தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 4 ] : T.சௌந்தர்

brahminதமிழ் மக்கள் தொகையில் தமிழ் செவ்வியல் இசையான கர்னாடக இசையை ரசிப்பவர்கள் மிக சிறுபான்மையினரே! கர்னாடக இசையை இன்று தங்களது ” உடமை ” என்று பாராட்டும் பார்ப்பன சுமுதாயத்தினரிலும் பெரும்பானமையினர் அந்த இசை தெரிந்தவர்கள் அல்ல. ஆகச் சிறுபானமையினரே அதனைக் கையகப்படுத்தியுள்ளனர்.கர்னாடக இசையின் பிடிமானம் என்பது பிராமணீய மேலாண்மையை பண்பாட்டுரீதியாக நிலைநிறுத்துவதற்கு பயன்பட்டு வந்துள்ளது . தமிழ்மக்களின் இசைக் கலை இரங்கத்தக்க வகையில் உருவப்பட்டு சம்ஸ்கிருதமாகவும் ,தெலுங்காகவும் பரிமாணம் பெற்றது. பிராமணீயத்தை தாங்கி பிடிக்கும் பக்தி இசையை செல்லாகாசாக்கும் இசையாக சினிமா இசை வளர்ந்து வந்ததால் தான் அந்த இசை மீது காழ்ப்புணர்வு உண்டாயிற்று.மக்கள் மத்தியில் அந்த இசைக்கான அங்கீகாரம் என்பது அவர்களால் சகிக்கமுடியாததாக இருந்து வந்துள்ளது.

ஆனால் செவ்வியல் இசை ராகங்களின் அடிப்படையில் அமைக்கப்படும் சினிமாப்பாடல்களை மக்கள் ரசித்து மகிழ்கின்றனர்.ஆக ராகங்களை மக்கள் ரசிக்கத்தான் செய்கிறார்கள்.என்ன ராகம் என்று அறியாமலேயே ரசிக்கின்றனர்.அதேவேளை இன்ன ராகம் என்று அறிந்து ரசிக்கும் செவ்வியல் இசை ஓரளவு தெரிந்த ரசிகர்கர்கள் அதன் அழகுகளை எண்ணி வியக்கின்றனர்.இசையமைப்பாளர்களின் கற்பனைத்திறனை வியந்து போற்றுகின்றனர்.

ராகங்களின் கனதித் தன்மையை அதன் தூய்மையை சினிமா இசை சிதைக்கிறது என்ற ஓர் குற்றச் சாட்டை முன்னிறுத்தி கர்நாடக் இசையாளர்கள் முன்னைய காலங்களில் இசை பயில்பவர்களிடம் ” சினிமா இசை பாடக்கூடாது “என்ற ஓர் கட்டளையை நிலை நிறுத்தி சினிமாஇசை பரந்துபட்ட மக்கள் மத்தியில் போய் சேர்வதற்கு முட்டுக் கட்டை போட்டனர்.அல்லது மக்களிடம் வளர்ந்து வந்த ஜனரஞ்சக இசையை வெறுத்தனர்.மக்கள் தொகையில் மிகச் சிறுபான்மையினரான அவர்களின் அதிகாரத்திலிருந்து சங்கீதம் விடுதலை பெற்றுவிடும் என்ற பீதியால் எழுந்தது தான் அது.ஆனாலும் இந்த கிணற்றுத் தவளைத்தனமான வெறி மனப்பான்மைக்கு மக்கள் தெளிவாகவே பதிலளித்திருக்கின்றார்கள்.

” கேட்ட மாத்திரத்தில் ஓட வைக்கும் கர்னாடக இசையை” [ எழுத்தாளர் விந்தன் ] இன்று “சொந்தம்” கொண்டாடும் பிராமணர்கள் இசைத்துறையில் நுழைந்தது மிகப் பிற்காலத்திலேயே என்பதை வேர்ச்சொல்லியல் அறிஞர் ப.அருளி அவர்கள் பின்வருமாறு விளக்குவார்.

veda“…..வரிப்பாட்டுக்களைப் பாடிய பார்ப்பனர்களையே பார்ப்பனர்கள் ஒதுக்கி வைத்த செய்திகள் சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது.அதனை “பார்ப்பனச் சேரி ” என அழைத்தனர்.வேதம் ஓதுவதை தவிர அவர்கள் வேறு எந்த தொழிலையும் செய்யக்கூடாது என்பது அவர்களது விதியாக இருந்தது.மனுதர்மசாச்திரத்திலே நான்காவது அத்தியாயத்திலே 15 ஆவது விதியாக பிராமணர்கள் பாட்டுப்பாடுவது கூத்தாடுவது போன்ற தொழில்களில் ஈடுபடுதல் கூடாது; அதன் மூலம் பொருள் தேடிக் கொள்ளக் கூடாது என்று விதிக்கப்பட்டுள்ளது.அவ்வளவு சட்ட திட்டங்களை அவர்கள் செய்து வைத்தார்கள்.ஆனால் இசை அதிக வருவாய் தருகின்ற துறை என்பதால் தங்கள் விதிகளை தாங்களே மீறி வந்தார்கள்.இவர்களுடைய வேதத்தின் படி , உபநிசதத்தின் படி அவர்கள் ஈடுபடக்கூடாது.

இசை அறிவே அவர்களுக்கு கிடையாது என்பதை இசை பற்றிய வரலாற்றை நாம் படிக்கும் போது அறிகின்றோம். அவர்கள் வேத , மந்திரங்களை கத்திக் கொண்டே இருந்தவர்கள்.தென்னக தொடர்பு ஏற்ப்பட , ஏற்ப்பட ஒரு இசை முறையில் அதை பாட வேண்டும் என்கிற உள்ளுணர்வு எழுந்து ,அதற்காக ரிக்வேதத்தில் எளிமையான பாடல்களை ,சாம வேதம் என்ற தனிப்பிரிவை எடுத்தார்கள்.அதை கன்னா ,பின்னா என்று ஒரு இசையை போட்டு அதனை “சாம கானம் ” என்று அழைத்தார்கள். அது ஒழுங்கற்ற இசை என்று குறிப்புக்கள் இருக்கின்றன.மனுசம்கிதையிலே 4 வது பகுதியிலே 124 வது குறிப்பாக சாமவேத இசையும் அதன் இசை இன்பமில்லாத தன்மையும் பற்றி தாழ்வாக எண்ணப்பட்டது என்று குறிக்கப்பட்டிருக்கிறது.

