தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 8 ] : T.சௌந்தர்


தமிழ் செவ்வியல் இசை வளத்துக்கு மற்றுமொரு பெருஞ்செல்வம் கீரவாணி என்கிற அற்ப்புதமான ராகம்.பழம்பெரும் ராகங்களில் இன்றும் நிலைபெற்று , பயன பாட்டில் உள்ள ராகம் இதுவாகும்.தமிழ் இசைமரபில் இந்த ராகம் 21 வது மேளகர்த்தா ராகம் என அழைக்கப்படுகிறது.இது ஒரு மூர்ச்சனாராகம்.அதாவது இந்த ராகத்திலிருந்து புதிய ராகங்கள் பிறக்கும் என்பதாகும்.இதிலிருந்து பிறந்த ராகங்களாக சிம்மேந்திரமத்திமம், வகுளாபரணம் , ஹேமாவதி , கல்யாண வசந்தம் போன்ற ராகங்கள் கருதப்படுகின்றன.விரிவான ஆலாபனைக்கு இடம் அளிக்கும் ராகமாகவும் இது திகழ்வதால் கர்னாடக இசையிலும் அதிகம் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

மனித வாழ்விலும் ,வரலாற்றிலும் தொடர்ச்சியான பரிமாற்றத்தால் மனித நாகரீகம் மேம்பட்டு வந்திருக்கிறது என்ற வகையில் அடிப்படை மனித உணர்வுகள் ஒன்றாக இருப்பதால் இசையிலும் சில பொதுத் தன்மை இருப்பது தவிர்க்க முடியாததாகிறது.

இந்த ராகத்தின் சாயலைக் கொண்ட இசை கூறுகள் மேலைத்தேய இசையிலும் , குறிப்பாக கிரேக்க , இத்தாலிய நாட்டுப்புற இசையிலும் அதிகமாகக் காணப்படுகின்றன.தென் கிழக்கு ஆசியா எங்கும் ஒலிக்கும் மோகனம் போல, மத்தியதரை கடல் பகுதிகளைச் சேர்ந்த நாடுகளின் தேசிய ராகம் என்று சொல்லக் கூடிய அளவுக்கு இந்த நாடுகளில் கீரவாணி ராகத்தின் வாசம் அதிகமாக வீசுகிறது.

பழந்தமிழ் இலக்கியங்களில் கிரேக்க , இத்தாலிய வணிகர்களை ” யவனர்கள்” என அழைத்தார்கள்.இதற்க்கான தொல்லியல் ஆதாரங்களை ஆய்வாளர்களும் ஆய்ந்து கூறியுள்ளனர். .தமிழகத்தின் பழங்காலத் துறைமுகமான ” முசிறி”யில் சந்தனம் ,மிளகு, தந்தம் ,ஏலம் ,முத்து போன்றவற்றை பண்டமாற்றாக கொண்டு சென்றமையை பழந்தமிழ் இலக்கியமான அகநானூறு பின்வரும் பாடல் ஒன்றில் கூறுகிறது.

” சேரலர்
சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளம்கெழு முசிறி ” – - அகநானூறு [ 140 ]

மற்றும்

” யவனர் நன்கலம் தந்த தண்கமழ் தேறல்
பொன் செய் புனைகலந்து ஏந்தி நாளும்
ஒண்தொடி மகளிர் மடுப்ப மகிழ்சிறந்த
ஆங்க இனிது ஒழுகுமதி ” – [ புறம் 56 ]

இவை மட்டுமல்ல இசையிலும் கலப்பு நிகழ்ந்திருக்கும் என்று கருதும் படியான வரலாற்றுச் சான்றுகளை இசை அறிஞர்களும் கூறிச் சென்றுள்ளனர்.
K.B.deval என்ற இசை அறிஞர் எழுதிய ” Hindu Musical scale and and 22 Srrutis ” என்ற நூலில் பின்வருமாறு எழுதியதாக ஆப்ரகாம் பண்டிதர் தனது ” கர்ணாமிர்தசாகரம் நூலில் மேற்கோள் காட்டியுள்ளார்.

[ But we maybe certain that our scale dates farther back than the the greek scale which is acknowledge to be the parent of modern European scales.Capt.Day in his `Music of Southern India ` opserves ;- The historian strabo shows that the Greek influence extended to India , and also that Greek musicians of a certain school attributed the grater part of the science of music to India.'' - Hindu Musical scale and and 22 Srrutis By K.B.deval page !.

'' ஆனால் நாம் ஸ்திரமாய்ச் சொல்லக்கூடியது,தற்காலம் ஐரோப்பாவில் வழங்கும் ஆரோகணங்களுக்குத் தாயாக எண்ணப்படும் கிரேக்க ஆரோகணங்களுக்கு முன்னான காலத்திலும் இந்திய ஆரோகணங்கள் இருந்தன என்பதாம். "தென்னிந்திய சங்கீதம் " என்ற நூலில் Captain Day என்பவர் " சரித்திர சாஸ்திரியாகிய Strabo சொல்லுகிறபடி கிரேக்கருடைய சங்கீதத்தின் பிரகாசம் இந்தியா வரையில் எட்டியது என்றும் கிரேக்க வித்துவான்களில் ஒரு சாரார் சங்கீத சாஸ்திரத்தின் அதிகமான பாகம் இந்தியாவிலிருந்து ஜெனித்தது என்று ஒப்புக் கொண்டார்கள் என்றும் சரித்திரக்காரராகிய ஸ்ட்ராபோ சொல்லுகிறார் " என்று கூறுகிறார்.

Sir_William_Wilson_Hunterஅதுமட்டுமல்ல , W.W.Hunter என்ற இசை அறிஞரின் கருத்தையும் சுட்டிக் காட்டுகிறார்.

கிரேக்க தெய்வமான ஹெர்மஸ் [ Hermez ] கைகளில் உள்ள கித்தாரா[ kithara ] என்ற தந்தி இசைக்கருவி [ இன்றைய கிட்டார் வாத்தியத்தின் முன்னோடி ] வத்திருப்பதாக கிரேக்கக் கதைகள் கூறுகின்றன.
இந்திய சங்கீதம் [ இந்திய சுரம் எழுதும் முறை ] சுமார் 2300 ஆண்டுகளுக்கு முன் பாணினி காலத்தில் எகிப்து , பாரசீகம் ,அரேபியா போன்ற நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டது என்றும் , அங்கிருந்து ஐரோப்பா கொண்டு செல்லப்பட்டு பின் 11 ஆம் நூற்றாண்டில் Guido L. Arezzo என்பவரால் ஐரோப்பிய சங்கீதத்தில் அமைக்கப்பட்டது.தற்காலம் சங்கீதத்தில் வழங்கி வரும் “gamut ” என்னும் பதமானது கிரேக்க எழுத்தாகிய ” Gamma ” என்பதிலிருந்து [ இந்திய / தமிழ் இசையில் கிராமம் எனப்படும் ] உண்டானது . என W.W.Hunter’s [ The Indian Empire -p . 110 -112 ] தனது நூலில் குறிப்பிடுகின்றார்.

சிசிலி , கிரேக்கம் , இத்தாலி போன்ற நாடுகளின் நாட்டுப்புற இசையிலும் , அவர்களது நவீன இசையிலும் மிகுந்து காணப்படும் இந்த ராகம் ஏனைய ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின் , போர்த்துக்கீய நாடுகளிலும் தாரளமாக ஒலிக்கின்றது.ஐரோப்பிய இசையில் Minor Scale என்ற பிரிவில் இதனை அடக்குவர்.இந்த ராகம் அமெரிக்க , ஐரோப்பிய சினிமாக்களிலும் நிறையப் பயன்டட்டு வருகிறது.

இந்த ராகத்தில் அமைந்த பல பாடல்கள் Youtube ல் கிடைக்கின்றன. சில பாடல்கள்.

