தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 3 ] : T.சௌந்தர்
Tagged with: சௌந்தர் கல்வி T .சௌந்தர்
நாடகங்களில் தியாகராஜ பாகவதருக்கு மட்டுமல்ல வேறு சில கலைஞர்களுக்கும் பின்பாட்டு பாடியவர் ஜி.ராமநாதன். கனத்த குரல் என்றாலும் இதமாமகப் பாடக்கூடியவர். நாடகங்களில் இருந்தே தியாகராஜபாகவதரின் நண்பரானவர்.அதற்க்கு முன் அண்ணன் சுந்தர பாகவதரின் ஹரிகதா காலட்சேபங்களில் பின்பாடு பாடி வந்தவர்.அந்தத் தொடர்பால் நாடகத்திற்கும் , பின் சினிமாவுக்கு வந்து சேர்ந்த மேதை தான் ஜி.ராமநாதன்.
தமிழ் சினிமாவில் கனமான ராகங்களில் , சாஸ்திரீய இசை கெடாமல் மெல்லிசைப் பாங்கான பாடல்களை அமைத்து மக்களை பேரின்ப வெள்ளத்தில் மூழ்கடித்தவர்.கர்நாடக இசை வித்துவான்களின் வாய்களில் நுளையாத ராகங்கள் என்று அழைக்கப்பட்ட ராகங்களில் பாடல்களை அமைத்து பாமரர்களையும் அந்த பாடல்களை , அந்த ராகங்களைப் பாட வைத்த
வர் இசைமேதை ஜி.ராமநாதன் .
” சங்கீத விஷயம் ” என்ற தலைப்பில் பாரதி மிக நொந்து கூறுவான்..
” நானும் பிறந்தது முதல் இன்றுவரை பார்த்துக் கொண்டே வருகிறேன். பாட்டுக் கச்சேரி தொடங்குகிறது. வித்வான் ‘வாதாபி கணபதிம்’ என்று ஆரம்பஞ் செய்கிறார். ‘ராமநீ ஸமான மெவரு’, ‘மரியாத காதுரா’, ‘வரமுலொஸகி’ ஐயையோ, ஐயையோ, ஒரே கதை.
எந்த ஜில்லாவுக்குப் போ, எந்த கிராமத்திற்குப் போ, எந்த ‘வித்வான்’ வந்தாலும், இதே கதைதான். தமிழ்நாட்டு ஜனங்களுக்கு இரும்புக் காதாக இருப்பதால், திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்ப ஏழெட்டு பாட்டுக்களை வருஷக் கணக்காகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.தோற் காது உள்ள தேசங்களிலே இந்தத் துன்பத்தைப் பொறுத்துக் கொண்டிருக்கமாட்டார்கள்.”
சங்கீத வித்துவ சிரோன்மணிகள குறிப்பிட்ட சில ராகங்களைப் பாடி மக்களை அலுத்துப் போக வைத்த காலத்தில் சிரோன்மணிகளே அறியாத , அவர்கள் பாட விரும்பாத சாருகேசி என்ற ராகத்தை பாமர மக்களிடமும் கொண்டு சேர்த்த மாமேதை ஜி.ராமநாதன்.ஹரிதாஸ் என்ற படத்தில் ஜி.ராமநாதன் இசையமைத்து தியாகராஜ பாகவதர் பாடிய மன்மத லீலையை வென்றார் உண்டோ என்ற பாடல் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.இந்தப் பாடலின் புகழே சாருகேசி என்ற ராகத்தை சங்கீத வித்துவான்களைப் பாட வைத்தது.இந்த பாடலால் ஈர்க்கப்பட்ட செம்மங்குடி சீனிவாஸ் ஐயர் , ஜி.ராமநாதனைஅவரது வீடு சென்று பாராட்டியது வரலாறு. ” கிருபைய பாலையா சௌரே ” என்ற தியாகைய்யரின் சாருகேசி ராகப் பாடல் தூசி தட்டிப் பாடப்பட்டது. ” கிருபைய பாலையா சௌரே ” என்ற சாருகேசி ராகக் கீர்த்தனையை செம்மங்குடி சீனிவாஸ் ஐயரே பாடி புகழ் பெற வைத்தார்.