ரிக்வேதத்திலேயே சாம கானம் பாடுகிற பொழுது ஏற்படுகிற செய்தியை ரிக்வேதத்தில் எட்டாம் அத்தியாயத்திலே இருககிற 106 வது பாடலில் இருக்கின்ற ஐந்தாவது குறிப்பு ” சாம கானம் பாடுகிற பொழுது நரிகள் ஊளையிடுவதர்க்கு ஒப்பாக இருக்கிறது.” என்ற ரிக்வேதத்திலேயே தனி சுலோகம் போட்டிருக்கின்றான்.அதே போல் ரிக்வேதத்தில் எட்டாம் பகுதியில் வேத ஆசிரியர் ஒருவர் இந்த மந்திர ஒலி பற்றி கோவையாக எழுதியிருக்கின்றார்.” வேத கால முனிவர்கள் மந்திரங்களை இசை நயமில்லாமல் ஓதியது காதுக்கு நாசாரமாக , தவளை கத்துவது போல் இருந்தது” என எழுதுகிறார்.பிராமணர்களுக்கே தெரிந்திருக்கிறது மந்திரம் ஒலிக்கின்ற இசை தவளை கத்துவது போல் இருக்கிறது என்று.

இதனைத்தான் அழகாக பாரதிதாசன் தமிழியக்கத்தில் சொல்வார் ;

baharathithasanதேர்வரும்.பின் பார்ப்பனர்கள் வரிசையுறச் செங்கைகள் கோத்த வண்ணம்,
நீர்வருங்கால் கத்துகின்ற நெடுந்தவளைக் கூட்டமெனக் கூச்ச லிட்டு
நேர்வருவார் அன்னவர்கள் நிகழ்த்துவதன் பொருளென்ன? இனிமை உண்டா?
ஊர்வருந்தும் படிஇதைஏன் விழாத்தலைவர் உடன்சேர்த்தார்? ஒழிக்க வேண்டும். - பாரதிதாசன்

குளத்தில் தவளைகள் ஒலியிடுவதை கூறவரும் பாரதிதாசன் பின்வருமாறு பாடலில் எழுதுகிறார் ;

” தண்டச் சோறு தின்னும் கூட்டம் சல சலத்தால் போல்
அண்டை வகுப்பில் ஹிந்தி வாத்தி பாடம் நடத்தல் போல்
பெட்டை தவளைக் கூட்டம் எல்லாம் கோர கொரத்தது
மொட்டைத் தலையன் ஆட்சி போல் குறு குறுத்தது – பாரதிதாசன் ” ப.அருளி

இவ்விதம் தாங்கள் போட்ட சட்ட திட்டங்களை எல்லாம் தாமே மீறி , வருமானம் தரும் தொழிலாக இசை இருந்தததால் அதில் மற்றவர்கள் நுழைந்து விடாமல் பார்த்துக் கொள்ளவும் , அந்த அறிவை மற்றவர்கள் பெற்றுவிடாலாமல் தடுக்கவும் ,அதன் மூலம் மற்றவர்களை முட்டாள்கள் என்று மட்டம் தட்டவும் இசையை தமது இரும்புப்பிடிக்குள் வைத்திருந்தனர்.கர்னாநாடக இசை என்ற “பாடகரின் சர்வாதிகார இசை” முறைக்கு எதிராக , ஜனநாயக வடிவமாக வளர்ச்சி பெற்ற வாத்திய இசை இணைந்த சினிமா இசைக்கு அவர்கள் மூர்க்கத்தனமாக எதிர்வினை ஆற்றினார்கள்.அதனால் தான் ” தூய்மை ” பற்றிய பிதற்றல்கள் எழுந்தன.

அதன் அடிப்படைக் கோட்பாடு என்பது வயிற்று பிழைப்பே தவிர வேறில்லை.இந்த ஒரு சாண் வயிற்று பிரச்சனையில் அவர்கள் ஈடுபட்டால் அது உயர்ந்தது , சினிமா இசையமைப்பளர்கள் செய்தால் தாழ்ந்தது.!!

” நிதிசால சுகமா – ராமா
நி சந்நிதி சேவ ஸுகமா ” [ காசு பெறுவது சுகமா , உன் சந்நிதியில் சேவை செய்வது சுகமா ] என்று தியாகய்யர் கல்யாணி ராகத்தில் , சரபோஜி மன்னனின் சபையில் காசுக்கு பாட மாட்டேன் என்றும் , தனது சகபாடிகள் தங்கள் வாழ்வுத் தேட்டத்தில் வளம் சேர்த்த போது , அதில் தடுமாறி ராமனிடம் கேள்வியாக முன் வைக்கின்றார்.சகபாடிகள் செய்த சிதைவுகளை வெறுத்து தன்னளவில் மன்னனை பாட முடியாது என்ற நிலைபாட்டை எடுத்தவர் தியாகய்யர்.தன மனதில் உள்ளுறைந்த ராமனைத் தான் பாடுவேன் என்று தன் உள்ளக் கொந்தளிப்பை வெளிக்காடி தன்னை லட்சிய மனிதனாகக் காட்டிக் கொண்டார்.

அந்த “லட்சிய மனிதனை” முன்னிறுத்தி கர்னாடக இசையின் தூய்மையையும் , மேன்மையையும் பிதற்றுபவர்கள் பணத்தை தேடி பெருக்குவதில் லட்சியம் காட்டிக் கொள்ளும் குயுக்தியை என்னவென்பது.பட்டப்படிப்பு படித்தவர்கள் தங்கள் தொழிலை கைவிட்டு சங்கீதத்தில் அதை விட அதிகமாக சம்பாதிக்கலாம் என்று வருவதை பார்த்திருக்கிறோம்.தியாகய்யரின் பாடல்களை பாடி பணம் சம்பாதிக்கின்றனர்.