01. SI Maritau Rosa [ Italian Folk Song ]
02 . Folk music from Sicily by Arany zoltan
03 . Sicilia – Italian Folk Music – Si Maritau rosa
04 . A lu micatu [ canzone poplare siciliana in versione moderna ]
05 . Canzoni Sicilaine – Lu Cardidduzzu
06 . lu Sciccareddu


பிரபல ஹொலிவூட் திரைப்படமான God Father [ 1972 ]திரைப்படத்தின் பிரதான இசையாக [ THEME MUSIC ] இந்த ராகத்தில் அமைந்த இசை பயன்படுத்தப்பட்டுள்ளது.திரைப்படம் சிசிலியன் நாட்டிலிருந்து பிழைப்புத் தேடி அமெரிக்க சென்ற சிறுவன் , வளர்ந்து சட்டவிரோத தொழிலில் ஈடுபட்டு பெரும் செல்வந்தனாக வளரும் கதையை சொல்லுகிறது. Marlon Brando என்ற உன்னதக் கலைஞன் கதாபாத்திரம் ஏற்று நடித்த படம். கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளை மிகவும் நுணுக்கமாக , அற்ப்புதமாக இயக்குனர் வெளிப்படுத்திய மிக சிறந்த படம் . ஹொலிவூட் தந்த தலைசிறந்த படங்களில் ஒன்று இந்த திரைப்படம் என்று துணித்து சொல்லலாம்.

இந்த திரைப்படத்தில் இசை மிக , மிக அற்ப்புதமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.கீரவாணி ராகத்தை பல்வேறு சூழ்நிலைகளுக்கும் பொருத்தமாக Theme Music ஆகவும் ,Sicilian நாட்டார் பாடல் ஆகவும் , Le Parrain – Love Theme – Apollonia என்ற காதல் இசையாகவும் என பல்வேறு சூழ் நிலைகளுக்கும் பொருத்தமான , மிகவும் இனிமையான இசையாக வடித்து படத்தை உயிரோட்டமாக்கியிருப்பார்கள்

Carmine_Coppolaகதாபாத்திரங்களின் உணர்வுகளை மீட்டவும் , நினைவுகளை அசைபோடும் [ Flashback ] , பின்னணி இசையாக , படத்திலிருந்து பிரிக்கவொண்ணாத வகையில் அமைத்திருப்பது காட்சிகளுக்கு வலிமையை தருகிறது.இந்த படத்திற்கு இசை வழங்கியிருந்தவர்கள் உலகப் புகழ் பெற்ற Nino Rota , மற்றும் இப்படத்தின்இயக்குனரின் தந்தை Carmine Coppala ஆகியோர். இப்படத்தில் இசையும் ஒரு கதாபாத்திரம் என்று சொல்லுமளவுக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கபட்டுள்ளது.நெஞ்சத்தை விட்டகலாத இசைக்காகவே இந்த படத்தை பலமுறை பார்க்க நேர்ந்தது என் அனுபவம். இந்தப் படத்தில் இசைவடிவம் CD யிலும் வெளிவந்ததுள்ளது.

இனம் புரியாத இனிமையும் , ஒருவிதமான வெறுமையையும் ,அந்தப் போக்கில் மிகுந்த கவர்ச்சியையும் மட்டுமல்ல , அந்தக் கதா பாத்திரங்களுடனும் , அவர்கள் வாழும் புவியியல் சூழலுடனும் நம்மை ஒன்றிணைத்து படத்தை உன்னத நிலைக்கு உயர்த்திவிடுகிறது இசை.

குறிப்பாக படத்தின் நாயகன் சிசிலி நாட்டில் தலைமறைவாக் வாழும் சந்தர்ப்பத்தில் காட்டப்படும் சிசிலி நாட்டின் இயற்கைக் காட்சிகளில் இசை ஊறி யிருக்கிறது.

தமிழ் ராகமான கீரவாணியை 1960 களில் வட இந்திய செவ்வியல் இசை[ ஹிந்துஸ்தானி ] அரங்கிற்கு அறிமுகம் செய்தவர் மறைந்த சித்தார் இசைமேதை ரவிசங்கர் அவர்கள்.எனினும் அதற்க்கு முன்பே 1940 களிலும் , 1950 களிலும் ஹிந்தி திரை இசையமைப்பாளர்கள் இந்த ராகத்தில் பல நல்ல பாடல்களைத் தந்து அதன் புகழை ஏற்றி வைத்துள்ளனர்.

கீரவாணி ராகத்தின் தன்மைகளில் சிறப்பம்சமாகக் கருதப்படுவதில் முக்கியமானவை :
01 . வேகத்தைக் [ speed ] காட்டக் கூடியது என்பதுடன்
02 . தன்னிரக்கத்தை [ Self -pity ] வெளிப்படுத்துவதில் அல்லது தன்னைத் தானே நொந்து[ Self -restrain ] கொள்ளும் உணர்வை மிக சிறந்த முறையில் வெளிப்படுத்த உகந்த ராகம்.

கீரவாணி ராகத்தில் வெளி வந்த பாடல்கள சில :

01. இனி என்றும் இன்பம் தான் – படம் :ராணி 1953 – பாடியவர் : ஜிக்கி – இசை :C.R.சுப்பராமன்
தமிழ் சினிமாவில் மெல்லிசை இயக்கத்தைத் தொடங்கிய C.R.சுப்பராமன் அமைத்த விறுவிறுப்பான மெட்டு.வாத்திய இசையில் மேலைத்தேய வாடை நிறைய வீசும் பாடல்.

02. மாதர் மணியே வா – படம் :ராஜாம்பாள் 1953 – பாடியவர்கள் : S.பாலசந்தர் + P.லீலா – இசை :M .S.ஞானமணி
பேச்சோசை கலந்த பாடல்அமெரிக்கக் கலைஞரான .Maurice Chevalar என்பவரின் பாணியை பின்பற்றிய S.பாலசந்தர் லீலாவுடன் இணைந்து பாடிய பாடல்.மேலைத்தேய பாணியில் அமைந்த கீரவாணிப் பாடலை இசையமைத்தவர் அந்த காலத்தில் புகழ்பெற்ற M .S.ஞானமணி. இவர் எம்.ஜி.ஆர் நடித்த மருத நாட்டு இளவரசி படத்தின் இசையமைப்பாளர்.மெல்லிசை மன்னர் இவரிடமும் உதவியாளாராக பயிற்சி பெற்றவர்.

03. மண்ணிலும் விண்ணிலும் – படம் :வாழ்விலே ஒரு நாள் 1953 -பாடியவர் : C.S.ஜெயராமன் – இசை :T.G.லிங்கப்பா
இசைச்சித்தர் C.S.ஜெயராமன் அவர்கள் பாடிய அருமையான சோக ரசம் ததும்பும் பாடல்.

04. சமரசம் உலாவும் இடமே – படம் :ரம்பையின் காதல் 1957 -பாடியவர் : சீர்காழி .S.கோவிந்தராஜன் – இசை :T.R.பாப்பா
சமரசம் எங்கே உலாவுகிறது என்ற ஒரு பெரிய கேள்விக்கு தத்துவரீதியில் விடை பகரும் பாடல்.இசையால் கேட்பவர்களை உருக வைத்த அற்ப்புதமான கீரவாணிப் பாடல்.பாடலின் அர்த்தங்கள் என்னவென்று புரியாத வயதிலேயே என் மனத்தை வாட்டிய பாடல்.பாடலின் சரணத்தில் ” சேவை செய்யும் தியாகி சிங்கார போகி ” என்ற இடங்களைச் சீர்காழி அவர்கள் பாடும் போது கீரவாணி ராகத்தின் மாண்பு உச்சம் பெறுகிறது.அங்கு நம்மை உருகவைத்து அகப்படித்தி விடும் அற்ப்புத இசை தந்த T.R.பாப்பா சாதனை இசையமைப்பாளர் என்பதை நிரூபிக்கும் பாடல்.ராகத்தின் தன்மை அறிந்து தந்த அந்த மேதமையை வியக்காமல் இருக்க முடியவில்லை.