ராகங்களில் அற்ப்புதமான பாடல்களைத் தந்த ஜி.ராமநாதன் கர்நாடக இசையை முறையாகப் பயின்றவர் அல்ல. தனது கேள்வி ஞானத்தாலேயே இந்த சாதனையை நிலை நாட்டினார்.இசை இலக்கணங்களை அடிப்படையாக வைத்து கொண்டு பாடலகளை உருவாக்கிய அதே வேளை , அதனையும் தாண்டி தனது படைப்புக்களை மக்களின் ரசனைக்குரியதாக்கியும் கொடுத்தார்.
இந்தப் பண்பை கவிதை பற்றி தாகூர் கருத்துடன் ஒப்பு நோக்கலாம்.
” இலக்கண சூத்திரங்களை எண்ணிக் கொண்டிருந்தால் கவிதை இனபமளிக்காது.” – தாகூர்
எம்.எஸ்., ஜி.என்.பாலசுப்ரமணியம்,’சகுந்தலை’
நவீன கலைவடிவமாக கிடைத்த சினிமாவை சனாதனிகள் தீண்டத்தகாததாகவே கருதி வந்தனர்.புகழ் பெற்ற சங்கீத வித்துவான் ஜி.என்.பாலசுப்ரமணியம் சினிமாவில் நடித்த போது “பெரிய “கர்னாடக இசை வித்துவான்கள் கடுமையாக எதிர்த்ததுடன் , அவரது கச்சேரிக்கு பக்கவாத்தியம் வாசிக்கவும் மறுத்தனர்.பின்னர் எதிர்ப்புக்களையும் மீறி GNP படங்களில் நடித்தார்.
அதே போல் செம்மங்குடி சீனிவாசய்யர் சினிமாவில் நடிக்கும் தனது ஆசையை தந்தையாரிடம் கூறிய போது ” நீ சினிமாவில் நடித்தால் கிணற்றில் விழுந்து சாவேன்” என தந்தை சொன்னதால் சினிமா ஆசையைக் கைவிட நேர்ந்தது.
1990 களில் மெல்லிசை மன்னர் எம்.விஸ்வனாதனின் வாத்திய இசையுடன் இணைந்து , புகழ் பெற்ற கர்னாடக இசை கலைஞர் மஹாராஜபுரம் சந்தானம் நடாத்திய ” சங்கமம்” இசை நிகழ்ச்சிக்கு ‘ கர்னாடக இசையின் உரிமையாளர்’ என்று கருதப்பட்ட சங்கீத விமர்சகர் சுப்புடு பார்வையாளராகக் கூட வர மறுத்தார்.
இவை ஒரு ஒரு புறமிருக்க தமிழ் திரைப்படத்தால் விளைந்த ஒரே ஒரு நன்மைஎன்பதே அதன் இசை தான்.இசையில் தமிழருக்கு இருந்த நீண்ட மரபும் , அதன் அறுபடாத தொடர்ச்சியும் மற்றகலைகளை விட சிறப்பான இடத்தை இசை பிடித்துக் கொள்ள உதவியது. இசையில் பல புதிய முயற்ச்சிகளுக்கும் வழி ஏற்ப்பட்டது.