ராகங்களின் தூய்மை கெட்டு விடும் என்கிற வித்துவான்களில் எத்தனை பேர் , பைரவியையும் முகாரியையும் கலக்காமல் பாடுகின்றார்கள்?மோகனகல்யாணியையும் , மோகனத்தையும் கலக்காமல் பாடுகின்றார்கள்?

சிந்துபைரவி படத்தில் ” மரி மரி நின்னே ” என்ற காம்போதி ராகப் பாடலை , சாருமதி ராகத்தில் இளையராஜா மாற்றியது பற்றிய கர்னாடக இசை வித்துவான்களின் ” கொதிப்பு ” விவகாரம் சந்தி சிரிக்க வைத்தது.

ஒரு ” [அ]சாதாரண ” சினிமா இசையமைப்பாளன் [ இளையராஜா ] புதிய ராகம் ஒன்றை கண்டுபிடித்து அதை அரங்கேற்றிய போது ராகங்களை சலனமில்லாமல் ஒப்புவித்தவர்கள் , அவர் அழைத்தும் அந்தப் பக்கமே தலை காட்டாததும் அதிசயமல்ல.பாட மட்டும் தான் அவர்களுக்குத் தெரியும்.!!

semankudi1990 களில் பண் ஆராய்ச்சி மகாநாடு ஒன்றுக்கு அழைக்கப்பட்ட செம்மங்குடி சீனிவாச ஐயர் ” இந்த ஆராய்ச்சி எல்லாம் எனக்கு தெரியாது, எனக்கு அது வெகு தூரம் , எனக்கு பாட மட்டும் தான் தெரியும் ” என்று நேர்மையாக் ஒத்துக்கொண்டார்.

செவ்வியல் இசை ராகங்கள் பரந்துபட்ட மக்களிடம் செல்ல வேண்டுமானால் அதன் வடிவமும் மாற வேண்டிய தேவையும் இருந்தது.அதன் வடிவம் மாற வேண்டுமானால் அது செயல்படும் அல்லது பயன்படும் மொழியும் மாற வேண்டிய தேவை எழுந்தது.மக்கள் புரிந்து கொள்ளும் எளிமையையும் வேண்டி நின்றது.ஜீவசததுள்ள ,உயிர் துடிப்பான இசைக்கு இலகுவான , வெளிப்படையான மொழியின் தேவையையும் வேண்டி நின்றது.தமிழ் இலக்கிய உலகில் செய்யுள் இலக்கியத்திற்கு உரை நடை மாற்றாக வந்தது போன்ற ஒரு பதிலீடு புக வேண்டிய தேவை ஏற்ப்பட்டது.

” எளிய பதங்கள் ,எளிய நடை ,எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய சந்தம் ,பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினையுடைய காவியமொன்று தற்காலத்தில் செய்து தருவோன் நமது தாய் மொழிக்கு புதிய உயிர் தருவோனாகின்றான்.ஓரிரண்டு வருசத்து நூற் பசக்கமுள்ள தமிழ் மக்களெல்லோருக்கும் நன்கு விளங்கும் படி எழுதுவதுடன் காவியத்துக்குள்ள நயங்கள் குறைவு படாமலும் பார்த்துக் கொள்ளல் வேண்டும்.- பாரதியார்

சினிமாவின் பாடு பொருள் சமுதாயம் சார்ந்ததாக மாறத் தொடங்கியவுடன் ராமனையும் ,கிருஷ்ணனையும் , சிவனையும் வித விதமாகக் கூப்பாடு போட்டு மகிழ்ந்த பக்திப் பாடலகளுக்கு மாற்றாக சமுதாயம் சார்ந்த வெகுஜன மக்கள் இசையை தொடங்கி வைத்தது சினிமா.

பாமர மக்களும் கேட்டு இன்புறும் வகையில் பாடல்கள் அமைக்கப்பட்டன. அதன் வாகனமாக கனமான ராகங்களில் அமைந்த, அதனை அடிப்படையாகக் கொண்ட எளிமையான மெட்டுக்கள் பயன்பட்டன.எவ்விதம் தொன்மையான ராகங்களை மத வாதக் கருத்துக்களைப் பரப்பப் பயன்படுத்தினார்களோ அதே ராகங்களில் புது மெருகோடு திரைப் பாடல்கள் உருவாகத் தொடங்கின.கர்நாடக் இசை வித்துவான்கள் தங்கள் மந்திர சிமிழுக்குள் அடக்கி வைத்திருந்த ராகங்கள் விடுதலையடைந்தன என்று கூட இதனை நாம் அழைக்கலாம்.இதனால் விளைந்த நன்மை என்னவென்றால் எந்த தடையுமில்லாமல் பரீட்சாத்தமான பல முயற்ச்சிகள் உருவாக வழி உண்டாயிற்று.

ஆயினும் ராகங்களில் மிக்க ” தேர்ச்சி ” பெற்ற தமிழ் செவ்வியல் [ கர்னாடக இசை ] இசைக்கலைஞர்கள் இசையமைக்கும் துறைக்கு வந்ததே கிடையாது.பாட்டு , ,ஓவியம் கவிதை , சிற்பம் , நடனம் போன்றே இசையமைப்பது என்பது ஒரு தனிக்கலை.அது எல்லோருக்கும் வாய்ப்பதுமில்லை. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் ஒப்புவிக்கும் கலையே !