05. எங்கும் இன்பமே – படம் :சொர்க்கவாசல் 1953 – பாடியவர் : K.R.ராமசாமி – இசை :C.R.சுப்பராமன்
செவ்வியல் இசை சார்ந்த மெல்லிசை வடிவத்தில் அமைந்த பாடல்.இன்பம் சார்ந்த குதூகல உணர்வை உண்டாக்கும்
பாடல்.நடிப்பிசைப்புலவர் என்று பேர்பெற்ற K.R.ராமசாமி பாடிய பாடல்.

06. ஒன்று இரண்டு மூன்று – படம் :கல்யாணி 1953 – பாடியவர் : K.ஜமுனாராணி – இசை :S .தட்சிணாமூர்த்தி
மேலைத்தேய மணம் இன்னொரு கீரவாணிப் பாடல்.

07. ஓரிடந்தனிலே – படம் :வேலைக்காரி 1953 – பாடியவர்கள் : P.லீலா – இசை :C.R.சுப்பராமன்
பணத்தின் மதிப்பை எடுத்தியம்பும் பாடல்.இன்று கேட்டாலும் புதுமையாக ஒலிக்கும் பாடல்.வெளிவந்த காலத்தில் எப்படிபட்ட புதுமை தந்திருக்கும் என்பது ஆச்சரியப்படாமல் இருக்கக்கூடிய சங்கதி அல்ல.

08. ஒ..ரசிக்கும் சீமானே வா – படம் :பராசக்தி 1951 -பாடியவர் : M .S.ராஜேஸ்வரி – இசை :R.சுதர்சனம்
வானுலக மோட்சம் அதை துறைக்க களிக்கும் நடனம் புரிய அழைக்கின்ற பாடல்.வேகமும் , நளினமும் ,உல்லாசமும் கொண்ட அருமையான மெல்லிசைப் பாடல்.அந்தக் காலக் கிளப் பாடல் எனபதால் மேற்கத்தேய சாயல் இசை பயன் பட்டது போலும்.

09. அன்பே அழைக்கின்ற எந்தன் மூச்சே – படம் :அவன் 1951 – பாடியவர் : A.M.ராஜா+ ஜிக்கி – இசை :சங்கர்-ஜெய்கிசன்
கீரவாணி தந்த துயரமான பாடல்.1950 களில் வெளிவந்த அற்ப்புதமான பாடல்களைக் கொண்ட ” அவன் ” திரைப்படப்பாடல்.மனதை உலுக்கும் இசை.மனதின் அவலத்தை அலட்டாமல் கீரவாணியின் இயல்பான ஆழ்ந்த சோகத்தை வெளிப்படுத்தும் தன்மையை உன்னதமான முறையில் சங்கர் ஜெய்கிஷன் இரட்டையர்கள் அற்ப்புதமாக வடிக்க , மெல்லிசையின் ஈடுஇணையற்ற நாயகன் A.M.ராஜா துயரம் ததும்ப தனது பாரியார் ஜிக்கியுடன் இணைந்து பாடிய சாகாவரம் பெற்ற பாடல்.

10. ஓ.. எந்தன் பிரேமா என் ஆசை பிரேமா – படம் :வெற்றிவீரன் 1956 – பாடியவர் : TMS – இசை :TM இப்ராஹீம்
இனம் புரியாத தவிப்பு துல்லியமாகத் தெரிகின்ற பாடல்.ஐரோப்பிய மத்திய தரைக்கடல் பகுதியின் மண்டலின் [ mandolin ] இசை பொதுவாக கீரவாணி ராகத்தில் ஒலிக்க விடுவது எனபது தற்செயலான விசயமே அல்ல.இப்ராகிம் என்கிற இசையமைப்பாளர் ஒரு சில படங்களுக்கே இசையமைத்தாலும் தனது முத்திரையைப் பதித்தவர்.

11. கண்ணாலே பேசி பேசி – படம் :அடுத்தவீட்டுப் பெண் 1960 – பாடியவர் : P.B.ஸ்ரீநிவாஸ் – இசை :ஆதி நாராயணராவ்
மீண்டும் ஐரோப்பிய இசையின் தன்மையை நினைவூட்டும் அழகான பாடல்.கேட்கும்போது மனதில் ஒரு வித எழுச்சியை உசிப்பி விடும் பாடல்.
P.B.ஸ்ரீநிவாஸ் அவர்களின் வசீகரமான குரல் பாடலை மெருகேற்றியுள்ளது.

12. ஆடாத மனமும் ஆடுதே – படம் :களத்தூர் கண்ணம்மா 1960 -பாடியவர் : A.M.ராஜா+ P.சுசீலா – இசை :R.சுதர்சனம்
A.M.ராஜா+ P.சுசீலாவின் மென்மையான குரலில் இதமாக ஆரம்பிக்கும் பாடல் ,அனுபல்லவி ஆரம்பிக்கும் முன் ஆரம்பிக்கும் இடை இசையில் வேகமெடுத்து ஓடத்தொடங்கி விடுகிறது.அது கீரவாணியின் தன்மையல்லவா.

13. ஓங்காரமாய் விளங்கும் நாதம் – படம் :வணங்காமுடி 1957 – பாடியவர் : TMS – இசை :G.ராமநாதன்
விஞ்சி வளர்ந்து விட்ட ஆவேசக் குரல், அது இசை மேதை ராமநாதன் தந்த ஓங்கார நாதம்.அவரது இசை காவியம் புகழும் இசை, ஜீவிதமதில் திகழும் இசை.கீரவாணியை அற்ப்புதமான முறையில் கையாண்ட ஜி.ராமநாதனின் இசையமுதம்.தகுந்த பாடகர் தெரிவில் பாடலும் வீரியம் மிக்க தாக உள்ளது.

14. பாட்டுப் பாட வா – படம் :தேன்நிலவு 1961 – பாடியவர் : A.M.ராஜா – இசை : A.M.ராஜா
மெல்லிசையில் புதுமைகள் செய்த முன்னோடி இசையமைப்பாளர் A.M.ராஜா தந்த வேகமும் இனிமையும் மிக்க கீரவாணி வார்ப்பு.இயல்பான் ஓட்டத்தில் நெஞ்சை அள்ளும் மெல்லிசை வண்ணத்தில் .புதுமை தந்த எங்கள் A.M.ராஜா என்றென்றும் இசை ரசிகர்களிடம் வாழ்வார்.

15. ஓஹோ எந்தன் பேபி – படம் :தேன்நிலவு 1961 – பாடியவர் : A.M.ராஜா + S.ஜானகி – இசை : A.M.ராஜா


கீரவாணியின் பிறவிக்குணமான வேகத்தை பிரதானமாக வெளிப்படுத்திய A.M.ராஜாவின் அபார கற்பனையில் உதித்த பாடல்.தாவும் வேகமும் , தென்றல் சுகமும் ஒன்றாக இணைந்த பாடல்.மெல்லிசை மகுடங்களில் ஒன்று.

16. மன்னவனே அழலாமா – படம் :கற்பகம் 1964 – பாடியவர் :P.சுசீலா – இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி
கீரவாணியின் இன்னுமொரு இயல்பான தன்னைத்தானே வருத்திக் கொள்கிற பாவத்தைத் தருகின்ற பாடல்.உருகாதவர்களையும் உருக வைக்கும் பாடல்.தமிழ் மக்களின் கருத்தில் நிலைத்து நிற்கின்ற தமிழ் சினிமா தந்த இசை அர்ப்புதங்களில் ஒன்று.கேட்க்கும் கணம் தோறும் தாங்க முடியாத மன வலியை தருகின்ற பாடல்.விறுவிறுப்பான பின்னணி இசையும் கோரசும் இசை அற்ப்புதம்.Haunting பாடல் வகையில் மெல்லிசை மன்னர்கள் தந்த இதயத்தை பயணிக்கின்ற பாடல்.படைப்பாற்றலின் உச்சம் இது.