ஆனால் சினிமாப்பாடல்களை ஒலிபரப்புவதை இந்திய வானொலி நிலையங்கள் இருட்டடிப்புச் செய்தன.இந்த அருமையான சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட இலங்கை வானொலி பல கோடிமக்களைக் கவர்ந்தது.பாடகர்களும் தமது பாடலகளை வானொலியில் கேட்டுஆனந்தித்தனர்.பின்னாளில் உருவான பல பாடகர்கள் இலங்கை வானொலியை கேட்டு வளர்ந்தவர்களே. 1965 இலிருந்து தான் இந்திய வானொலிகள் திரைப்படப்பாடல்களை ஒலிபரப்ப தொடங்கின.ஆனால் மக்களில் அதிகப் பெரும்பான்மையினர் ரசிக்கும் மெல்லிசையை ஒடுக்கவும் , மக்களில் அற்ப தொகையளவில் ரசிக்கும் கர்னாடக இசைக்கு தேவைக்கு அதிகமான சலுகைகளையும் ,விளம்பரங்களையும் பார்ப்பனீய ஆதிக்க அரசுகளால் கொடுக்கப்பட்டன. இந்த சலுகைகளை பெற்றுக்கொண்டு மனம் போன போக்கில் குரல் வளமில்லாதவர்களும் பாடி தொலைத்தனர். இவ்விதம் நல்ல குரல் வளமற்ற பாடகர்கள் நமது காலத்தில் மட்டுமல்ல தன் காலத்திலும் இருந்ததை மேற்ப்படி கட்டுரையில் பதிவு செய்திருக்கின்றான் பாரதி!.
” இங்கே ஓரிரண்டு பேரைத் தவிர மற்றப்படி பொதுவாக வித்வான்களுக் கெல்லாம் தொண்டை சீர்கெட்டிருப்பதைப் பார்க்கும்போது, எனக்கு மிகவும் வியப்புண்டாயிற்று. ஒன்று போல எல்லோருக்கும் இப்படித் தொண்டை வலிமை குறைந்தும் நயங் குறைந்தும் இருப்பதன் காரணமென்ன?இதைப் பற்றிச் சில வித்வான்களிடம் கேட்டேன்.” – பாரதி
அவர்களை யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற அகங்காரம் தான் காரணமாக இருக்கமுடியும்.இந்த சேஸ்டைகளுக்கு நாடக மேடைப் பாடல்களும் , பின் வந்த சினிமா பாடல்களும் முடிவு கட்டின. நாடக . சினிமா பாடல்களை மக்கள் கொண்டாடினார்கள். எஸ்.ஜி .கிட்டப்பா, எம்.கே.தியாகராஜ பாகவதர்.பி.யூ.சின்னப்பா, கே.பி.சுந்தராம்பாள் ,டி.ஆர்.மகாலிங்கம் மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு பெற்றார்கள்.
இசை வகைகளிலும் ஏற்றத்தாழ்வு காட்டிய சனாதனிகள் வாத்தியங்களிலும் அதனை கடைப்பிடித்தார்கள்.மிருதங்கம் “வாசிப்பது ” , பறை ” அடிப்பது ” [ வாசிப்பதல்ல ] போன்ற நடைமுறைகளைக் குறிப்பிடலாம். நாடக மேடைகளில் பயன்படுத்தப்பட்ட ஹார்மோனியம் மீது அவர்கள காட்டிய விரோதம் அதன் உச்சம் எனலாம்.அகில இந்திய வானொலிகளில் இன்று வரை ஹார்மோனிய இசைக்கு என தனியே ஒரு கச்சேரி நிகழ்ச்சி ஒதுக்குவது கிடையாது.தான் வாழ்ந்த காலத்தை மீறிய புதுமையான பல கருத்துக்களை கூறிய பாரதியும் சனாதனிகளின் குரலை ஒலிப்பது போல ஹார்மோனியத்தை இகழ்ந்து பின்வருமாறு எழுதுகிறான்.