Ravi-Shankarவட இந்திய சினிமாவில் பிரபலமான ஹிந்துஸ்தானி இசைக்கலைஞர்கள் இசையமைப்பதில் அக்கறை காட்டி இசையமைத்துமிருக்கின்றார்கள்.அவர்களில் முக்கியமானவர்களாக ரவிசங்கர் ,ஹரிபிரசாத் சௌராசையா , சிவகுமார் சர்மா , அல்லா ராக்கா போற்றவர்களை குறிப்பிட வேண்டும்.இவர்கள் அனைவரும் வாத்திய இசைக்கலைஞர்கள் என்பது முக்கியமானது.இவர்கள் யாரும் வாய்ப்பாட்டுக்காரர்கள் அல்ல.

ஹிந்தி சினிமாவின் புகழ் பெற்ற இசையமைப்பாளர்கள் அளவுக்கு வெற்றி அடைய முடியாவிட்டாலும் நல்ல தடங்களை விட்டுச் சென்றிருக்கின்றார்கள். குறிப்பாக ரவி சங்கர் இசையமைத்த ” அனுராதா ” திரைப்படப் பாடல்கள் இதற்க்குச் சான்றாக உள்ளன.ஹரிபிரசாத் சௌராசையா , சிவகுமார் சர்மா இருவரும் இணைந்து “சிவஹரி ” என்ற பெயரில் இசையமைத்த ” சில் சிலா ” பாடல்களும் மிகப் புகழ் பெற்றன.

வட இந்திய செவ்வியல் இசைக்கலைஞர்கள் சினிமாவிலும் ஓரளவு வெற்றி பெற்றிருக்கின்றார்கள்.சினிமாவில் வாத்திய இசையின் பயன்பாடு அதிகம் என்பதும் ஒரு முக்கியமான காரணமாதலால் வாத்தியக் கலைஞர்களுக்கு அது இலகுவானதாகவும் அமைந்து விடுகிறதோ என எண்ணத் தோன்றுகிறது.

தமிழ் சினிமாவில் கர்னாடக இசைக்கலைஞர்கள் குறிப்படக்கூடிய பங்களிப்பை இசையமைப்புத்துறையில் செய்யாவிட்டாலும் ,சினிமாவில் புகழ் பெற்று பின் கர்நாடக் இசைத்துறையில் புகழ் பெற்ற வீணை இசைமேதை எஸ்.பாலசநதர் சினிமாவில் நடிப்பு , இசை, தயாரிப்பு , இயக்கம் என பல் துறை சார்ந்து ஈடுபாடு காட்டியவர். பொம்மை , நடுஇரவில் போன்ற படங்களுக்கு இசையமைத்தவர்.பிரபல பாடகர் கே.ஜே.ஜேசுதாசை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்தவர்.

kunnakkudiஎஸ்.பாலசந்தரை போலவே வயலின் இசைக் கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன் சிறந்த இசையமைப்பாளராக விளங்கினார்.ஆனாலும் இவர் கர்நாடக் இசை உலகம் மலினமாக கருதப்பட்டவர். கர்நாடக் வயலின் இசைக்கலைஞர் லால்குடி ஜெயராமன் திரை இசையமைப்பாளர் ஷியாம் உதவியுடன் ” தில்லானா ” என்ற [ Fusion Album ] கலப்பிசையை தந்தார்.அதில் மோகன கல்யாணி ராகத்தில அமைந்த இசை மிகவும் இனிமையானது.

எஸ்.பாலசநதர் , இவற்றை விட இன்னுமொரு முக்கியமான விடயத்தையும் வெளிக்கொணர்ந்து இசை வட்டாரத்தில் ஒரு புயலையும் உருவாக்கினார். கேரள மன்னர் சுவாதித் திருநாள் கர்நாடக சங்கீத கிருதிகள் எழுதவில்லை என்றும் ,அவற்றை எழுதியவர்கள் அவரது சமஸ்தானத்தில் இருந்த தமிழ் வித்துவான்களான பொன்னையா, வடிவேலு, சின்னையா, சிவானந்தம் என்ற நான்கு சகோதரரர்களே என்று மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொணர்ந்தார்.

அதுமட்டுமல்ல 1980 களில் கர்நாடக் இசை வித்துவான் பாலமுரளி கிருஷ்ணா ” கண்டுபிடித்த ” ராகம் ஒன்றை அது ஏற்க்கனவே உள்ள ராகம் என்றும் மறுத்தார்.இந்த விவகாரம் சர்ச்சையாக மாறியது.

shankaraparanam1980 களில் சங்கராபரணம் என்ற தெலுங்கு படத்தில் வந்த பாடல்கள் பரந்துபட்ட மக்களால் ரசிக்கப்பட்டு மிகவும் புகழ் பெற்றன.இந்த பாடல்களை பாடுபவர்கள் தாங்கள் செவ்வியல் இசை பாடக் கூடியவர்கள் அல்லது இந்த பாடல்கள் தான் சுத்தமான சங்கீதம் என்றொரு கருத்து பரவியிருந்த வேளையில் , எஸ்.பாலசந்தர் ” சங்கராபரணம் பாடல்கள் சுத்தமான கர்னாடக இசையல்ல ,வழமையான சினிமா இசையே என்றும் இது சுத்தமான சங்கீதமா என்று அதன் இசையமைப்பாளர் கே.வீ.மகாதேவன் தான் சொல்ல வேண்டும் என்று தன் கருத்தை ஒரு பேட்டியில் வெளியிட்டார்.

அதற்க்கு பதிலளித்த கே.வீ மகாதேவன் ” அந்தப் பாடல்கள் சினிமா பாணியில் அமைந்த பாடல்கள் தான், சுத்தமான கர்நாடக் இசை கிடையாது , எனக்கும் ராகங்கள் பற்றிய ஆழமான புலமை இல்லை , ஒரு சில ராகங்களில் பரீட்சயம் உண்டு “என்று அடக்கமாக பதிலளித்தார்.

