கவர்ச்சி மிக்க நவீன இசையில் தமிழ் மரபின் மாண்பிசை.
22 .சிறு கூட் டிலே உள்ள குருவிக்கு – பாண்டி நாட்டுத் தங்கம் – மனோ + சித்ரா – இசை:இளையராஜா
நாடுப்புற இசையின் தாளங்களை பயன்படுத்துவதில் தலை சிறந்த சிருஸ்டிகர்த்தா என ரத்தினச் சுருக்கமாக சொல்லத்தக்க வகையில் ,ராகங்களை இழுத்து வந்து அதற்கு கிராமியச் சாயம பூசி ,” நாட்டுப்புற இசையின் மேன்மை தான் இந்த ராகங்கள் “என ஒரு பெரிய வரலாற்று உண்மையை நடைமுறையில் யாவரும் அறியும் வண்ணம் ஆரவாரமில்லாமல் செய்து காட்டிய சாதனைகள் ஏராளம்.அதில் ஒன்று இந்தக் கல்யாணிப்பாடல்.
23 .மலையோரம் மயிலே – ஒருவர் வாழும் ஆலயம் – மனோ + சித்ரா – இசை:இளையராஜா
தொல்லிசை ராகங்ககளை நாட்டுப்புற தாளத்தில் நிறுத்திய வேளையில் அருமையான சங்கதிகளையும் போட்டு மனதை நெகிழ வைக்க முடியும் என தனது படைப்பாற்றலில் துணிவாண்மையைக்காட்டிய பாடல்.
24 .கொஞ்சம் சங்கீதம் கற்று தா ஞானக்குயிலே – வீட்டிலேயே விஷேசங்க – S.ஜானகி – இசை:இளையராஜா
இனிமை , இளமை, புதுமை ,மேன்மை மட்டுமல்ல , என்றென்றும் வற்றாத படைப்பாற்றல் பெற்ற மாபெரும் கலைஞா என தன்னை எத்தனயோ முறை மீண்டும் மீண்டும் நிரூபிக்கும் பாடல்.கல்யாணியை எத்தனையோ விதமாக அவர் தானே வளைத்து, நெளித்து போட்டாலும் ,அவருக்கு முன்பிருந்த இசைமேதைகள் போட்டாலும் மீண்டும் , மீண்டும் புதிது புதிதாக அவர் தரும் இசை நெசவுகளில் ஜாலம் காட்டும் வண்ணப்பதிவு.
25 .வா காத்திருக்க நேரமில்லை – காத்திருக்க நேரமில்லை – SPB + S.ஜானகி – இசை:இளையராஜா
இதயத்தை வருடும் பாடல் என்பதற்கு சிறந்த உதாரணமிக்க பாடல்.” விலகியிருந்தால் வாடை வாட்டும் ” என்கிற வரிகளில் கல்யாணி உயிர்நிலைகளில் ரீங்காரமிடுகிறது.கணம் தோறும் புதுமை விளையும் ராஜாவின் கற்பனையின் வீச்சில் அமைந்த கல்யாணி வார்ப்பு.
26 .நிற்பதுவே நடப்பதுவே – பாரதி -ஹரீஸ் ராகவேந்திரா – இசை:இளையராஜா
இந்தப்பாடல் பாரதி பாடலுக்கு நீண்ட காலத்திருக்குப் பின் வழங்கப்பட்ட இசைக் கௌரவம்.இசையின் மகத்துவம் மனிதனை மேன்மை யாக்கும் எனபது படைப்பாற்றலில் தங்கியுள்ளது .ராகத்தை கையாளும் விதத்தில் நம்மையும் பாரதியையும் மாண்புறச் செய்த பாடல்.சமீப காலத்தில் வந்த பாடல்களில் நம் மனங்களைகே கொள்ளை கொண்ட பாடல்.