“..ஹார்மோனியம் தெரு முழுவதையும் ஹிம்சைப் படுத்திவிடுகிறது. ஒரு தேசத்தாரின் செவியைக் கெடுத்து ஸங்கீத உணர்ச்சி குறையும்படி செய்ய வேண்டுமானால், கிராமம் தோறும் ‘நாலைந்து ஹார்மோனியம்’ பரவும்படி செய்தால் போதும்.” – பாரதி
இவ்வாறு ஒதுக்கப்பட்ட , இழித்து பழிக்கப்பட்ட ஹார்மோனியத்தால் நாடக இசை வளம் பெற்றது என்பது தான் நடைமுறை உண்மையாக இருந்தது. கேவலமாகப் பேசப்பட்ட இந்த வாத்தியத்தில் பாண்டித்தியம் பெற்றவர்தான் இசைமேதை ஜி.ராமநாதன்.மிகவும் வேகமான தனது வாசிப்பால் ” பாஸ்ட் பிங்கர் ” [ Fast Finger ] ராமநாதன் என புகழ் பெற்றார். ஹார்மோனியத்தில் நளினமாடிய அவரது விரல்களிலிருந்து பிறந்தவை தான் அற்ப்புதமான அவரது பாடல்கள். அவர் மட்டுமல்ல திரை இசைத் திலகம் கே.வீ. மஹா தேவன் , மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி , இசைஞானிஇளையராஜா போன்ற பல இசைமேதைகள் உருவாக்கிய பாடல்களும் ஹார்மோனியத்தின் உதவியுடன் பிறந்தவையே!
நாடகங்களில் ஒலித்த பல ராகங்கள் சினிமாவிலும் ஒலித்தன. இன்றும் மிகவும் பரவலாக பயன்படும் ராகங்களில் மிக முக்கியமாக ஆபேரி என்கிற ராகம் இருந்து வருவதைக் குறிப்பிடலாம். இந்த ராகம் நாடக மேடையால் மிகவும் புகழ் அடைந்தது. ஜனரஞ்சகமாகப் பயன் படுத்தப்பட்ட ராகங்களில் வசீகர ராகமாகும்.
இந்த ராகத்தில் சங்கரதாஸ் சுவாமிகள் வெவ்வேறு விதமான சூழ் நிலைகளுக்கும் பொருத்தமாக பல பாடல்களை அமைத்து முன்மாதிரியாகத் திகழ்ந்தார்.பலராமன் பாடுவதாக அவர் அமைத்த ஒரு பாடல்
” பதி போற்றும் துதி ஏற்றும்
பலராமன் நானே “
இந்த பாடலை தியாகைய்யரின் மிகவும் புகழ் பெற்ற செவ்விசைப்பாடலான
” நகுமோ மோ கனலேனி
நாதாலி தெலிசி “
என்ற ஆபேரி ராக மெட்டை தழுவி அமைத்தார்.அந்த வர்ண மெட்டை அப்படியே பயன்படுத்தினார்.அதே ராகத்தில் மீண்டும் , வேறு ஒரு கோணத்தில் கோவலன் நாடகத்தில் கண்ணகி கோவலனுக்கு எழுதும் உருக்கமான கடிதப் பாடலாக கீழ் உள்ள பாடலை அமைத்தார்.
“மதியிலுயர் வணிகர்குல மதனில் வரு துணைவரடி
மலர்தொழுது கண்ணகை யெனும்
மாதெழுது மோலைமொழி யாதெனின்மனத்தினிய
வாசமிகு மோத விரிவாய்
அதிகமயல் கணிகைதர அவளுடைய சுகமடைய
அனுதினமு மரியகலவி
ஆசைபெற நாடியவள் வீடுகுடி யானபடி
யாலெனது தேக மெலிவாய்
கொதிசுரமு மிகவடைய வலிகுறுதி யுமதுடைய
குளிர்வதன மலரி னழகின்
கோலமது காணும்வரை தானநிலை யாகுமுயிர்
கூறுவது வோபி சகிலை
ததியதனில் வரவுமன மிசியவிலை யெனிலெனுடல்
தனையுமினி அறிய வசமோ
சற்றுகிருபா நோக்கம் வைத்துவர லிங்கனெழு
தத்துணிவு பட்ட திதுவே..”