இந்த விவாதங்களுக்கு அப்பால், சங்கராபரணம் படத்தில் சில கர்நாடக இசை கீர்த்தனைகள் பயன் படுத்தப்பட்டதால் சாதாரண சினிமா ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றன.அவற்றில் சில கீர்த்தனைகளை அந்த ராகத்திலேயே அற்ப்புதமான மெல்லிசையாக்கி மக்களிடம் கொண்டு சென்றார் கே.வீ.மகாதேவன்.குறிப்பாக சாமஜ வரகமனா என்ற கீர்த்தனத்தை சொல்லல்லாம்.இப்படி ஒரு கீர்த்தனை இருக்கிறது என்பதை என் போன்ற இசை ரசிகர்கள் அறியும் வாய்ப்பை அளித்தார்கள்.சாமஜ வரகமணா , மானச சஞ்சரரே ,தொரகுனா இகு வண்டி சேவா போன்ற கீத்தனைகள் பிரபல்யமடைந்தன.

எஸ்.பாலசந்தர் வைத்த குற்ற சாட்டில் ஓரளவு நியாயம் இருந்தது.சங்கராபரணம் பாடல்களைக் கேட்ட பலர் தாம் மிக ” உயர்ந்த சங்கீதத்தை ரசிக்கின்றோம் ” என்று பாவனை காட்டியதையும் , சுமாராகப் பாடக்கூடிய சிலர் ” தாம் கர்நாடக் இசை பாடுவதாக ” பாவலாக் காட்டியதையும் நாம் பார்த்துச் சகிக்க வேண்டிய துர்ப்பாக்கியமும் நிகழ்ந்தது.

உண்மையில் இது போன்ற கர்னாடக இசை கலந்த மெல்லிசைப் பாடல்கள் பலவற்றை ஏற்க்கனவே கே.வீ .மஹாதேவனும் ,மற்றும் பல இசையமைப்பாளர்களும் பழைய படங்களில் இசையமைத்திருக்கிறார்கள். சங்கராபரணம் படத்திற்கு கிடைத்த விளம்பரம் இந்தப் புகழாரத்தில் முக்கிய பங்காற்றியது.

அடுத்த ஒரு சில வருடங்களின் பின்னால் வெளிவந்த ” கானம் ” என்ற மலையாளத் திரைப்படத்தில் கர்னாடக இசையை தூய்மையாகப் பாடக்கூடிய பாலமுரளி கிருஷ்ணா , ஜேசுதாஸ் போன்றோர் பாடிய தெலுங்கு கீத்தனைகள் கர்னாடக இசை மேடைல்யில் பாடுவது போலவே அமைக்கப்பட்டன.இந்தப் படத்திற்கு இசை அமைத்தவர் கர்னாடக இசையில் பாண்டித்தியம் மிக்க இசையமைப்பாளரான வீ.தட்சிணாமூர்த்தி.” குருலேக எடுவஞ்சி குணுகி ” என்ற தியாகய்யரின் கெளரிமனோகரி ராகக் கீர்த்தனை பிரபலமாயிற்று.

ராகங்கள் பற்றிய குறிப்பை எழுதும் போது இன்னுமொரு அதிகம் பேசப்படாத செய்தி ஒன்றையும் இங்கே குறிப்பிட வேண்டியதாகிறது.

muhulமுகலாய மன்னர்கள் இந்தியாவில் 13 ஆம் நூற்றாண்டில் நிலைபெற்ற போது தங்களது சங்கீதத்தை விருத்தி செய்ய தஞ்சாவூர் பகுதியிலிருந்து இசைக்கலைஞர்களை வரவழைத்தார்கள்.

கோபால் நாயக் என்ற இசைக்கலைஞர் தலைமையில் 300 இசைக்கலைஞர்கள் தஞ்சாவூரிலிருந்து சென்றது பற்றிய குறிப்பு :

” மகம்மதியரால் விருத்திக்குக் கொண்டுவரப்பட்ட இந்துஸ்தானி என்னும் தேசிகமுறையானது, தென்னிந்திய சங்கீதத்தினின்றே உண்டான முறையென்றும், தென்னிந்தியாவிலிருந்து வடநாட்டுக்குப் போனதென்றும், தென்னிந்திய சங்கீத வித்வான்கள் அல்லாவுடீன் என்பவரால் சிறைகளாக வடநாட்டுக்குக் கொண்டுபோகப்பட்டார்களென்றும், அவ்வாறு கொண்டுபோகப் பட்டவர்களில் தக்ஷணத்தைச் சேர்ந்த சங்கீத வித்வான் நாயக் கோபால் என்பவர் ஒருவரென்றும் பின்வரும் வாக்கியங்களில் காண்கிறோம். இதில்கண்ட நாயக் கோபால் என்பவர் சுமார் 400 வருஷங்களுக்குமுன் தாளார்ணவம், ராககதம்பம், பிரபந்தம் முதலிய நூல்கள் செய்தவரென்று சாரங்கதேவர் நூலுக்கு உரையெழுதிய கல்விநாதர் சொல்லுகிறாரென்று சுப்பாரமதீக்ஷதர் கூறுகிறார். இவர் சுருதியைப்பற்றி நன்றாய்த் தெரிந்தவரென்று சதுர்தண்டி பிரகாசியையெழுதிய வேங்கடமாகி சொல்லுகிறார். இவர் தீபகம் என்னும் ராகம் பாடி ஒருவரும் ஏற்றாமலே ஒரு விளக்கை எரியும்படி செய்தாரென்றும் சொல்லப்பட்டிருக்கிறது.”

என ஆப்ரகாம் பண்டிதர் தனது நூலில் ஆனந்த குமாரசாமியின் நூலுக்கு முன்னுரை எழுதிய E. Clements என்ற இசை அறிஞரின் முக்கிய குறிப்பையும் தருகிறார்.