27 .காற்றில் வரு கீதமே – ஒரு நாள் ஒரு கனவு -பவதாரிணி +ஸ்ரேயா கோசல் – இசை:இளையராஜா
கல்யாணியில் மிகவும் இதம் தரும் சுகமான வார்ப்பு.பல குரலில் கல்யாணி ராகத்தை விருந்து தரும் வகையில் , குடும்ப உறவை வரித்து அதனூடே இணைந்த இன்பத்தை அள்ளித் தரும் இனிய பாடல்.பாடகர்கள் ஒவ்வொரு நிலையிலும் அழககாகப் பாடுவது இனிமை தருவதாக உள்ளது.கவாலி இசையில் இந்த வகையில் பாடல்கள் அமைத்து நம்மைக் கொள்ளச் செய்பவர். .அதை பின்பற்றி இந்த பாடலிலும் கலயாணியை பல குரலில் கேட்கும் போது ரவசமளிக்கிறது.
28 .உன் பார்வையில் ஓராயிரம் – அம்மன் கோயில் கிழக்காலே -KJ ஏசுதாஸ் +சித்ரா – இசை:இளையராஜா
இந்தப்பாடல மேற்ப்படி படத்திற்கு பயன்பட்டதோ இல்லையோ ” கல்லூரி ” என்ற சமீபத்தில் வெளியான படத்தில் மிக அழகாகப் பயன்படுத்தியிருந்தமை மனதைத் தொடுவதாய் இருந்தது.
29 .வானம் வாழ்த்திட மேகம் வாழ்த்திட – சின்னவர் [?] -SPB +எஸ்.ஜானகி – இசை:இளையராஜா
புல்லாங்குழல், வயலின் இசை மென்மையான மீட்டலில் சுகம் தரும் பாடல்.
இளைய ராஜா இசையமைத்த இன்னும் சில கல்யாணி ராகப் பாடல்கள் :
30 .தாலாடும் காற்றே – தேவன் -ஹரிகரன் – இசை:இளையராஜா
31 .என்னை ஒருவன் – கும்பக்கரை தங்கைய்யா -இளையராஜா – இசை:இளையராஜா
32 .விழிகள் மீனோ மொழிகள் தேனோ – ராகங்கள் மாறுவதில்லை – SPB – இசை:இளையராஜா
33 .பாட்டாலே புத்தி சொன்னார் – கரகாட்டக்காரன் -இளையராஜா – இசை:இளையராஜா
34 .பாடுங்கள் பாட்டு பாடுங்கள் – பாடு நிலாவே – SPB + சித்ரா – இசை:இளையராஜா
35 .அன்பே அன்பே நீ தான் எந்தன் ஆதாரம் – உரிமை சித்ரா – இசை:இளையராஜா
மேலே சுட்டிகாட்டிய பாடல்கள் நான் கேட்டு ரசித்த பாடல்களே.நான் கேட்காத ஏராளம் பாடல்கள் கல்யாணி ராகத்தில் இன்னும் இருக்கலாம்.
பிற மொழிகளான ஹிந்தி , தெலுங்கு , மலையாளப் பாடல்களிலும் ஏராளமான கல்யாணி ராகப் பாடல்கள் உள்ளன.
கல்யாணி ராகத்தில் அமைந்த ஹிந்திப்பாடல்கள் சில:
01 .Abhi Na Jao Chhodkar – Film : Hum Dono [1961] – Singers : Mohammed Rafi, Asha Bhosle Music :Jaidev
02 . Chandan sa badan chanchal – Film : SARASWATI CHANDRA (1968) – Lata + Mukesh – Music:KALYANJI ANANDJI
03 . Jab Dip Jale Ana – Film : Chit Chor [1976] – KJyesudas + Hemalata – Music : Ravindra Jain.
04 . Janevale Se Mulakat Na Hone Payi – Film : Amar [1954] – Singers Lata Music :Nausad
05 . Sansar Se Bhage Phirte Ho – Film Chitralehka (1964) – Lata – Music:Roshan
கல்யாணி ராகத்தில் அமைந்த மலையாளப்பாடல்கள் சில:
01 . Nathikalil Sundari Jamuna – Film : anarkali ] – KJyesudas + Vasantha – Music : MS BabuRaj
02 . Kumkuma poovukal poothu – Film: Kayamkulam Kochunni – singers : KJYesudas + SJanaki – Music: BAChidambaaranaathan