கேட்பவர்களை உருக வைக்கும் பாடல்.
மீண்டும் சத்யவான் சாவித்திரி நாடகத்தில் ஒரு காட்சியில் காட்டில் சிங்கத்திடம் இருந்து சாவித்திரியை காப்பாற்றிய பின் , களைப்பில் உறங்கும் சத்தியவானை சாவித்திரி எழுப்பும் காட்சியில் பாடப்படும் ஒரு பாடல்..
சத்தியவான் : ஏனோ என்னை எழுப்பலானை மடமானே
எனக்கதனை உரைத்திடுவாய்
இசைந்து கேட்பேன் நானே
சாவித்திரி : சிங்கத்தால் நான் அடைந்த துன்பம் தீர்த்ததாலே
செய்த நன்றி எண்ணி வந்தேன் தேர்ந்த அன்பினாலே
சத்தியவான் : எந்த ஊரோ இருபது ஏது பேர் யார் தந்தை
என்றெனக்கு நீ உரைத்தால் இன்பம் கொள்ளும் சிந்தை
இன்பம் கொள்ளும் சிந்தை
சாவித்திரி : அழகிய மதுராபுரி அஸ்வபதி புத்திரி
அக்கம் பக்கம் பேர்கள் என்னை
அழைக்கும் பெயர் சாவித்திரி
இனிமையாகப் பாடப்படும் இந்தப்பாடல் மேல் சொன்ன ராகத்திலேயே [ஆபேரி ] அமைக்கப்பட்டாலும் , அதில் நாட்டுப்புற இசையின் தாக்கம் துல்லியமாகத் தெரியும்.நாட்டுப்புற இசையும் , செவ்வியல் இசையும் இணைந்த ஒரு அற்ப்புதப் பாடலாக இந்தப் பாடலை சுவாமிகள் அமைத்து பின் வந்த சினிமா இசையமைப்பாளர்களுக்கு வழி காட்டியாக இருந்தார் எனலாம்.
மேல் சொன்ன பாடலை ஏ.பி.நாகராஜன் தான் இயக்கிய நவராத்திரி [1963 ] என்ற படத்தில் பயன்படுத்தி கொண்டார்.அந்த படத்தின் இசையமைப்பாளர் கே.வீ.மகாதேவன் ,ஏ.பி.நாகராஜன் போன்றோர் பாய்ஸ் கம்பனி நாடக மேடை பரம்பரையிலிருந்து வந்தவர்கள்.படத்தில் இந்தப் பாடலை நகைச்சுவை கலந்த பாடலாக அமைத்தார்கள். ஆனால் நாடக மேடையில் அவ்வாறு பாடப்படுவதல்ல.
தமிழ் சினிமாவின் பழம் பெரும் இசையமைப்பாளர்கள் பலரும் சங்கரதாஸ் சுவாமிகளால் ஆரம்பித்து வைக்கப்பட்ட பாய்ஸ் கம்பனி [ Boys Company ] பரம்பரையில் இருந்து வந்தவர்கள் என்பதால் அது அவர்களுக்கு இயல்பாயும் அமைந்தது.
ஜி.ராமநாதன் , எஸ்.எம்.சுப்பைய்யா நாயுடு , எஸ்.வீ.வெங்கட்ராமன்,சி.ஆர்.சுப்பராமன் ,ஆர் .சுதர்சனம் , கே.வீ மகாதேவன் , சி .என்.பாண்டுரங்கன் ,எஸ்.என்.பாலசுப்ரமணியன் ,பி.எஸ்.திவாகர்,எம்.எஸ்.விஸ்வநாதன் போன்ற இசையமைப்பாளர்களை முக்கியமாகக் குறிப்பிடலாம்.