“சுரஞானமில்லாமல் பல சுரங்கள் கலந்ததேசிகம் அதிகமாய் வழங்கும் வடநாட்டிலுள்ள ஒருவர், மற்றவைகளோடு கலவாத கர்நாடக சங்கீதம் என்னும் ஒரு முக்கிய முறையிருக்கிறதென்று சொல்லுவதை நாம் கவனிக்கவேண்டும். மேலும், அவர்கள் வழங்கிவருகிற துர்பத், தில்லானா, கியால், டப்பா, டோமரி முதலிய கீத முறைகள் மிகச் சுலபமானவையென்று நாம் அறிவோம். ஆனால் கர்நாடகத்தில் வழங்கிவரும் கீதம், தானவர்ணம், சௌக்கவர்ணம், கீர்த்தனம், பல்லவி, ராகமாலிகை முதலியவை சங்கீத சாஸ்திரத்துக்குப் பொருந்தும்படி செய்யப்பட்டு மிகுந்த தாள அமைப்புடன் தேர்ச்சியடைந்திருப்பவை என்று நாம் அறிவோம்.” – E. Clements.

ராகங்கள் குறித்த குழப்பங்களுக்கு மேற்ப்படி கூறப்பட்ட கலப்பும் மிக முக்கிய காரணம் என்று சொல்கிறார். இன்று வரை இந்தக் குழப்பங்கள் தீர்க்கப்பட்டதா என்றால் இல்லை என்றே பதில் கிடைக்கும்.

மேலும் அக்கால இசையறிஞர் C.R. Day என்பவர் என்பவர் ஹிந்துஸ்தானி சங்கீதத்தையும் ,கர்நாடக சங்கீதத்தையும் பற்றி எழுதிய குறிப்பு :

crray“தற்காலம் தென்னிந்தியாவில் வழங்கும் இரண்டு முறைகளில் இந்துஸ்தானி சங்கீதமானது, வடஇந்தியாவிலும் பங்களாத்திலும் வழங்கும் சங்கீதத்திற்குச் சற்று ஒத்திருக்கிறது. அது விசேஷமாய் மகமதிய சங்கீதக் காரராலும் கர்நாடக சங்கீதமானது தென்னிந்திய ஜாதியாராலும் முறையே உபயோகிப்பப்படுகின்றது. தென்னிந்திய ஜாதியாரின் சங்கீதமென்றழைக்கப்படும் கர்நாடக சங்கீதமானது இந்துஸ்தானி சங்கீதத்தை விட அதிகசாஸ்திரோக்தமானதும் அதிக சுத்தமானதுமாயிருப்பது மல்லாமல் அதைப்படிக்கும் வித்வான்களும் இந்துஸ்தானி சங்கீதத்தைப்படிப்பவரைவிடக் கல்வியறிவில் தேர்ந்தவர்களாயிருக்கிறார்கள் என்பது பெரும்பாலும் உண்மையே. இப்படிக் கல்வியில் அபிவிருத்தியில்லை யென்று சொல்லுவதானது இந்துஸ்தானி சங்கீதத்தில் வழங்கும் இராகங்களையும் விசேஷமாய் அவைகளை அவர்கள் பிரஸ்தாரம் செய்து காண்பிப்பதையும் கவனித்தால் நன்றாய் விளங்கும்.”- The Music and the Musical Instruments of Southern India, by C.R. Day

கர்னாடக இசை வித்துவான்கள் இசையமைப்பில் நாட்டம் காட்டாத சூழ்நிலை ஒரு புறமும் , மறு புறத்தில் சினிமாவில் வாத்தியககலைஞர்களாக இருந்த பலர் இசையமைப்பில் பங்கெடுத்திருக்கின்றார்கள்.இசைமேதை ஜி.ராமநாதன், கே.வீ.மகாதேவன் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்- ராமமூர்த்தி , இசைஞானி இளையராஜா போன்றோரும் வாத்தியக் கலைஞர்களாக இருந்தவர்களே.

இவர்கள் மட்டுமல்ல சினிமாப் பாடகர்கள் சிலரும் இசையமைப்பில் அதிக ஈடுபாடு காட்டியதுடன் வெற்றியும் பெற்றிருக்கின்றார்கள். ஏ.எம் ராஜா ,கண்டசாலா , சூலமங்கலம் ராஜலட்சுமி போன்றோர் குறிப்பிடத்தக்க வெற்றியும் பெற்றிருக்கின்றார்கள்.இவர்கள் அமைத்த பாடல்களிலும் ராகங்கள் ஊறியிருக்கின்றன.

சினிமாவில் பாடல்களில் மட்டுமல்ல, காட்சிக்குப் பொருத்தமான பின்னணி இசைவடிவங்களிலும் ராக இசை கச்சிதமாகப் பயன் பட்டுள்ளது..காட்சிகளில் மக்களை சிரிக்க, அழ வைத்த எத்தனையோ படங்களின் ஆதார சுருதியாக ராகங்கள் இருந்திருக்கின்றன.

” தங்கள் நடிப்பாலேயே மக்கள் அழுதார்கள் ” என்று நடிகர்கள் நினைத்தாலும்,பயன்படுத்தப்பட்ட ராகங்களும், அவை தந்த இசை அதிர்வுகளும் மக்கள் அழுவதற்கு மிக முக்கிய காரணமாய் அமைந்தது எனலாம்.

பாலும் பழமும் படத்தில் ” பாடு நீலா பாடு நீலா .. ” என்று கதாநாயகன் சொல்ல , நாயகி
“நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் .
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் .” என்று விசும்ப மக்களும் அழுதார்கள்.

அது சிவரஞ்சனி ராகத்தின் உக்கிரம்.