17. புத்தி உள்ள மனிதர் எல்லாம் – படம் அன்னை 1961 – பாடியவர் : J.P.சந்திரபாபு – இசை : R.சுதர்சனம்
ஐரோப்பிய இசையை நினைவூட்டும் பாடல்.

18. குங்குமப் பூவே – படம் மரகதம் 1964 – பாடியவர் : J.P.சந்திரபாபு – இசை :எஸ்.எம்.சுபபையநாயுடு
மீண்டும் கீரவாணியின் துரு துரு வேகம் தரும் பாடல்.பாடகர் தெரிவும் சிறப்பாய் அமைந்த பாடல்.

19. போனால் போகட்டும் போடா – படம் பாலும் பழமும்1961 – பாடியவர் : TMS இசை : -விஸ்வநாதன் ராமமூர்த்தி
தன்னை தானே தேற்றும் , தன்னை தானே நொந்து கொள்ளும் உணர்வை மிக அழகாக வெளிப்படுத்திய விரக்திப் பாடல்.ஹம்மிங் மற்றும் பின்னணி இசையால் காட்சியின் தன்மையை அழகாகச் சித்தரிக்கும் பாடல்.சோகத்திலும் கீரவாணி தரும் வேகம் இதம் தரும்.மெல்லிசை மன்னர்கள் அசத்திய பாடல்.

20. பூந்தேனில் கலந்து – படம் : ஏணிப்படிகள் 1979 – பாடியவர் : SPB +P.சுசீலா இசை :K V.மகாதேவன்
அருமையான மெல்லிசை வார்ப்பு கீரவாணியை மறைத்து வைத்தது போன்று ஆங்காங்கே தெறிப்புக்களில் கீரவாணி ஜாலம் செய்யும் பாடல்.

21. யார் சிரித்தால் என்ன – படம் இதயத்தில் நீ 1962 – பாடியவர் : P.B.ஸ்ரீநிவாஸ் – இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி
மீண்டும் மெல்லிசைமன்னர்களின் விரக்திப் பாடல்.கேட்பவர்களை இரங்க வைக்கின்ற ஸ்ரீநிவாஸ் பாடல்.கவிஞர் வாலி எழுதிய பாடல்.

22. காதோடு தான் நான் பாடுவேன் – படம் வெள்ளி விழா 1972 – பாடியவர் : L.R .ஈஸ்வரி – இசை :V.குமார்
1970 களில் வெளிவந்த குறிப்பிடத்தகுந்த கீரவாணி ராகப்பாடல்.L.R .ஈஸ்வரி தனக்கே உரிய முறையில் தனித்துவமாக பாடிய பாடல்.

23. என் காதலி யார் சொல்ல வா – படம் : தங்கத்திலே வைரம் 1975 – பாடியவர் :K.J.ஏசுதாஸ் + SPB – இசை :சங்கர் கணேஷ்
சங்கர் கணேஷ் இசையில் யேசுதாசும் , SPB யும் இணைந்து பாடிய பாடல்.இளமையும் துடிப்பும் வேகமும் மிக்க பாடல்.நல்ல ராகத் தெரிவு.

24. கண்ணாளனே எனது கண்ணை – படம் : பம்பாய் 1993 – பாடியவர் : சித்ரா ரி – இசை :AR.ரகுமான்
AR.ரகுமான் பாணி பாடல்.நல்ல மெட்டு என்றாலும் , பாடலுக்குரிய பிற சேர்க்கைகள் வலிந்து செயற்கையாக செய்யபட்டதால் மெட்டின் இனிமையை தடுமாறச் செய்வது போன்ற உணர்வு ஏற்ப்படுகிறது.க ..ம .பா என்று சுரங்களை பாடுபவர் பரிதாபமாக தெரிகிறார்.அது இயற்கையாக , ஓட்டமாக விழவில்லை.இது போன்ற செயற்கை நீக்கினால் நன்றாக இருந்திருக்கும்.

25. அழகாய் பூக்குதே – படம் : நினைத்தாலே இனிக்கும் 2009 – பாடியவர் : பிரசன்னா + ஜானகி ஐயர் – இசை :விஜய் அன்டனி
இளையராஜா இசையமைத்த ” ஒரு உறவு அழைக்குது ” [ படம் : கிருஷ்ணன் வந்தான் ] பாடலுக்கு நவீன இசை பொருத்தப்பட்ட பாடல்.அப்பட்டமான மறுபதிப்பு. இருந்தாலும் அதிலும் ஒரு சுகம் இருக்கும் பாடல்.பாடியவர்கள் மிக அருமையாகப் பாடியிருக்கின்றார்கள்.கீரவாணியின் சுகம் மிதந்து வரும் பாடல்.

26. எனக்கென பிறந்தவ ரெக்கை கட்டி பறந்தவ – படம் : கிழக்குக் கரை 1993 – பாடியவர் :SPB + சித்ரா – இசை :தேவா
இளையராஜாவின் இசையில் தோய்ந்து எழுந்த தேவா தந்த பாடல்.கீரவாணியின் சுகத்தை அனுபவிக்கலாம்.வாத்திய இசையின் நேர்த்தி பாடலின் சிறப்பம்சம் ஆகும்.

27. சாமத்துக் காற்று வீசும் – படம் : பம்பாய் 1993 – பாடியவர் : மனோ +சித்ரா – இசை :தேவா
மீண்டும் தேவாவின் பாடல்.இளையராஜாவின் சாயலில் இசையமிக்கப்பட்ட பாடல்.

இளையராஜாவும் கீரவாணியும் :

தமிழ் சினிமா இசையில் கீரவாணி ராகம் அன்று முதல் இன்று வரை பயன்பட்டுவந்துள்ள ராகமாகும்.ஆனால் அதில் முழுப்பரிமாணம் காட்டும் வகையில் இசைஞானி இளையராஜா அமைத்த பாடல்கள் சிருஸ்டித் தன்மையின் பன் முக ஆளுமையைக் காட்டுவதாக உள்ளது.தனக்குக் கொடுக்கப்படும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப பாடல்களை ஒரே ராகத்தை வைத்துக் கொண்டு விதம் விதமாக பல வண்ணங்களை அள்ளி ,அள்ளி வீசும் ஆற்றல் திரையுலகில் யாரும் செய்யாததாகும்.நம் வாழ்வோடு இணைந்து போகின்ற பாடல்களால் நம்மை அழகுணர்ச்சி மிக்கவர்களாக வளர்த்த இசை அற்புதங்களை நமக்கு தந்திருக்கின்றார்.

“இன்று இலக்கியத்தில் ஏராளமான கொல்லர்கள் இருக்கிறார்கள்.ஆனால் கைதேர்ந்த சிற்பிகள் தான் குறைவாக உள்ளனர்.” ஜோபர்ட் கூறியது இலக்கியத்திற்கு மட்டுமல்ல இசைக்கும் பொருந்துகிறது. கலைத் திறன் அற்ற கொல்லர்கள் மிகுந்த சினிமாவில் அவர் ஒரு ராஜசில்பி.

பல இழைகளைக் கொண்ட சிக்கலான இசையை ,எல்லோருக்கும் எளிதில் பிடிபடாத இசையை எல்லோர் மனதிலும் ஆழ்ந்த சலனங்களை எழுப்பும் ஆழமான் இசையை அமைதியாக ஓடும் ஆற்றைப் போல எளிமையாக பின்னித் தருவதில் வல்லவர் இளையராஜா.