நாடகமேடையில் புகழ் பெற்ற இந்த ஆபேரி ராகம் நாட்டுப்புற இசை வேர்களில் இருந்து கிளர்த்த ராகங்களில் முக்கியமான ராகமாகும்.பழமையும் ,பெருமையும் வாய்ந்த ராகங்களில் முதன்மையான ராகமும் கூட.ராஜ கம்பீரத்தையும் ,வசீகரத்தையும் மனத்தில் உத்வேகத்தையும், உருக்கத்தையும் , இனிமையையும் ஒன்று சேர குழைத்துத் தருவது இந்த ராகத்தின் இயல்பு.
நாதஸ்வரத்தில் மிக விரிவாக வாசிக்கக்கூடிய இந்த ராகம் நம்மை பரவச நிலைக்கு இட்டுச் செல்லும். ஆபேரி ராகம் எடுப்பிலேயே நம் மனதை பிணிக்கும் வண்ணம் பாடல்களை அறிமுகம் செய்யும்ஆற்றல் கொண்டது. இயற்க்கையின் பேரழிலை நாள் முழுவதும் ரசிப்பது போல , நாள் முழுவதும் கேட்கத் தூண்டும் இந்த ராகம் உள்ளத்தில் மிக இலகுவாக இருக்கை போட்டு அமர்ந்து விடக் கூடிய வல்லமை கொண்டது.
தமிழ் செவ்வியல் இசையில் 22 வது மேளகர்த்தா ராகமான கரகரப்பிரியா ராகத்தின் சேய் ராகமாகும்.உணர்வு நிலைகளின் உன்னதங்களை எல்லாம் வெளிக்கொணரக் கூடிய ராகங்களில் மிக முக்கியமானதாக இருப்பதால் சினிமா இசையமைப்பாளர்கள் மிக நேர்த்தியாகப் பல விதமான பாடல்களைத் தந்து மக்களை பரவசப்படுத்தியிருக்கிறார்கள்.இந்தியா எங்கும் ஒலிக்கின்ற ராகங்களில் இதுவும் ஒன்று.
ஹிந்துதானி இசையில் இதை பீம்பிளாசி என்று அழைக்கின்றனர்.கர்நாடகதேவகாந்தாரி ,தேவகாந்தாரி என தமிழிலும் வேறு சில பெயர்களாலும் அழைக்கப்படுவதால் இந்த ராகம் குறித்து சில மயக்கங்களும் இருந்து வருகின்றன.
சினிமாவில் இந்த ராகத்தில் பலவிதமான பாடல்களை [என்னுடைய கேள்வி ஞானத்தில் ] கேட்கும் போது ஒரே ராகமாக இருப்பதை அவதானித்திருக்கின்றேன்.ஆனால் விஷயம் அறிந்தவர்கள என அறியப்பட்ட சிலரிடம் சில பாடல் குறித்து என்னுடைய சந்தேகங்களை கேட்ட போது அவர்கள் ,அது பீம்பிளாஸ் அல்ல , ஆபேரி என்றும் , இல்லை , இது கர்னாடகதேவகாந்தாரி என்றும் குழப்பியிருக்கின்றார்கள்.அது அவர்கள் தவறும் அல்ல என்பது மட்டுமல்ல. இது முறையாக கர்நாடக இசை தெரிந்த சிலருக்கும் தெரிந்திருக்கவில்லை என்பதும் புரிந்தது.
இசைக்கலைஞர்களின் செவ்விகளாலும் ,என்னுடைய அவதானிப்புகளாலும், தேடுதலாலும் இவை எல்லாம் ஒரே ராகம் என் கண்டு கொண்டதில் மகிழ்ச்சி.
இந்த குழப்பங்களுக்கு முக்கிய காரணம் ஹிந்துஸ்தானி இசையாகவும் இருக்கலாம். தமிழ் ராகங்களை கடன் வாங்கும் வட இந்திய சங்கீத நூலாசிரியர்கள் அதற்க்கு தாமே ஒரு பெயர் வைத்து அழைப்பதும் முக்கிய காரணமாகும். எல்லாம் வட மொழியிலிருந்து தான் வந்தது என்று சொல்ல விரும்புகின்ற , அது போன்ற கருத்தை ஒப்பிக்கின்ற பார்ப்பன இசைக்கலைஞர்களும் இதுபோன்ற கருத்துக்களுக்கு வலு சேர்த்து வருகிறார்கள்.