அன்பே எந்தான் முன்னாலே -
ஆசையை பேசும் கண்ணாலே
கண்டால் இன்பம் தேன் போல வாழ்வினிலே இசை: G.ராமநாதன் – ராகம்:மோகனம் படம் : ஆரவல்லி [1956]

என்று நம்மை துள்ள வைக்கவும்

நெஞ்சமும் கனலாகி நீறாகும் போது
நிம்மதி என் வாழ்வில் இனி ஏது
கொஞ்சிடும் மொழி கேட்டு மகிழ்ந்தவள் எங்கே
குளத்தின் விளக்காய் திகழ்ந்தவள் எங்கே -
பாடல் : காதலிலே தோல்வியுற்றான் – ராகம்:சிவரஞ்சனி படம் : கல்யாணப்பரிசு [1959] இசை: A.M.ராஜா

என்று உணர்வு நிலைகளின் சமநிலையை உருக்குலைக்கவும் ,

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா .. படம்: மன்னாதி மன்னன் [1961] ராகம் : மோகனம்
படம் : மன்னாதி மன்னன் இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

என்று நிமிர்ந்தெள வைக்கவும்,

நிலவும் மலரும் பாத்து – என்
நினைவில் தென்றல் வீசுது – ராகம் : மோகனம் படம்: தேன் நிலவு [1961] இசை: A.M.ராஜா

என்று ஏகாந்தமாக நம்மை வருடவும் ,

என்ன சத்தம் இந்த நேரம் குயிலின் ஒலியா
என்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒலியா – ராகம் : சிந்துபைரவி படம்: புன்னகைமன்னன் [1986] இசை: இளையராஜா

உள்ளத்தைக் கொள்ளை கொண்டு ஈர்க்கவும்,

உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே
நம் சொந்தங்கள் பந்தங்கள் இன்றா நேற்றா அன்பே சொல் – ராகம் : சாருகேசி படம்:என் பொம்மு குட்டி அம்மாவுக்கு [1988] இசை: இளையராஜா

தங்கள் குழந்தையை பறிகொடுத்த பெற்றோரின் அவலத்தை நெஞ்சுருக வைக்கும் பாடலாக..

இதயவானின் உதய நிலவே
எங்கே போகிறாய் – நீ
எங்கே போகிறாய் – ராகம் : கல்யாணி படம் : பார்த்திபன் கனவு 9 1960 ] இசை: வேதா

காதலின் பிரிவை நம் நெஞ்சங்களை அறுக்கும் விதமாக இசையமைக்கப்பட்ட பாடல் …

எல்லாம் இன்ப மயம்
புவியினிலே எல்லாம் இன்ப மயம் – ராகம்: மோகனம் படம்:எல்லாம் இன்பமயம் [1955] இசை: கண்டசாலா

என்று புத்தாண்டை மகிழ்ச்சியில் வீறு கொண்டழைக்கவும் …

காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றைத் தேடுதே – ராகம் : கீரவாணி படம் : ஜானி [1980] இசை: இளையராஜா

என்று விரகதாபத்தை வெளியிடவும் , நம்மை நோக வைக்கவும்

மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா
என்னுயிராய் நீயிருக்க உன்னுயிராய் நானிருக்க – ராகம் : கீரவாணி படம் :கற்பகம் [1964] இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

நம்மைத் துயரின் எல்லைக்கு கொண்டு போக வைக்கவும் , ஆறுதல் கூறவும்

மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான்
கனவு கண்டேன் தோழி – ராகம் : சந்திர கெளன்ஸ் படம் :பாக்கியலக்ஷ்மி [1961] இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

வாழ்க்கையில் நிகழ்ந்த பேரிழப் பு ,எல்லையில்லாத துயர் தந்து நம்மை வாட்டும் பாடல்.

சினிமா இசையமைப்பாளர்கள் இது போன்ற எண்ணற்ற பாடல்களால் மக்களின் உள்ளார்ந்த நினைவுத் தொகுதியை தங்களது இதயத்தினின்றெழுந்த இசை ஆற்றலால் ஆளவும் செய்தார்கள்.

வாழ்க்கையிலிருந்து பெற்ற அனுபவங்களை , உணர்வுகளை இசைப்படைப்பாக்க தன்னம்பிக்கையுடன் முயன்றனர்..இவை சாதாரண மக்களின் இயல்பான , எளிமையான வாழ்வை பிரதிபலித்தன.இந்த பிரதிபலிப்புக்களை நமது திரை இசையமைப்பாளர்கள் மரபு வழியில் நின்று முயன்றாலும் ,அதன் மேல் தங்கள் ஆளுமையை செலுத்த வேண்டிய கட்டாயத்தையும் உணர்ந்தார்கள்.மரபுக்கவிதையில் நின்ற தமிழ் கவிதையை நவீனமாக்க முயன்ற பாரதி செய்த முயற்ச்சியை இங்கு பொருத்தி பார்க்கலாம். மரபு இசைப்படிமங்களில் நின்றே ” புதுமை” செய்ய விளைந்தனர்.மரபிசையின் குறியீடுகளாக விளங்கிய ராகங்களிலேயே நின்று செய்து காட்ட வேண்டிய யதார்த்ததோடு , கலைஞனின் ஆளுமையைக் காட்ட சற்று வெளியேயும் பார்க்க வேண்டியிருந்தது.

தமிழ்பழங்குடி இசையுடன் இருந்ததைப்போல தமிழ் திரைப்படத்தின் வளர்ச்சியும் இசையுடன் இணைந்ததாகவே இருந்து வந்துள்ளது.திரைவடிவம் நவீன கலையாகக் கிடைத்தாலும் மரபுடன் இயைந்து வந்த இசையை நம்மால் இலகுவில் உதறிவிட முடியவில்லை.இசையின் பேரலை மக்கள் மன உணர்வுகளை பிரதிபலிக்கின்ற குறியீடாகவும் காலத்தையும்,பருவத்தையும் வெளிப்படுத்துகின்ற குறியீட்டு வடிவமாகவும் ராகங்கள் பயன்ப்படுத்தப்பட்ட்டிருக்கின்றன.உலக இசை மரபில் இது ஒரு புதுவகை எனலாம்.நுண்மைமிக்க ராகங்கள் உயர் நாகரீகத்தின் குறியீடுகளில் ஒன்றாகும்.

இசைத் தொன்மை ,அதன் தொடர்ச்சி , ஏற்ற , இறக்கம் என ஒட்டி ஊசலாடி வந்த ராகங்கள் பற்றி மதிப்புகள் , நிர்ணயிப்புக்கள் ஆரம்ப கால சினிமாவில் பெரிதளவில் மாறாதிருந்தன.பிற்க்காலங்களில் ராகங்களுடன் வெளி சேர்க்கை இசையும் தழுவி வர ஆரம்பித்தன.