கணக்கற்ற மைல்கள்
காலாற
கடற்க்கரை மண்ணில் நடந்து
எல்லைகளற்ற சமுத்திரங்களையும்
கம்பீரமான மலைத் தொடர்களையும்
கண்டு களித்த எனக்கு
எனது வீட்டிலிருந்து
இரண்டு காலடிகள் எடுத்து வைத்து
புல்லின் விளிம்பில்
பூத்திருக்கும்
பனித்துளியை
பார்ப்பதற்கு
அவகாசம் ஏனோ இன்னும் கிடைக்கவில்லை.

என தாகூர் கூறியதைப் போல நாம் காணத் தவறிய , நமக்குக் காட்டப்படாத, நமக்கே உரியதான சிறப்புக்களை எல்லாம் உலகப் பெரும் இசைக் கௌரவங்களோடு அணிசெய்து ஆரோக்கிய இசையை விளைச்சலாகத் தந்த பெருமை இளையராஜாவைச் சேரும்.

காலக் காட்டாறைக் கடக்கும் படைப்புகளை மரபில் நின்று தருவதும் அதில் என்றென்றும் மிளிரும் நவீனங்களால் இசை மாளிகையை கட்டியெழுப்பிய ராஜசில்பி இளையராஜா.

ஒரே ராகத்தில் இத்தனை பாடல்களா எனப் பிரமிக்க வைக்கும் பாடல்களை அதிக எண்ணிக்கையில் தந்த அவரது ஊற்றெடுத்து பெருகும் கற்பனை ஆற்றலை, அவர் காட்டும் சிரத்தையை நாம் எண்ணி வியப்படையவே மட்டும் முடியும்.ராகத்தின் தோற்றபாங்கை , அதன் முழுமையை பாடல்களில் அப்படியே புலப்படுத்துவது மட்டுமல்ல அதில் கற்பனையும் அவரது முதல் நோக்கமாக உள்ளது.இத்தனை இனிமையும் புதுமையும் பாடலுக்குப் பாடல் அவர் தந்தாலும் , அவற்றில் ஒரே சாயல் வருவதையும் தவிர்த்து தரும் பாங்கு அவரது ஞாபகசக்தி பற்றிய ஆச்சரியத்தையே வழங்குகிறது.

இது இளையராஜா மீது வைக்கும் வெறும் புகழ்ச்சியில்லை.இந்த மாதிரி ஒரு ராகத்தில் இத்தனை விதம் விதமான பாடல்களை அள்ளித் தந்தவர்கள் இந்திய சினிமாவில் வேறு யாரும் இல்லை என்றே சொல்லலாம்.அதில் இளையராஜாவே போற்றி புகழும் பழம் பெரும் இசையமைப்பாளர்களும் அடக்கமே.

ராக அடிப்படை மட்டுமல்ல அதனை வெளிப்படுத்தும் முறையும் உருவழியாத வகையில் ஒன்றுபட்டு நிற்ப்பதால் நம் இதயத்தோடு இயல்பாக ஒன்று கலக்கும் நம் நெஞ்சங்களில் நின்று நிலைக்கும் பாடல்களை அவரால் தர முடிகிறது.

01. காற்றில் எந்தன் கீதம் – படம் :ஜானி 1980 – பாடியவர் : எஸ்.ஜானகி – இசை :இளையராஜா
நல்லிசை இதயத்தின் நாதம் எனபதர்க்கிணங்க மிக அருமையான ஹம்மிங்குடன் ஆரம்பமாகும் பாடல்.கேட்பதற்கு இலகுவாக அமைந்தது போல விளங்கும் ஆலாபனை பாடுபவர்களுக்குச் சவாலாக அமைந்துள்ளது.விரக தாபத்தை மிக அற்ப்புதமாக வெளியிடும் கீரவாணியின் பிரயோகம் ஆரம்பம் முதல் இறுதிவரை சுவையின்பம் குன்றாமலும் , இடையிசையில் எத்தனை பின்னல் வேலைகளை நெய்து பாடலில் படைப்பு வன்மையைக் காட்டும் பாடல்.

02. தங்கச் சங்கிலி – படம் :தூறல் நின்று போச்சு 1982 – பாடியவர் :மலேசியா வாசுதேவன் + S .ஜானகி – இசை :இளையராஜா
கீரவாணியின் அழகைக் காட்டும் மென்மையான மெட்டமைப்பைக் கொண்ட பாடல்.பின்னனி இசை மீட்டலிலும் ஒவ்வொரு சிறிய ஒலியும் கீரவாணி ராகத்தில் பட்டு தெறிப்பது போன்ற உணர்வைத் தரும் பாடல்.

03. மலையோரம் வீசும் காற்று – படம் :பாடுநிலாவே 1980 – பாடியவர் : SPB = சித்ரா – இசை :இளையராஜா
சம்பிரதாய ராகங்களை நவீனமாகக் கையாளுதலில் துணிச்சலான , எல்லையற்ற மனத்திடம் காட்டும் இசைஞானியின் தன்னை தானே நொந்து கொள்ளும் பாவத்தை அற்ப்புதமாக வெளிப்படுத்தும் பாடல்.

04. ஒரு காவியம் அரங்கேறும் நேரம் – படம் :அறுவடை நாள் – பாடியவர் : இளையராஜா – இசை :இளையராஜா
ஒழுங்கான இசை லயம் கூட்டி நிற்கும் பாடல்.பாடலை உறுத்தாத பின்னணி இசையுடன் ஹோரஸ் இசை மிக அருமையாக இரண்டறக் கலந்து பாடலின் புலப்பாட்டைச் சிறப்பிக்கும். இந்த வகை ஹோரஸ் இல்லாமலே பாடல் சிறப்பாக அமையக் கூடியதாய் அமையக் கூடிய பாடல் என்றாலும் பாடலை மேலும் அழகூட்ட இப்படி எத்தனையோ இசையின்பம் தருகின்ற விசயங்களை நுண் கூறுகளாக அடுக்கி நம்மை புதிய இசை புரிதலுக்கு ஒரு வழியைக் காட்டிய மேதமைக் கைவரிசை இந்தப் பாடல்.

05. போவோமா ஊர்கோலம் – படம் :சின்னத்தம்பி – பாடியவர் : SPB +சுவர்ணலதா – இசை :இளையராஜா
கீரவாணி ராகத்தின் இயல்புகளில் ஒன்றான வேகத்தைக் காட்டும் பாடல். கட்டறுத்துப் பாயும் வெள்ளம் கரைகளை உடைத்துத் தாவி போவது போல கீரவாணி தன் ஆற்றலைக்காட்டும் தனி அமைப்புக் கொண்ட புதுமையான பாடல்.வாத்திய இசையின் இனிமையை பற்றி பேசவே தேவை இல்லை.கேட்கக் கேட்கத் திகட்டாத பாடல்.

06. பாடிப்பறந்த கிளி – படம் :கிழக்கு வாசல் – பாடியவர் : SPB – இசை :இளையராஜா
இளையராஜாவின் வற்றாத இசை ஆளுமைப்பாங்கில் உதித்த இன்னுமொரு பாடல்.சோகப் பாடலானாலும் அதிலும் அழகாக விழும் வேகம் பல உணர்வுகளைக் கிளர்த்தும்.புல்லாங்குழல் , செனாய் போன்ற வாத்தியங்கள் உணர்வுகளை கொப்பளிக்கின்றன.

07. பூ பூக்கும் மாசம் தை மாசம் – படம் :வருஷம் 16 – பாடியவர் : P.சுசீலா – இசை :இளையராஜா
தமிழ் திரை இசை உலகின் முடிவற்ற , மற்றவர்களால் கற்பனை செய்ய முடியாத காட்சிப் படிமங்களை இசையில் காட்டும் ஆற்றல் வல்லமைமிகக் காட்டும் இசைஞானியின் தனித்துவப் பாடல்களில் ஒன்று.சாதாரண புல்லாங்குழலையும் , பெண் குரல் ஹம்மிங்கையும் வைத்துக் கொண்டே கிராமத்தின் எழிலைக் காட்டும் உன்னதமான பாடல்.
பீத்தோவனின் ஆரம்பகால சிம்பொனியில் கிராமத்து ஒலிகள் கையாண்டது போல , இளையராஜாவின் இசை ஆளுமையில் பெரும் பங்காற்றிய அழகிய கிராமங்களின் படிமங்கள் பல இசை நெசவுகளாக வடித்துத் தரப்பட்டுள்ளன.