ஆபேரி போன்றே இன்னும் பல ராகங்களும் இது போன்ற குழப்பங்களுக்கு உள்ளாகியுள்ளன.இதைப் போன்றே சுத்த
சாவேரி என்கிற அற்ப்புதமான தமிழ் ராகமும் வடக்கே துர்க்கா என்ற பெயர் பெற்று வருகிறது.
தமிழ் ராகங்களை ஆராய்ந்த ஆபிரகாம் பண்டிதர் , தனது நூலில் பின்வருமாறு கூறும் கருத்து கவனத்திர்க்குரியது.
” தென்னாட்டில் பிரதி மத்திமத்துடன் பாடப்படும் கல்யாணி ராகம் வட நாட்டுக்குப் போய் கிரமம் மீறி பிரதி மத்திமத்தோடு வேறு இரண்டு மத்திமங்களையும் , அப்படியே காந்தார நிசாதங்களையும் இரண்டு இரண்டு சுரங்களைச் சேர்த்துக் கொண்டு தென்னாட்டுக்கு வர, தென்னாட்டில் உள்ளோர் அதை மிகவும் அழகாக இருக்கிறது என்று பழகுகிறார்கள்.இப்படியே ஆனந்த பைரவி , காம்போதி,தோடி முதலிய இராகங்களும் வர வர கலப்புற்றதாய் மார்க்க முறையைஇழந்து , முற்றிலும் தேசிகமாகி கர்னாடக சங்கீதத்தின் உயர்வைக் கெடுக்கும் நிலைக்கு வந்துள்ளன.” – ஆப்ரகாம் பண்டிதர்
பல நூற்றாண்டுகளாக வேற்று மொழியினர் ஆட்சிக்கு உட்பட்ட தமிழ் இசை தன் வளர்ச்சியை இழந்தது. இது குறித்து இந்திய கலைகளை உலகத்திற்கு அறிமுகம் செய்த கலாமேதை ஆனந்தக் குமாரசுவாமி அவர்கள் பின்வருமாறு எழுகின்றார்.
“The neglect of centuries, as in so many analogous cases, has proved less disastrous than the renewed patronage of a few decades.” – Anandha Kumaraswamy
“மற்ற வித்தைகளைப்பற்றிச் சொல்வது போலவே அநேக நூற்றாண்டுகளாய்ச் சங்கீதத்தைக் கைவிட்டதால் அதற்கு உண்டான இடையூறைவிட சென்ற கொஞ்ச வருஷங்களாய் அது அநேகரால் ஆதரிக்கப்பட்டதினால் உண்டான இடையூறு அதிகம்.” – ஆனந்தகுமாரசாமி
கலாமேதை ஆனந்தக் குமாரசுவாமி அவர்களின் கூற்றை மேற்கோள் காட்டி ஆப்ரஹாம் பண்டிதர் மிக முக்கிய குறிப்பொன்றையும் பின்வருமாறு எழுதுகின்றார்.