தமிழ்சினிமாவின் ஒரு ஊக்குசக்தியாகவும், கதை நகர்த்தியாகவும், அதன் விளம்பரகுறியீடும் இசையாக, பாடல்களாகவே இன்று வரை இருந்து வருகின்றன.தமிழ்சினிமாவின் பகிரங்கமான விளம்பரம் அதன் பாடல்களே.!

ராகம் என்பது சொற்கள் இல்லாமல் உணர்வுகளை வெளிப்படுத்துவதாகும்.நிறங்களின் குணங்களை ஓவியன் பயன்படுத்தி உணர்வுகளைக் கிளர்த்துவது போல, சைகைகளின் மூலம் மன உணர்வுகளை வெளிப்படுத்துவது போல இசையிலும் வெவ்வேறுவிதமான உணர்வுகளை வெளிப்படுத்தவும், நேரம், காலம் போன்றவற்றை ஒலிவடிவில் புலப்படுத்த ராகங்கள் பயன்பட்டுள்ளன.

எங்கோ ஓர் அறையில் ஒலிப்பதிவாகி காட்டு மலர்கள் போல் காற்றில் கலந்து மணம் பரப்பும் இசை மக்கள் மனங்களை வசப்படுத்துகிறது. அந்த படைப்புக்களின் ரகசியம் இசையமைப்பாளர்களின் அனுபவத்தினாலும், தனித்துவமான பயிற்ச்சியினாலும் ,மேதமையினாலும் ,ராகங்களை அவர்கள் கையாண்ட உள்ளார்ந்த அழகினாலும் உருவாக்கப்பட்டவை என்றால் மிகை இல்லை.

ராகங்களைப் பற்றி பேசும் பொழுது ,ராகங்கள் காலத்தை அடையாளப்படுத்தப் பயன்படுள்ளது என்பதை பார்த்தோம்.எனினும்சில ராகங்களைக் கேட்கும் போது வேறு மொழிகளையும் அடையாளம் காட்டுவதாக அமைந்துள்ளதை கவனித்திருக்கின்றேன்.குறிப்பாக ஆனந்த பைரவி மலையாளத்தையும் , மத்தியமாவதி தெலுங்கு மொழியையும் ஏதோ ஒரு வகையில் அடையாளம் காட்டுவதாக உணர்ந்திருக்கின்றேன்.குறிப்பாக மலையாளப் பாடல்களை அதிகமாகக் கேட்டதில் ஆனந்தபைரவியில் மலையாள மாணபுகளை உணர்த்தும் பாடல்களில் இணைந்தொழுகுவதை கேட்டு இன்புற்றுகின்றேன்.மலையாள மொழியின் இனிமையும் ஆனந்தபைரவியின் இணைவும் கற்கண்டாய் இனிப்பவை.

“ஆராட்டினானைகள் எழுந் நள்ளி ” என்று கே.ஜே.ஜேசுதாஸ் , வீ.தட்சிணாமூர்த்தி இசையில் பாடும் பாடல் பரவசப்படுத்தும் ஆனந்தபைரவி ராகப்பாடல் ஆகும். மலையாள சினிமாவில் வெளிவந்த ஆனந்தபைரவி ராகப்பாடல்கள் , தமிழ் சினிமாவில் வந்தததை விட அதிகமோ என எண்ணத் தோன்றுகிறது.

இந்த வகை ராக பிம்பம் என் நினைவுசுழிகளில் பதிந்து போன ரகசியம் என்ற எண்ணத் தோன்றுகின்றது.

அதைப் போன்றே தான் சிப்பிக்குள் முத்து படத்தில் படத்தில் வெளிவந்த ” துள்ளித் துள்ளி நீ பாடம்மா சீதையம்மா ” என்ற மத்தியமாவதி ராகப் பாடல் கேட்ட மாத்திரத்திலேயே ஏதோ தெலுங்கு வாடை வீசியதாக உணர்ந்தேன்.நீண்ட நாட்களின் பின்பே அந்த படம் தெலுங்கு படத்தின் தமிழாக்கம் என்ற செய்தி அறியக் கிடைத்தது.அந்தந்த மொழிகளின் , பிரதேசத்தின் மண் வாசனையை இசையமைப்பாளர்கள் வெளிப்படுத்துவது ஆச்சரியமானதாகும்.இசைஞானி இளையராஜா அந்தந்த மொழிகளின் உள்ளார்ந்த மண்வாசனையை ரசத்தோயச்சலாகத் தருவதில் தன்னிகர்றறவர்.

தங்களது உணர்வுகளை மற்றவர்களும் ஏற்க வைக்கும் ஆற்றல் திரை இசையமைப்பாளர்களுக்கு வாய்த்தது.சினிமாவின் நாயகன் வாழ்க்கையிலிருந்து உருவானவன்.அவனது வாழ்வை ஒட்டி , அவனது உணர்வுகளை தன உணர்வுகளையும் பொருத்திப் பார்க்கும் போது அதற்க்குண்டான இசையை , மெட்டை தான் அறிந்த மரபிலிருந்து எடுத்துக் கொள்ளும் அதே நேரம் காலத்திற்கு ஏற்ப கொடுக்கும் போது அது புதிதாக மலர்கிறது.கர்ன்னாடக இசையோ அவர்கள கட்டமைத்த பக்தி என்ற பெருஞ் சுவர்களைத் தாண்டியதில்லை. ஒப்புவிக்கும் கலை தெரிந்தால் போதும்!

பக்தி என்ற எண்ண சிந்தனையில் குவிக்கப்பட்டு , சிறைவைக்கப்பட்ட ஆற்றல் மிக்க ராகங்கள் சிறிய வட்டத்துள் யாருக்கும் பயனற்றுக் கிடந்த நிலையில் , சினிமாவில் வாழ்வெண்ணத்தோடு வயப்படுத்தப்பட்ட பாடல்கள் இசையின்பத்தை கொள்ளையின்பமாகத் கொட்டிப் பல கோடி மக்களை ஈர்த்தன.