08. உன்னே நினச்சே பாட்டு படிச்சேன் – படம் :அபூர்வ சகோதரர்கள் – பாடியவர் : SPB – இசை :இளையராஜா
கீரவாணியில் எத்தனை விதம் , விதமான சோகப்பாடல்களைத் தந்தாலும் அவற்றையும் விட இன்னும் அதிலும் ஒரு ஒரு புது வகை என சொல்லி தரும் இசை ஆளுமை மிக்க பாடல்.வஞ்சிக்கப்பட்ட ஒருவனின் இதயக்குமுறல் இயலாமையாக வெளிப்பட்டு தன்னை தானே நொந்து நம்மையும் அதில் இணைக்கும் அற்ப்புதம கலந்த இசையமுதம்.” கண்ணிரண்டில் நான் தான் ” என்ற சரணத்திற்கு முன்பு வரும் வயலின் இசை இதயத்தை நொறுக்கி விடுகிறது.அங்கே கீரவாணி தனது பேரழகால் நம்மை இனம் புரியாத சோகச் சுழலில் அமிழ்த்தி விடுகிறது.இந்த ராகங்களில் இத்தனை வர்ணஜாலங்கள் செய்து காட்டும் ஆற்றல் எத்தனை பேருக்கு வரும்.?!

09. மலர்களிலே ஆராதனை – படம் :கரும்புவில் – பாடியவர் : மலேசியா வாசுதேவன் +எஸ்.ஜானகி – இசை :இளையராஜா
அழகான ஹம்மிங் மற்றும் தமிழ் செவ்வியல் இசையில் நின்று மேற்கத்தேய இசைகளின் counterpoints என்கிற இசை நுணுக்கங்ககளை அள்ளி இறைத்த பாடல்களில் ஒன்று.சின்ன சின்ன இழைகளால் அழகிய நெசவுகளை நெய்து காட்டும் பிரமிப்பு மிக்க படைப்பு. திரையிசையை பயிற்சிக் களனாக பயன்படுத்தி பரிசோதனைகள் பலவற்றை செய்து பார்த்தார் என்று துணிந்து கூறலாம்.ஒரே நேரத்தில் பல் வகை வாத்திய இசையை ஓட விடும் மேலைத்தேய சிம்பனி இசையின் நுட்பத்தை கையாண்டு வெற்றி பெற்றவர் ராஜா.

10. உன் நெஞ்சை தொட்டு சொல்லு என் ராசா – படம் :ராஜாதி ராஜா – பாடியவர் : P.சுசீலா + சித்ரா – இசை :இளையராஜா
ஆசை ஆவல் உணர்ச்சிகளை வெளியிடும் பாடல்.இரு பெண்கள் ஒரு ஆணை விரும்புவது போல அமைந்த பாடல்.பாடியவர்களின் உணர்வுமிக்க குரல்களும் , பின்னணி இசையும் நம்மை உலுக்குகிறது.படத்தில் இடம் பெறாத பாடல் எனறாலும் மிகவும் பிரபலமான பாடல்.கீரவாணி அழகொழுங்குடன் ஹார்மொனியில் நீந்துகின்ற பாடல். உறவின் தார்மீகப் பெருமையை நெஞ்சை அள்ளும் விதத்தில் தந்த பாடல்.

11. மன்றம் வந்த தென்றலுக்கு – படம் :மௌனராகம் – பாடியவர் : SPB – இசை :இளையராஜா
பாடலின் ஆரம்பமே நெஞ்சை உலுக்கி விடும் ஹம்மிங்குடன் தொடங்கி நம்மை கொள்ளை கொண்டு விடுகின்ற பாடல்.ஆனால் ஆரபிக்கும் ட்ரம்ஸ் , சக்ஸபோன் வாத்திய இசையோ உல்லாசமாக குதூகலம் காட்ட பாடல் தொடர்ந்தாலும் மனதை அறுக்கும் சோகமிழையோடிக்கொண்டே மனதை இதமாகவும் வருடும் ஓர் அற்பபுததைத் தரும் ராஜாவின் இசைப் பிரவாகம்.
” ஒரு பாடலை எவ்வாறு கொம்போஸ் பண்ண வேண்டும் , எவ்விதமான இசை கொடுக்க வேண்டும் என்பதற்கு ஒரு பாடமாக் , இந்தப் பாடலை வைக்க வேண்டும் ” என்று SPB ஒரு இசை நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.SPB மிகச் சிறப்பாகப் பாடிய பாடல்..

12. பூபாளம் இசைக்கும் – படம் :தூறல் நின்னு போச்சு – பாடியவர் : K.J.ஏசுதாஸ் + உமாரமணன் – இசை :இளையராஜா
கீரவாணி என்றதும் என் நினைவுக்கு வரும் பாடல்களில் முதலிடம் பிடிக்கின்ற பாடல்.ராகத்தின் தனிக்கூறுகளை மட்டும் வெளிக் கொணராமல் , வாத்திய இசையின் நளினங்களையும் , கிராமிய இசையின் எழில் வாய்ந்த பிணிப்பும் மனதை மயக்கும் வகையில் அமைந்த இளையராஜாவின் இசைக்கோலம்.

13. மாலைக்கருக்கலில் – படம் :எங்க ஊரு காவக்காரன் – பாடியவர்கள் : K.J.ஏசுதாஸ் + எஸ்.ஜானகி – இசை :இளையராஜா
கீரவாணி என்ற பந்தலில் இருந்து சொரிந்த மலர் ஒன்று.எத்தனை, எத்தனை வகையாக பாடல்களைத் தந்து , ஒவ்வொன்றிலும் புதுமை தரும் இளையராஜாவின் ஆற்றல் நம்மை நம்மை வியக்க வைக்கும்.இதயங்களை துருவி துளைக்கும் பாடல்.இன்பமாகவும் , துன்பமாகவும் தந்து அசத்திய பாடல்.

14. கீரவாணி இரவிலே – படம் :பாடும் பறவைகள் – பாடியவர் : SPB + எஸ்.ஜானகி – இசை :இளையராஜா
கீரவாணி ராகத்தை அடையாள படுத்தும் பல்லவியுடன் ஆரம்பமாகும் பாடல்.எப்படிப்பட்ட ஆரம்ப ஹம்மிங் என்று வியக்க வைக்கும் விதமாக அமைக்கப்பட்ட ஹம்மிங்.உதவாக்கரை திரைக்காட்சிக்கு இந்த உயர்ந்த ரக இசையா என்று கேட்க வைக்கும் இசை.” மலரில் மலராய் மலர்ந்தேன் ” என்று உச்சஸ்தாயியில் பாடும் போது உயிர் நிலையை தாக்குகிறது.

15. தெய்வீக ராகம் – படம் :உல்லாசப்பறவைகள் – பாடியவர் : ஜென்சி – இசை :இளையராஜா
நல்லிசையை தேடி ஓடும் நாடோடியான இசைஞானி தந்த தெவிட்டாத பாடல்.இளமையின் வாசலில் நின்ற என்னைப் போன்ற பல்லாயிரக்கணக்கான இசை ரசிக ,ரசிகைகளின் மனங்களைக் கொள்ளை கொண்ட பாடல்.இளமையிலே அப்பழுக்கற்ற இசையோடு நம்மை இரண்டறக் கலக்க வைத்த , நம் உள்ளுணர்வுகளில் மனக் கசிவு ஏற்ப்படுத்திய ஜாலப் பாடல்.” புதிய பாடல் ” என்பதை நமக்கு அந்த காலத்தில் உணர்த்திய பாடல்கள் விரிசையில் முதலிடங்களில் வரும் பாடல்.