” இவர் இந்தியாவின் பல இடங்களுக்குச் சுற்றுப் பிரயாணம் செய்கையில் இந்தியாவின் சிற்ப வேலைகளைப் பற்றியும் சங்கீதத்தைப் பற்றியும் விசாரித்துக் கொண்டிருந்ததை நான் நேரில் அறிவேன். சங்கராபரண இராகத்தில் வழங்கிவரும் ரிஷப தைவதங்கள் கூடுதலாய் வருகிறதைப் பலரிடத்திலும் விசாரித்தும் சரியான பதில் கிடைக்காமையினால் என் வீட்டிற்கு வந்து நேரில் விசாரித்தார்கள். ரிஷபதைவதங்கள் கூடுதலாய் வருகிறதென்று சொல்லக் கேட்ட மாத்திரத்தில் மிகுந்த சந்தோஷமடைந்தார்கள்.” – ஆப்ரகாம் பண்டிதர்
காலத்திக்கேற்ப நடைபெறும் மாற்றங்கள் மூலம் கலை வடிவங்களும் தம்மை புனருத்தாரணம் செய்யும் போது புது வடிவங்கள் பெற்றும் ,புது பெயர்கள் தாங்கியும் வருவதுண்டு. தமிழரான முத்துச்சுவாமி தீட்சிதர் சில ராகங்களுக்கும் தனது இஸ்டப்படி பெயர் வைத்து அழைத்திருக்கின்றார்.அவற்றை அவரது சீடர்கள் ” முத்துச்சுவாமி தீட்சிதர் பாரம்பரியம் ” என்ற அடை மொழியுடன் அழைப்பது வழக்கம்.அவர் ஆபேரி ராகத்திற்கு இட்ட பெயர் தேவகாந்தாரி என்பதாகும்.
ஆனாலும் இந்த ராகங்களின் மகோன்ன

தத்தை உணர்ந்த இசையமைப்பாளர்கள் இந்த பிரச்சனைக்குள் நுழையாமல் தமது காரியத்தில் மட்டும் கண்ணாயிருந்தார்கள்.
அந்தக்கால சினிமா இசையமைப்பாளர்கள் இசை இலக்கணங்களை நன்கு தெரிந்து கொண்டும் ,தேவைக்குஏற்ப இலக்கண வரம்புகளை எல்லாம் கடந்தும் நல்ல இசை தந்தார்கள்.
இசையின் இலக்கணங்களிலும் , தாள கணக்குகளிலும் மக்களை அல்லலுற வைக்காமல், இந்த செப்படி வித்தைகளில் மக்களை சிக்க வைக்காமல் இசையின் சிறப்பை புலப்படுத்தி ,அதன் இனிமையின் ஆற்றலை வெளிப்படுத்தினார்கள். இந்தக் கோளாறைத் தான் சுப்ரமணிய பாரதி கணக்கு , பிணக்கு , ஆமணக்கு என்று கிண்டல் செய்தாரோ ..?.
நமது இசையின் உயிர் நாடியே ராகங்கள் பாடுவதே என்பதை மறந்த அல்லது அந்த ராகங்களை இனிமையாகப் பாட முடியாதவர்கள் , குறிப்பாக இலங்கையிலும் பல வித்துவான்கள் இந்தக் கணக்கில் தான் இசை இருக்கிறது என்று விரல்களை முறிப்பது வேடிக்கையானது.
ராக இசையின் நுண் கூறுகளை ,அதன் உள்ளார்ந்ந்த திரட்சியை ,அதன் ரகசியங்களை , அதன்மகிமையை , அதன்அழகுகளைத் திரட்டி நமக்கு அள்ளித் தந்திருப்பவர்கள் சினிமா இசையமைப்பாளர்களே! அவர்கள் இசையமைத்து தந்த பாடல்கள் ” மேலான இசை ” என்று போற்றப்படும் கர்நாடக இசைக்கு எந்த விதத்திலும் ,எள்ளளவும் குறைந்ததல்ல.பல சந்தர்ப்பங்களில் மிகச் சிறப்பான கமகங்களை ஒரு சில நிமிடங்களிலேயே காண்பிக்கும் ஆற்றலையும் சினிமா இசையமைப்பாளர்கள் வெளிப்படுத்தினார்கள்.
கணக்கு வழக்குகளில் நின்று மல்லுக்கட்டாமல் , பகட்டைக்காட்டி , பிரமிக்க வைத்து ” மக்களை ஓட “வைக்காமல் மன நிறைவான , இனிமையான இசையைத் தந்தார்கள்.