16. ராஜ ராஜ சோழன் நான் – படம் :ரெட்டை வால் குருவி – பாடியவர் : K.J.ஏசுதாஸ் – இசை :இளையராஜா
K.J.ஏசுதாஸ் ஆழமான குரலில் ஒரு வித லாஹிரியுடன் அழகாகப்பாடிய பாடல்.குரலும் , பின்னணி இசையும் தன்னிகற்ற வகையில் இணைந்த ஒரு அற்பபுதத்தை தந்த இளையராஜாவின் புது இனிமை தரும் கீரவாணி. மேலை இசையின் செல்வாக்குப் பெற்ற பாடல்.1960 ல் வெளி வந்த ” கண்ணாலே பேசி பேசி கொல்லாதே ” என்ற பாடலின் தெறிப்புக்கள தெரிகின்ற பாடல்.

17. பூவே செம் பூவே – படம் :சொல்லத் துடிக்குது மனசு – பாடியவர் : K.J.ஏசுதாஸ் – இசை :இளையராஜா
மேலைத்தேய இசை, ஹிந்துஸ்தானி இசை , தமிழ் செவ்வியல் இசை என மூன்றும் சம அளவில் கலக்கப்பட்ட புதுமையான பாடல்.மூன்று வித இசை இருந்தும் அவை ஒன்றை ஒன்று நெருடாமல் நெஞ்சை அள்ளும் விதமாக படைக்கப்பட்டுள்ளது.கிட்டாரும் , புல்லாங்குழலும் இணைந்து மென்மையாக ஆரம்பிக்கும் பாடலில் வாத்திய இசை ஆற்றொழுக்கு போல தாவித தாவிச் சென்று கீரவாணியில் புது தினுசாக சௌந்தர்யம் காட்டிச் செல்லும்.

18. நீதானா நீ தானா – படம் :பாட்டுப் பாடவா – பாடியவர் : அருண்மொழி +எஸ்.ஜானகி – இசை :இளையராஜா
கீரவாணி ராகத்தில் உச்ச அளவில் பல பாடல்களைத் தந்த ராஜாவின் மனதை வருடும்பாடல். ராகத்தின் வர்ணனையில் மிளிரும் சோகத்தை இதமான இசையாக்கி தந்த அழகான பாடல்.மேலைத்தேய சிம்பொனி இசையின் கூறுகளை , அதன் லாவண்யங்களை , ஆங்காங்கே கீரவாணியின் வர்ணனைப்படலத்தில் மிதக்கவிட்ட இன்னுமொரு இசைவார்ப்பு.

19. பூவே செம் பூவே – படம் :சொல்லத் துடிக்குது மனசு – பாடியவர் : K.J.ஏசுதாஸ் – இசை :இளையராஜா
மேலைத்தேய இசை , ஹிந்துஸ்தானி இசை , கர்னாடக இசை என்ற மூன்று உன்னத இசைகளை ஒரு பாடலில் சங்கமிக்க வைத்து தமிழ் திரை இசையை சிறந்த நிலைக்கு கொண்டு சென்ற இசைஞானியின் இசைப்புலமைக்கு எடுத்துக்காட்டான பாடல்.மூன்று இசைகளின் இனிய சங்கமத்தை கீரவாணி ராகத்தில் சங்கமிக்க வைத்த இசை அற்ப்புதம்.ஒன்றை ஒன்று நெருடாத , ஒன்றை ஒன்று குழப்பாமல் , ஒன்றிலிருந்து மற்றொன்றை பிரிந்து போகாமல் ,அதே வேளை ராகத்தின் உணர்வில் ஊடிருவி செல்லும் பாடல்.பாடகர் தெரிவு அதைவிட அற்ப்புதம்.

20. உன்னை நான் அறிவேன் – படம் :குணா – பாடியவர் : S.வரலட்சுமி + எஸ்.ஜானகி – இசை :இளையராஜா
மற்றுமொரு அழகிய பாடல்.பழம்பெரும் பாடகி எஸ்.வரலட்சுமி தனது எடுப்பான குரலில் சிறப்பாகப் பாடிய சிறிய பாடல்.அந்தக் குரலின் அதிர்வில் கீரவாணி ராகம் உயிரை உருக்கும் விதமாக அமைந்திருக்கும்.எஸ்.ஜானகி பாடிய நீண்ட பாடலும் ,அதில் வரும் ஆண் குரலின் ஆலாபனையும் கீரவாணியை அள்ளித் தரும்.

21. மண்ணில் இந்த காதலன்றி – படம் :கேளடி கண்மணி – பாடியவர் : SPB – இசை :இளையராஜா
ஒரு ராகத்தில் அதன் இசைப்பெருக்கை எத்தனை எத்தனை வண்ணங்களாக வடித்து தந்தாலும் கட்டுக்கடங்காத இசைகடலிலிருந்து ஓயாத அலை எழுப்பும் இசைக்கலைஞன் இளையராஜாவின் இன்னுமொரு புகழ் பெற்ற பாடல்.படைப்பாற்றலின் எல்லைகளை விரித்துக் கொண்டே சென்றவரின் புது திசை காட்டும் கீரவாணி ராகப் பாடல்.

ILAYARAJAமேலே பழம் பெறும் இசையமைப்பாளர்கள் பலரும் இசையமைத்த சில பாடல்களை பார்த்தோம்.[ அவை நான் கேட்டவைகள் மட்டுமே . இன்னும் நான் கேட்காத பல பாடல்கள் இருக்கலாம் ] அவர்கள் எல்லோரும் சேர்ந்து இசையமைத்ததை விட , எண்ணிக்கையில் இளையராஜா தனியே ஒருவராக எத்தனை பாடல்களைத் தந்தார் என்பதை இப்போது பார்ப்போம்.இங்கே வருகின்ற பாடல்களில் ஏதாவது ஒன்று அவரே இசையமைத்த மற்ற பாடலகள் போல இருக்கிறதா என்பதை கேட்டுப்பாருங்கள்.

ஒரு படத்தில் இரண்டு நல்ல பாடல்களை தருவதற்கு இசையமைப்பாளர்கள் படுகிற பாட்டை இதனோடு ஒப்பிட்டு பார்த்தால் ராஜாவின் ஆற்றல் பிரமிக்கவே செய்யும்.

படைப்பாற்றலில் இவ்வளவு ஆளுமை காட்டிய ஒரு இசைக் கலைஞனை திரையுலகம் இதுவரை கண்டதில்லை எனலாம்.இளையராஜா இசையமைத்த இன்னும் சில கீரவாணி ராகப்பாடல்கள்.

22. குயிலே குயிலே உந்தன் – படம் :காதல் ஓவியம் – பாடியவர் : SPB + எஸ்.ஜானகி – இசை :இளையராஜா
23. நிலா அது வானத்து மேலே – படம் :நாயகன் – பாடியவர் : இளையராஜா + சித்ரா – இசை :இளையராஜா
24. ஒரு கிளி உருகுது – படம் :ஆனந்தக் கும்மி – பாடியவர் : இளையராஜா – இசை :இளையராஜா
25. ஓ.. பாபா லாலி – படம் :இதயத்தைத் திருடாதே – பாடியவர் : மனோ – இசை :இளையராஜா
26. தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு – படம் :ஈரமான ரோஜாவே – பாடியவர் : K.J.ஏசுதாஸ் + எஸ்.ஜானகி – இசை :இளையராஜா
27. வா வா அன்பே பூஜை உண்டு – படம் :ஈரமான ரோஜாவே – பாடியவர் : K.J.ஏசுதாஸ் + எஸ்.ஜானகி – இசை :இளையராஜா
28. என்னுள்ளே என்னுள்ளே – படம் :வள்ளி – பாடியவர் : சுவர்ணலதா – இசை :இளையராஜா
29. சின்னமணிக் குயிலே – படம் :அம்மன் கோயில் கிழக்காலே – பாடியவர் : SPB – இசை :இளையராஜா
30. அரிதாரம் பூசிக்கொள்ள ஆசை – படம் :அவதாரம் – பாடியவர் : இளையராஜா + s.ஜானகி – இசை :இளையராஜா
31. வீணைக்கு வீணை குஞ்சு – படம் :எல்லாமே ராசா தான் – பாடியவர் : இளையராஜா – இசை :இளையராஜா
32. மலை ஓரம் மாங்குருவி – படம் :எங்க தம்பி – பாடியவர்கள் : மனோ + மின்மினி – இசை :இளையராஜா
33. கண்மணி மனமணி – படம் :சின்ன வாத்தியார் – பாடியவர்கள் : மனோ + சித்ரா – இசை :இளையராஜா
34. பிரிய சகி பிரிய சகி – படம் :கோபுரவாசலிலே – பாடியவர்கள் : மனோ + சித்ரா – இசை :இளையராஜா
35. என்னைத் தாலாட்ட வருவாளா – படம் :காதலுக்கு மரியாதை – பாடியவர்கள் : ஹரிகரன் + பவதாரணி – இசை :இளையராஜா
36. பூங் கொடி தான் பூத்ததம்மா – படம் :இதயம் – பாடியவர்கள் : SPB – இசை :இளையராஜா
37. பூங்காற்றே இனி போதும் – படம் :படிச்ச புள்ளே – பாடியவர்கள் : இளையராஜா – இசை :இளையராஜா
38. ராசாத்தி மனசிலே – படம் :ராசாவே உன்ன நம்பி – பாடியவர்கள் : மனோ + P.சுசீலா – இசை :இளையராஜா
39. ஆகாயத் தாமரை – படம் :நாடோடி பாட்டுக்காரன் – பாடியவர் : இளையராஜா + S .ஜானகி – இசை :இளையராஜா
40. நடந்தால் இரண்டடி – படம் :செம்பருத்தி – பாடியவர்கள் : SPB – இசை :இளையராஜா
41. வெண்ணிலவுக்கு வானத்தை – படம் :தாலாட்டுப் பாட வா – பாடியவர்கள் : அருண்மொழி + S.ஜானகி – இசை :இளையராஜா
42. இந்த மாமனோட மனசு – படம் :உத்தமராசா – பாடியவர்கள் : SPB + S.ஜானகி – இசை :இளையராஜா
43. மலரே தென்றல் பாடும் – படம் :வீட்லே விசேசங்க – பாடியவர்கள் : K.J.ஏசுதாஸ் + எஸ்.ஜானகி – இசை :இளையராஜா
44. மாலைக்கருக்கலில் – படம் :எங்க ஊரு காவக்காரன் – பாடியவர்கள் : K.J.ஏசுதாஸ் + எஸ்.ஜானகி – இசை :இளையராஜா
45. உன் குற்றமா என் குற்றமா – படம் :அழகி – பாடியவர்கள் : இளையராஜா – இசை :இளையராஜா
46. ஒளியிலே தெரிவது – படம் :அழகி – பாடியவர்கள் : கார்த்தி + பவதாரணி – இசை :இளையராஜா
47. தினக்கு தினக்கு – படம் :உறுதிமொழி – பாடியவர் : S.ஜானகி – இசை :இளையராஜா
48. ஒரு முத்துக் கிளி – படம் :தாயம்மா – பாடியவர்கள் : அருண்மொழி + மனோ + SNசுரேந்தர் – இசை :இளையராஜா
49. எங்கே செல்லும் பாதை – படம் :சேது – பாடியவர் : இளையராஜா – இசை :இளையராஜா
50. ஆல மரம் வேலமரம் – படம் :செந்தூரம் – பாடியவர்கள் :உன்னிகிருஷ்ணன் + பவதாரிணி – இசை :இளையராஜா
51. ஒரு காதல் தேவதை – படம் :சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு – பாடியவர்கள் : SPB + S.ஜானகி – இசை :இளையராஜா
52. ரோட்டோரம் பாடு சத்தம் – படம் :என் மனவானிலே – பாடியவர் : K.J.ஏசுதாஸ் – இசை :இளையராஜா
53. கண்மணி கண்மணி – படம் :சின்ன வாத்தியார் – பாடியவர்கள் : மனோ+ சித்ரா – இசை :இளையராஜா
54. சின்ன சின்ன முத்து நீரிலே – படம் :நினைக்கத்தெரிந்த மனமே – பாடியவர்கள் : K.J.ஏசுதாஸ் + எஸ்.ஜானகி – இசை :இளையராஜா
55. துளியோ துளி முத்துத் துளி – படம் :காத்திருக்க நேரமில்லை – பாடியவர் : சித்ரா – இசை :இளையராஜா
56. ஆயிரம் கோடி – படம் :கரிசல்காட்டு பூவே – பாடியவர் : ஹரிகரன் – இசை :இளையராஜா
57. சிறு சிறு சிறகுகளில் – படம் :கொஞ்சிப் பேசலாம் – பாடியவர் : உன்னிகிருஷ்ணன் – இசை :இளையராஜா
58. கஜிராகோ கனவிலே – படம் :ஒரு நாள் ஒரு கனவு – பாடியவர் : ஹரிகரன் + பவதாரிணி – இசை :இளையராஜா
59. வானத்திலிருந்து குதிச்சு – படம் :பூந்தோட்டம் – பாடியவர் : இளையராஜா – இசை :இளையராஜா
60. மஞ்சள் போடி தேய்க்கையிலே – படம் :செம்பகமே செம்பகமே – பாடியவர் : SPB – இசை :இளையராஜா
61. இரு கண்கள் போதாது – படம் :தர்மா – பாடியவர் : SPB – இசை :இளையராஜா
62. ஒரு உறவு அழைத்தது – படம் :கிருஷ்ணன் வந்தான் – பாடியவர் : மனோ + P.சுசீலா – இசை :இளையராஜா
63. சின்ன சின்ன ரோசா பூவே – படம் :பூவிழி வாசலிலே – பாடியவர் : K.J.ஏசுதாஸ் – இசை :இளையராஜா
64. சின்ன மணி கோவிலிலே – படம் :வண்ண வண்ண பூக்கள் – பாடியவர் : K.J.ஏசுதாஸ் – இசை :இளையராஜா
65. கண்ணே இன்று கல்யாண கதை – படம் :ஆணழகன் – பாடியவர்கள் : மனோ + சுவர்ணலதா – இசை :இளையராஜா
66. எனது ராகம் மௌனராகம் – படம் :பொண்டாட்டி தேவை – பாடியவர் :அருண்மொழி + S.ஜானகி – இசை :இளையராஜா
67. ஆலாபனை செய்யும் – படம் :பொன்மேகலை – பாடியவர் : சாதனா சர்க்கம் + பவதாரிணி – இசை :இளையராஜா
68. ரோஜா பூந்தோட்டம் – படம் :கண்ணுக்குள் நிலவு – பாடியவர் : உன்னிகிருஷ்ணன் – இசை :இளையராஜா
69. ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு – படம் :குரு சிஷ்யன் – பாடியவர்கள் : மனோ + சித்ரா – இசை :இளையராஜா

தற்போதைய நிலையில் ராஜாவுக்குப் பின் வந்தவர்களின் இசை என்பது தொழில் நுட்பங்களை ஊதி பெருக்குவது அல்லது தாளத்தை போட்டு முழக்குவது என்று ஒருவித “கூலி கலையாக” வளர்க்கப்படுகிறது.மக்களின் ரசனையை கெடுக்கும் படைப்பாற்றல் வற்றிய ” இசையில்லாத இசையால் ” மக்கள் ரசனை மழுங்கடிக்கப்பட்டுவருகிறது.